Tuesday 9 February 2021

காதல் - திருமணம்

*சிரிக்க-சிந்திக்க*
ஒரு ஞானியிடம், அவரது சீடன் ஓரு கேள்வியை கேட்டான். அதாவது *“காதல் என்றால் என்ன? திருமணம் என்றால் என்ன? இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?* ”என்ற கேள்வியை உதிர்த்தான். இதற்கு பதில் அளித்த ஞானி, *நீ ரோஜா தோட்டத்துக்கு போ. அங்கு உனக்கு பிடித்த உயரமான ரோஜா செடி ஒன்றை பிடுங்கி வா. ஆனால் ஒரு நிபந்தனை., எக்காரணத்தை கொண்டும் நீ போன வழியில் திரும்பி வரக்கூடாது* என்றார்.

உடனே அந்த சீடன் அங்கிருந்து புறப்பட்டு ரோஜா தோட்டத்துக்கு சென்றான். சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி கேட்டார்,”எங்கே உயரமான ரோஜா செடி?”. அதற்கு சீடன் ,” குருவே, நான் தோட்டத்தில் கால் வைத்ததும் உயரமான ஒரு ரோஜா செடி என்னை கவர்ந்தது. ஆனால், அதை விட உயரமான ரோஜா செடி கிடைக்கும் என்று கருதி, தொடர்ந்து நடந்தேன். ஆனால் அதன் பின் அங்கிருந்தவை அனைத்தும் குட்டையான ரோஜா செடிகள்தான். போன வழியில் திரும்பி வரக்கூடாது என்று நீங்கள் நிபந்தனை கூறி இருப்பதால், முதலில் பார்த்த உயரமான ரோஜா செடியை பறித்துக்கொண்டு வர முடியாமல், வெறுங்கையுடன் வந்து விட்டேன்” என்றார்.

இதனை கேட்ட ஞானி, “அதோ அந்த சூரிய காந்தி தோட்டத்துக்கு சென்று, *ஒரு நல்ல, அழகான சூரியகாந்தி செடியை பிடுங்கி வா., ஆனால் ஒரு நிபந்தனை., ஒரு செடியை பிடுங்கிய பின், வேறு ஒரு செடியை பிடுங்க கூடாது* ”என்றார். சிறிது நேரம் கழித்து, ஒரு சூரிய காந்தி செடியுடன், சீடன் வந்து சேர்ந்தான். அப்போது, ஞானி கேட்டார்,-”இதுதான், அந்த தோட்டத்திலேயே அழகான செடியா?”என்று. உடனே அந்த சீடன், “ இதை விட அழகான செடிகள் எல்லாம் இருந்தன. ஆனால் இந்த முறை கோட்டை விட்டு விடக்கூடாது என்று கருதினேன். உங்கள் நிபந்தனை படி, ஒரு செடியை பிடுங்கிய பின், வேறொரு செடியை பிடுங்கக்கூடாது அல்லவா? எனவே, முதலில் அழகாக தோன்றிய ஒரு சூரிய காந்தி செடியை பிடுங்கிக்கொண்டு, திரும்பி பார்க்காமல் ஓடி வந்து விட்டேன்” என்றான்.

அப்போதுதான் ஞானி சொன்னார்: “ *இதுதான் திருமணம். முதலில் நீ ரோஜா தோட்டத்துக்கு சென்று வெறுங்கையாக திரும்பினாயே,, அதுதான் காதல்*. இப்போது புரிகிறதா *காதலுக்கும், திருமணத்துக்கும் உள்ள வித்தியாசம்* 

சீடன்: ஆம் புரிகிறது., புரிகிறது… என்று தலையாட்டினான்.

No comments:

Post a Comment