Sunday 18 October 2020

யூதாஸின் முத்தம்

யூதாஸின் முத்தம் எனும் இந்த புகைப்படம் உலக புகழ் பெற்றது . 

ஸ்பெயினில் ஒரு காளையை வளர்த்த முதலாளி அதனை நல்ல லாபத்திற்கு சண்டையிட்டு கொல்லப்படுவதற்காக விற்று விடுகிறார் . மாடு அலங்கரிக்கப்பட்டு எடுத்து செல்லப்பட்டு களத்தில் நிறுத்தப்படுகிறது . 

அதற்கு என்னவென்றே புரியும் முன் பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட மெல்ல துடித்து சாக துவங்குகிறது . அந்த மாட்டில் முதலீடு செய்தவர்கள் அந்த யுத்தம் அதிகம் நேரம் நடந்தால் அதிக லாபம் கிடைக்கும் என மகிழ்கிறார்கள் . 

யுத்தம் எப்படி செல்ல வேண்டும் என அதன் போக்கை மேலே மேடைகளில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து தீர்மானிக்கிறார்கள் ..

திடிரென மாட்டை விற்ற முதல் முதலாளி வருகிறார் . அவரை நோக்கி மாடு தன் உயிரை காப்பாற்றுவான் என நினைத்து ஓடி வருகிறது . அவர் அதற்கு அன்புடன் முத்தம் தருகிறார் . 

மீண்டும் அறிவுரைகள் சொல்லி களத்தில் போராட திருப்பி விடுகிறார் . மீண்டும் மீண்டும் மாடு உடலெங்கும் கத்தியால் குத்தப்பட்டும் கிழிக்கப்பட்டு அந்த விற்றவரை நோக்கி உதவி கேட்டு ஓடி வருகிறது . ஒவ்வொரு முறையும் முத்தமிட்டு களத்தில் போராட சொல்கிறார் ..

மக்கள் அந்த அப்பாவி மாடு போல தான் ... கொடூர முதலாளித்துவ அரசியல்வாதிகளை நோக்கி உதவி விட மாட்டார்களா என ஒவ்வொரு முறையும் நம்பி ஓடுகிறார்கள் .
நண்பர் வெ.ரங்கநாதன் பதிவு.

Thursday 15 October 2020

ஒரு பொட்டலம் உணவு

#படித்ததில் பிடித்தது🌼

ஒரு செல்வந்த முதலாளியின் வீட்டில் ஒருவர் காவலாளியாக வேலைக்கு வந்தார். 

முதலாளி தினமும் வீட்டுக்கு வரும் போது ஓடோடிச் சென்று வீதிக்கதவை திறந்து அவருக்கு வணக்கம் சொல்வது அவனது வழக்கம். 

ஆனாலும் ஒரு நாளேனும் அந்த முதலாளி பதில் கூறியதும் கிடையாது; காவலாளி முகத்தை ஏரெடுத்து பார்ப்பதும் கிடையாது. 

ஒரு நாள் பசியோடிருந்த அந்தக் காவலாளி வீட்டுக்கு வெளியே உள்ள குப்பத்தொட்டியில் வீசப்பட்ட உணவுகள் ஏதும் இருந்தால் எடுத்து சாப்பிடுவோம் என குப்பத்தொட்டியை கிளரும் போது முதலாளி அதனைக் கண்டார். ஆனாலும் வழக்கம் போல எதையுமே கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டார்.

அடுத்த நாள் அதே இடத்தில் காவலாளி உணவைத் தேடும் போது புதிதாக தயாரிக்கப்பட்ட சுத்தமான உணவுகள் ஒரு பையினுள் காணப்பட்டது. காவலாளி சந்தோஷத்தில் எங்கிருந்து வந்தது என்றெல்லாம் பார்க்காமல் எடுத்துச் சென்றான். 

இவ்வாறே தினமும் அதே இடத்தில் ஒரு பையிருக்கும், அந்த பை நிறைய உணவுப்பொருட்கள் இருக்கும். அவனும் அதை தவறாமல் எடுத்து தன் மனைவி, குழந்தைகளுக்கு கொடுத்து வந்தான். இருந்தாலும் எந்த முட்டாள் இப்படி தினமும் பொருட்களை வாங்கி இங்கே விட்டுச் செல்கிறான் என மனதுக்குள் ஒரு நகைப்புடன் கூடிய கேள்வியும் வேறு.

திடிரென ஒரு நாள் முதலாளி இறந்துவிட்டார். வீடு நிறைய முதலாளியின் உறவினர்களும், நண்பர்களும் வந்தனர். அன்று அதே இடத்தில் உணவுப் பையை தேடினான். உணவு இருக்கவில்லை. 

ஒரு வேளை பார்க்க வந்தவர் யாரேனும் எடுத்திருக்க முடியும் என நினைத்து விட்டுவிட்டான். இரண்டாம் நாள் பார்க்கிறான், அந்த இடத்தில் உணவுப்பை இல்லை; மூன்றாம் நாள், நான்காம் நாள் என பார்க்கிறான். உணவுப்பை இருக்கவில்லை.

இப்படியே சென்றதால் அந்தக் காவலாளிக்கு தன் குடும்பத்துக்கு உணவளிக்க பெரும் சிரமமாய் போயிற்று. உடனே தனது முதலாளியம்மாவிடம் போய் சம்பளத்தை உயர்த்தவும் இல்லையாயின் வேலையை விட்டு விடுவதாகவும் கூறினான். அதற்கு முதலாளியம்மா மறுத்துவிட்டார். 

வேறு வழியில்லாமல் வீதியோரம் எடுக்கும் உணவுப்பை கதையையும், அது இல்லாததால் தன் குடும்பம் படும் அவஸ்த்தையையும் சொன்னான். உடனே முதலாளியம்மா கேட்டார்; 

எப்போதிலிருந்து உணவுப் பை இல்லாமல் போனதென்று. அதற்கு அவனும் முதலாளி இறந்த நாளன்றிலிந்து என சொன்னதும் 

முதலாளியம்மா 'ஓ' என அழத்தொடங்கினார். இதனைப் பார்த்து கவலையடைந்த காவலாளி சம்பள உயர்வு வேண்டாம், நான் இங்கேயே வேலை செய்கிறேன், அழுவதை நிறுத்துங்கள் என கேட்டான். 

அதற்கு முதலாளியம்மா, நான் அதற்கு அழவில்லை. என் கணவர் தினமும் ஏழு பேருக்கு உணவளித்து வந்தார். அதில் ஆறு பேரை ஏற்கனவே இனம் கண்டுவிட்டேன். 

ஏழாம் நபரைத்தான் இத்தனை நாளாய் தேடிக்கொண்டிருந்தேன். ஏழாவது நபர் நீதான் என தெரிந்து கொண்டதும் சந்தோஷத்தில் அழுகிறேன் என்றாள். 

நான் தினமும் தவறாமல் வணக்கம் சொல்லியும் ஏரெடுத்தும் கூட பார்க்காத நம்ம முதலாளியா இப்படி நமக்கு உணவு தந்தார் என நம்பியும் நம்பாமலும் யோசித்தபடியே அவன் சென்றான்.

அடுத்த நாளிலிருந்து முதலாளியின் மகன் தினமும் காவலாளியின் வீடு தேடி வந்து உணவுப்பையை காவலாளியின் கையிலே கொடுத்துச் சென்றான். காவலாளி நன்றி சொல்லியும் முதலாளி மகன் அதற்கு பதில் சொல்லாமலே செல்வான், அவனது தந்தையைப் போல. 

ஒரு நாள் இப்படித்தான் முதலாளியின் மகன் வீடு தேடிவந்து கையில் உணவுப்பையை கொடுக்கும் போது வழமை போல நன்றி சொன்னான் காவலாளி. அதற்கு அங்கிருந்து எந்த பதிலும் இல்லை. பொறுமையை இழந்த காவலாளி மிகவும் உரத்த குரலில் நன்றி சொன்னான்.

 திரும்பிப்பார்த்த அந்த சிறுவன் "எனக்கும் என் தந்தையைப் போல் காது இரண்டும் கேட்காது" என்று சொல்லிவிட்டு திரும்பிப் போனான்.

நாமும் இவ்வாறு தான் அடுத்தவரது நிலைமைகள் புரியாது பார்த்த மாத்திரத்திலே அவர்களை தவறாக முடிவெடுத்துவிடுகிறோம்.

 அடுத்தவரது நடவடிகைகளுக்கு பின்னால் ஒளிந்துள்ள உண்மைத்தன்மையை அறியாமல். 

இந்தக் கதையிலிருந்து இரண்டு விடயங்களை எடுத்துக்கொள்ளலாம்;

01. எதையும், யாரையும் பார்த்த மாத்திரத்திலே நம்பி முடிவெடுக்கக் கூடாது.

02. நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

#படித்ததில் பிடித்தது