Friday 30 September 2022

நீ யார்?

*ஒரு முறை மகாகவி காளிதாசர் வயல்வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது..!*

 *சற்று தூரத்தில் ஒரு கிராமப்பெண் கிணற்றில் தண்ணீர் சேந்தி குடத்தில் எடுத்து வந்து கொண்டிருந்தாள்!*

 காளிதாசர் அவரைப் பார்த்து அம்மா தாகமாகஇருக்கு...
கொஞ்சம் தண்ணீர் தருவீர்களா? என்று கேட்டார்.....

அந்த கிராமத்துப்பெண்ணும், தருகிறேன் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் என்றாள்! 

உடனே காளிதாசருக்கு ஒரு உயர்வு மனப்பான்மை ஏற்பட்டு, இந்த பெண்ணிடம் நாம் யார் என்று சொல்ல வேண்டுமா என நினைத்து நான் ஒரு பயணி அம்மா என்றார்!

உடன் அந்த பெண், உலகில் இரண்டு பயணிகள் தான்!
ஒருவர் *சந்திரன்* !
ஒருவர் *சூரியன்* !
இவர்கள் தான் இரவு பகலென பயணிப்பவர்கள் என்றாள்.....!

சரி என்னை விருந்தினர் என்று வைத்துக் கொள் என்றார் காளிதாசர்!

உடனே அந்தப் பெண், உலகில் இரண்டு விருந்தினர் தான்!
ஒன்று *செல்வம்!*
இரண்டு *இளமை!*
இவை இரண்டும் தான் விருந்தினராக வந்து உடனே போய் விடும் என்றாள்!

சற்று எரிச்சலான காளிதாசர் தான் ஒரு பொறுமைசாலி என்றார்! ....

உடனே அந்த பெண் அதுவும் இரண்டு பேர்தான்...!
ஒன்று *பூமி* !
எவ்வளவு மிதித்தாலும், எவர் மிதித்தாலும் தாங்கும்!
மற்றொன்று *மரம்* !
யார் கல்லால் அடித்தாலும் பொறுத்துக் கொண்டு காய்களைக் கொடுக்கும் என்றாள்! 

சற்று கோபமடைந்த காளிதாசர் நான் ஒரு பிடிவாதக்காரன் என்றார்!

அதற்கும் அந்த பெண் உலகிலேயே பிடிவாதக்காரர்கள் இரண்டு பேர் தான்...
ஒன்று *முடி* !
மற்றொன்று *நகம்* !
இரண்டும் எத்தனை முறை வேண்டாம் என்று வெட்டினாலும்
பிடிவாதமாக வளரும் என்றாள் சிரித்தபடி!....

தாகம் அதிகரிக்கவே நான் ஒரு முட்டாள் என்று தன்னை கூறிக்கொண்டார்!

உடனே அந்த பெண், உலகிலேயே இரண்டு முட்டாள்கள் தான்! 

ஒருவன் நாட்டை *ஆளத்தெரியாத அரசன்*
மற்றவன் அவனுக்குத் *துதிபாடும்* *அமைச்சன்* ! என்றாள்! ...

காளிதாசர் செய்வதறியாது, அந்த பெண்ணின் காலில் விழுந்தார்!

உடனே அந்த பெண் மகனே... எழுந்திரு... என்றதும் நிமிர்ந்து பார்த்த காளிதாசர் மலைத்துப்போனார்! 

சாட்சாத் *சரஸ்வதி தேவி* யே அவர் முன் நின்றாள்!
காளிதாசர் கைகூப்பி வணங்கியதும், 
தேவி தாசரைப் பார்த்து... காளிதாசா! எவன் ஒருவன் தன்னை மனிதன் என்று உணர்கின்றானோ, அவனே மனிதப்பிறவியின் உச்சத்தை அடைகிறான்!

*"நீ மனிதனாகவே இரு"* என்று கூறி தண்ணீர் குடத்தை காளிதாசர் கையில் கொடுத்து சரஸ்வதி தேவி மறைந்தாள்...! 

இதுபோலத்தான் குழந்தைகள் எதிர் காலத்தில் பணம் சம்பாதிக்கவும், வசதியாக வாழவும் பெற்றோர்கள் கற்றுக் கொடுக்கிறார்களே தவிர, மனிதனாக, தாய், தந்தை, மனைவி, மக்கள், உற்றார் உறவினருக்கு, நம் தாய் நாட்டிற்கு, நமக்கு உணவு தரும் பூமிக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கற்றுத் தரவேண்டும்! 

பெற்றோரை தாய்நாட்டை , உறவுகளை பிரிந்து, ஏசி அறையே உலகம், கைபேசியே உறவு, பணம் சம்பாதிப்பதே வாழ்க்கையென வாழ்க்கையை இயந்திர மயமாக்கி மனித நேயமில்லா வாழ்க்கை வாழக் கூடாது! 

*நீ நீயாகவே "மனிதனாகவே இரு" , வாழ்க வளமுடன் மனிதநேயம் மலர மகிழ்வித்து மகிழ்.......*

Saturday 24 September 2022

அமைதி எங்கே

நாட்ல அப்பப்போ ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம்.

ஒருமுறை 'அமைதி'ன்னா என்ன? அப்படிங்கற தத்ரூபமான ஓவியமா வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும்னு அறிவிச்சாரு. இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தாங்க.

மன்னன் ஒவ்வொரு ஓவியமா பார்வையிட்டுட்டே வந்தான். ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தாங்க.

ஒருத்தர் அழகான ஏரியை ஒரு அழகிய மலையின் அடி வாரத்தில் இருக்கற மாதிரி வரைஞ்சிருந்தாரு. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமா இருந்தது.

மற்றொருத்தர் பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் மலர்களை தத்ரூபமாக வரைஞ்சிருந்தாரு. இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றினபடி ஓவியத்தில் பிரதிபலிச்சிருந்தாங்க.

ஆனா ஒரே ஒரு ஓவியத்தில் ஒரு மலை மேலிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்துச்சு. அதுமட்டுமா இடியோட மழை வேறே கொட்டிட்டிருந்தது.

இது அமைதியே அல்ல. சற்று உற்று பார்த்தப்ப நீர் வீழ்ச்சியின் கீழே இருந்த மரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த பறவை ஒன்று கூட்டில் தனது குஞ்சுகளோட காணப்பட்டது.

''இந்த ஓவியத்தை வரைந்தது யார்?'' சம்பந்தப்பட்ட ஓவியர் எதிரே நிறுத்தப்பட்டார்.

மன்னர், ''இந்த ஓவியம் தத்ரூபமாக பார்க்க அழகாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆக்ரோஷத்துடன் கொட்டும் அருவி, இடியுடன் கூடிய மழை, கீழே மரத்தில் தனது கூட்டில் ஒரு பறவை. ஆனால் இதில் அமைதி எங்கே இருக்கிறது?'' ன்னாரு.

அதுக்கு ஓவியர் ''மன்னா சப்தமும், பிரச்னையும், போராட்டமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதி அல்ல....

இவை எல்லாம் இருக்கும் இடத்தின் நடுவே இருந்து கொண்டு, எதற்கும் கலங்காமல் எதுவும் தன்னை பாதிக்க விடாமல் பார்த்துக்கொண்டு உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி!.

அப்படி பார்க்கும்போது குஞ்சுகளுடன் இருக்கும் இந்த பறவையே பரிபூரணமான அமைதியில் இருக்கிறது!

''சபாஷ்... அமைதிக்கு ஒரு அற்புதமான விளக்கம்'' ன்னு கைதட்டின மன்னன் அந்த ஓவியத்திற்கே முதல் பரிசு கொடுத்தான்.

- அனைத்து சௌகரியங்களும் அமையப்பெற்று எந்த வித பிரச்னையும் இல்லாத ஒரு சூழலில் வாழ்வது அமைதியல்ல அது ஒரு வாழ்க்கையும் அல்ல. ஆயிரம் துன்பத்திற்கு நடுவே, ''நிச்சயம் ஒருநாள் விடியும்'' என்று விடாமுயற்சியோட தினசரி உழைச்சிட்டிருக்காங்களே அவர்களிடம் இருப்பதுதான் அமைதி!.

Tuesday 13 September 2022

கடவுள் எப்படி உதவி செய்வார்?

"தன்னம்பிக்கை கதை"

ஒருநாள் தன் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைப் பறித்து மூட்டைக் கட்டி மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு அவற்றை விற்க நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அப்போது, சாலையின் ஒரு திருப்பத்தில் வண்டியின் ஒரு சக்கரம் பள்ளத்தில் போய் விழ, வண்டி சாய்ந்து விட்டது. "கடவுளே! இது என்ன சோதனை? எனக்கு உதவி செய்!" என்று அவன் மனமுருக வேண்டினான். கடவுள் உதவிக்கு வரவில்லை. இரண்டாம் முறை, மூன்றாம் முறையென பலமுறை கடவுளை உதவிக்கு அழைத்தும், அவர் வரவில்லை. வேறு யாரும் உதவிக்கு வரவில்லை.

கடைசியில், பள்ளத்தில் விழுந்திருந்த சக்கரத்தைத் தானே தூக்கி சாலையில் நகர்த்தி வைக்க முயற்சி செய்தான். என்ன ஆச்சரியம்? தனியாக தன்னால் தூக்க முடியாது என்று அவன் நினைத்திருக்க, எளிதாக சக்கரம் பள்ளத்திலிருந்து எழுந்து விட்டது. அப்போதுதான், அவன் தன் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு வழிப்போக்கன் சக்கரத்தைத் தூக்குவதில் உதவி செய்தது தெரிய வந்தது. அவனை வணங்கியன் "மிகவும் நன்றி ஐயா! கடவுள் செய்யாத உதவியை நீ செய்து விட்டாய்!" என்றான்.

"கடவுளே! உதவி செய்!" என்று சொல்லியபடி கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தால், கடவுள் எப்படி உதவி செய்வார்? நீயே முயற்சி செய்தால்தான், கடவுள் உனக்கு உதவி செய்வார். அதற்கு நீதான் அவருக்கு, ஒரு வாய்ப்பு தர வேண்டும்!" என்று கூறிவிட்டு அந்த ஆள் தன் வழியே நடந்தான்.

via நீதி கதைகள்,தன்னம்பிக்கை கதைகள்.