Monday 23 May 2022

நற்செயல் தள்ளேல்...

ராவணண் சொன்ன அறிவுரை
நற்செயலை உடனே செய்
தீய செயலை தள்ளிப்போடு.

ராமன் செலுத்திய அம்பில் காயம்பட்டு குற்றுயிராய்க் கிடந்த இராவணனிடம் உயிர் பிரியாமல் இருந்தது...!!

அப்போது ராமர் லட்சுமணனை நோக்கி, லட்சுமணா, ராவணன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன், ராஜதந்திரம் மிக்கவன். நமக்கு அவனுடைய அரசியல் அனுபவம் மிகவும் பயனுள்ளதாயிருக்கும்.நீ அவனிடம் போய் நான் கேட்டதாகக் கூறி அவனுடைய சிறந்த அறிவுரைகளைப் பெற்று வா" என்று கூறி அனுப்பினார்...!!

லட்சுமணன் அருகில் வந்ததும் இராவணன் சிரித்துக் கொண்டே வரவேற்றான்.

ராமன் தன்னிடத்தில் வைத்திருக்கும் மதிப்பு அறிந்து மகிழ்வுடன் தன் அறிவுரைகளைச் சொன்னான்.

லட்சுமணா, ஒரு காலத்தில் சர்வ வல்லமை படைத்தவனாக நான் இருந்தேன். நவக்கிரகங்களும், எமனும், இந்திரனும் 
கூட எனக்குக் கீழ்ப்படிந்தனர்.அப்போது 
நான் எண்ணியது என்ன தெரியுமா ?

நாட்டில் அனைவரும் சொர்க்கம் செல்ல வேண்டும். நரகம் யாருக்கும் இல்லையென உத்தரவு பிறப்பிக்க வேண்டும். 
ஒரு பறக்கும் ஏணி அனைவரையும் ஏற்றிச் செல்ல எமனைக் கொண்டே உருவாக்கப்பட வேண்டும் என்பதே.

ஆனால் இந்த நல்ல எண்ணத்தைச் செயல்படுத்தாமல் தள்ளிப் போட்டேன். 
அதன் விளைவாகவே இன்று நான் அவதிப்பட்டேன்.

சூர்ப்பனகை வந்து சீதாதேவி அழகின் சிகரம்.அவள் உனக்கு ஏற்றவள் என்று கூறியதும் உடனே அந்தச் செயலை தள்ளிப் போடாமல் புறப்பட்டேன்.

விளைவு அனைவருக்கும் நாசம்.
அதனால் நான் முக்கியமாகச் சொல்ல விரும்புவது என்னவென்றால்,

நல்ல செயலை உடனடியாக 
செய்து முடி. அது பலன் தரும். 

தீய செயலைத் தள்ளிப் போடு. அதைச் செய்யாமல் இருக்க வாய்ப்புண்டு" என்றான்.

ஸ்ரீராமஜயம்

மனதை கவர்ந்தது.

மாற்றம்

ஒரு நாள் கணவரும் மனைவியும் ஒன்றாக சேர்ந்து பொறித்த கோழி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர், அப்போது ஒரு பிச்சைக்காரன் அவர்களின் வீட்டுக் கதவை தட்டினார், அதற்கு கணவர் யார் கதவைத் தட்டுகிறார் என்றுக் கேட்டார்? மனைவி பிச்சைக்காரன் தட்டுகிறார் அவருக்கு கொஞ்சம் கறியைக் கொடுங்கள் என்றாள்..

அதற்கு கணவன்: வேண்டாம் வேண்டாம் அதெல்லாம் கொடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்..

அந்த பிச்சைக்காரனை, துரத்திவிடனர். பின்னர் நாட்கள் கடந்தன, அந்தக் கணவர் வறுமையில் சிக்குண்டு தவியாய் தவித்து அவரும் மனைவியையும் விவாகரத்து பெரும் நிலைமை ஆயுற்று, அந்தப் பெண் வேறொருவரை மறுமணம் செய்துக்கொண்டார், ஒரு நாள் தன் இரண்டாம் கணவருடன் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள், அவர்களருகில் பொறித்த கோழி இருந்தது, அந்நேரத்தில் கதவு தட்டப்பட்டது, அப்போது கணவர் மனைவியிடம் சொன்னார், பிச்சைக்காரன் வந்திருப்பதைப் போல தெரிகின்றது. இந்த முழுக் கோழியையும் அவருக்கு கொடுத்து விடு என்றார், அவருடைய மனைவி அங்கு சென்று அந்த கறியைக் கொடுத்துவிட்டு வரும் போது அழுதுக் கொண்டே வந்தாள்...

கணவன் கேட்டார்: ஏன் அழுகிறாய்? அதற்கு அவள் அந்த யாசகம் கேட்பவர் யாரென்று தெரியவில்லையா என்றாள்?

அதற்கு கணவன்: இல்லை, தெரியவில்லையே என்றார்..

அதற்கு அவள்:
அவர் தான் என்னுடைய
முதல் கணவர்..

அதற்கு அவர் கேட்டார்:
நான் யாரு என்று தெரிகிறதா?..

அதற்கு அவள்: இல்லை தெரியவில்லையே என்றாள்..

அதற்கு கணவன்: நான் தான் முதலில் யாசகம் கேட்டு வந்து உன் முதல் கணவரால் துரத்தியடிக்கபட்ட பிச்சைக்காரன் என்றார்..

நம் நிலைமை எப்படி
வேண்டுமானாலும் கடவுள் மாற்றலாம்..

யாருடைய நிலைமை எப்படி மாறும் என்று கடவுளை தவிர வேறு யாருக்கும் தெரியாது....

உங்களிடம் செல்வம் இருக்கிறது.!
என்று மற்றவர்களை கீழ்த்தரமாக பார்க்காதீர்கள்..

ஆடம்பர வாழ்வு நிலையற்றது....

Saturday 21 May 2022

இந்திராணியின் கிளி

இந்திரன் மனைவி இந்திராணி ஆசையாக ஒரு கிளி வளர்த்தார். ஒருநாள் அந்த கிளிக்கு நோய்வாய்பட்டது. உடனே இதை இந்திரனிடம் சென்று கிளி இறக்கும் நிலையில் உள்ளது அதைஎப்படியாவது காப்பாற்றுங்கள் கிளி இறந்தால் நானும் சேர்ந்து இறந்துவிடுவேன் என்றாள்,
          
உடனே இந்திரன், உயிர்களைபடைக்கும் பிரம்மனிடம்  சென்று இதைப்பற்றி கூறினார், அதற்கு பிரம்மன் உயிர்களை படைப்பது நான்தான் ஆனால் அதைக் காப்பது விஷ்னுவின் தொழில் எனவே அவரிடம் சென்று முறையிடலாம் வா நானும் உன்னுடன் வருகிறேன் என்று சென்றனர்,
       
பின்னர் விஷ்னுவிடம் நடந்ததை கூறினர், அதற்கு விஷ்னு, உயிர்களை எடுப்பது சிவனின் தொழில் எனவே அவரிடம் சென்று முறையிடலாம், வாருங்கள் நானும் உங்களுடன் வருகிறேன் என்று மூவரும் சென்றனர்,
          
பின்னர், சிவனிடம் நடந்ததை கூறினர், அதற்கு சிவன்,  உயிர்களை எடுக்கும் தொழிலை எமதர்மனிடம் கொடுத்து விட்டேன், வாருங்கள் நானும்வந்து எமனிடம் முறையிடுகிறேன் என்றார்,
         
நடந்ததை எமனிடம் கூறினர், எல்லா உயிர்களின் ஆயுளையும் ஒரு ஓலையில் எழுதி அதை ஒரு அறையில் கட்டிவிடுவேன் அது என்றைக்கு அறுந்து விழுகிறதோ அன்று இறந்துவிடும், எனவே கிளியின் ஓலையை எடுத்து மாற்றி எழுதலாம் வாருங்கள் என்று அந்த அறைக்கு அழைத்து சென்றார்,
           
உள்ளே நுழைந்ததும் ஒரு ஓலை அருந்து விழுந்தது அது அந்த கிளியின் ஓலைதான் அதை எடுத்து படித்தனர்
             
அதில், இந்திரன், சிவன், பிரம்மன், விஷ்னு, எமன் இவர்கள் ஐவரும் ஒன்றாக இந்த அறைக்குள் வரும்போது கிளி இறந்துவிடும் என்று எழுதியிருந்தது,
           
எனவே படைத்தவன் நினைத்தால்  கூட ஆயுளை மாற்றமுடியாது, வாழும் காலம்வரை சந்தோஷமாக வாழ்வோம்.

Monday 9 May 2022

உறவின்இழைகள்

ஒரு நகை வியாபாரியின் மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பம் மிகவும் மோசமான துன்பத்திற்கு உள்ளானது. சாப்பிடுவதற்கும் கூட போதுமான அளவுக்கு பணம் இல்லாத நிலைமையை அடைந்து விட்டார்கள். 

ஒரு நாள் அந்த நகை வியாபாரியின் மனைவி தன் மகனை அழைத்து, ஒரு நீலக் கல் பதித்த நெக்லஸை அவனது கையில், கொடுத்துக் கூறினாள்..., மகனே, இதை எடுத்துக் கொண்டு, உன் மாமாவின் கடைக்குச் செல். அவரிடம் இதை விற்று நமக்குக் கொஞ்சம் பணம்  தரும்படி கேள் என்றாள்.

மகன் அந்த நெக்லஸை எடுத்துக் கொண்டு, அவனது மாமாவின் கடையை அடைந்தான். அவனது மாமா அந்த நெக்லஸை முற்றிலுமாகப் பார்த்தார். 

அவனிடம் கூறினார்... என் அன்பு மருமகனே, உன் அம்மாவிடம் கூறு..! அதாவது இப்போது மார்க்கெட் மிகவும் மோசமாக இருக்கிறது. கொஞ்ச நாள் கழித்து இதை விற்றால், அவளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று...

பின் குடும்ப செலவுக்காக அவர் அவனிடம்  கொஞ்சம் பணத்தைக் கொடுத்தார். 

மேலும் நாளை முதல் கடைக்கு வந்து என்னுடன் உட்கார்ந்து வேலையை 
கற்றுக் கொள் என்றார்.

எனவே, அடுத்த நாள் முதல், அந்தப் பையனும் தினமும் கடைக்குப் போகத் தொடங்கினான். அங்கே கற்றுக் கொள்ளத் தொடங்கினான். எப்படி வைரம் மற்றும் கற்களை பரிசோதிக்க வேண்டும்? என்பதையும் தெரிந்து கொண்டான்.

விரைவிலேயே, அவன் ஒரு சிறந்த அறிவாளியாக என்று  மாறினான். வைரத்தைப் பற்றி பகுத்தாய்வு செய்து கூறுவதில் ஒரு வல்லுநராக மாறினான்.  

நெடுந்தொலைவில் இருந்தும்  கூட, மக்கள், இவனிடம் வைரத்தைப்  பரிசோதிப்பதற்காக வந்தார்கள். 

ஒரு நாள் அவனது மாமா கூறினார்... மருமகனே, அந்த நெக்லஸை உன் அம்மாவிடம் இருந்து இப்போது வாங்கி வா! அவளிடம் கூறு... அதாவது மார்க்கெட் நிலைமை இப்போது நன்றாக இருக்கிறது. உனக்கு நல்லதொரு விலை கிடைக்கும்.
 
அவன் அம்மாவிடம்  இருந்து நெக்லஸை பெற்றவுடன், அந்த வாலிபன், அவனாகவே அதனைப் பரிசோதித்தான். அது ஒரு போலி என்பதைக் கண்டு பிடித்தான். 

அவனுடைய மாமா, ஒரு சிறந்த 
வல்லுநராக இருந்தும், இதை ஏன் நம்மிடம்  தெரிவிக்கவில்லை? என்று அவன் ஆச்சரியம் அடையத் தொடங்கினான். 

நெக்லஸை வீட்டில் விட்டு, விட்டு அவன் கடைக்குத் திரும்பினான். மாமா கேட்டார், நெக்லஸை கொண்டு வரவில்லையா? அவன் கூறினான், மாமா இது போலியானது. ஆனால், இதை என்னிடமிருந்து நீங்கள் ஏன் மறைத்தீர்கள்..?

பிறகு அவன் மாமா கூறினார்... நீ முதன் முதலில் நெக்லஸை என்னிடம் கொண்டு வந்த போது, *அது போலியானது* என்று நான் உன்னிடம் கூறியிருந்தால்,  நான் வேண்டுமென்றே  இதைக் கூறுவதாக நீ நினைத்துக் கொள்ளக் கூடும்.  ஏனென்றால், அப்போது நீ ஒரு  கஷ்டமான சூழ்நிலையில் இருந்தாய். இன்று நீ, நீயாகவே இதைப் பற்றிய அறிவை பெற்றிருப்பதால், இந்த நெக்லஸ், உண்மையிலேயே போலியானது என்பதை நீ உறுதியாக அறிந்திருப்பாய்.

அந்த நேரத்தில்,  உண்மையைக் கூறியாக வேண்டும் என்பதை விட... உறவு இழையை அறுந்து விடாமல்  காப்பது மேலானது மற்றும் முக்கியமானதாக எனக்கு தோன்றியது. எந்த வித பட்டறிவும் இல்லாமல், நாம் இந்த உலகில் பார்ப்பது, நினைப்பது, தெரிந்து கொள்வது எல்லாமே தவறு என்று கூறுகின்றோம்.

தவறான புரிதல்களால் நம்முடைய உறவு  முறைக்கு, பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது. பிறகு முறிவுக்கு இட்டுச் செல்கிறது. நம்முடைய வாழ்க்கையும் தனியாக நின்று வீழ்ச்சியும் அடைகின்றது.

நம் உறவின் இழைகளை அறுந்து விடாதவாறு பாதுகாத்து வாழ்வோம்...!

படிக்க சிந்திக்க.