Wednesday 1 November 2017

ஒரு கடவுள்,ஒரு மதம் மற்றும் நான்கு சாதிகள்

அன்றொரு நாள் அந்த மனிதர்களை சந்திக்க நேர்ந்தது... பூங்காவின் ஒரு ஓரத்தில் கூட்டம் போட்டு கதைபேசிக் கொண்டிருந்தனர்... நானும் நண்பன் ஒருவனோடு அக்கூட்டத்தில் இணைந்திருந்தேன்... பேச்சு ஊர் உலகம் நடப்பு நாகரிகம் தீவிரவாதம் மதம் கடவுள் என்று விரிந்தது...எனக்கு எதிலும் நாட்டமில்லை... சராசரி மனித இனத்தில் யார் வம்புக்கும் போகாத ஒரு சாதாரணன்தான் என்றாலும் சமூகத்தின் மீது அக்கறையும் ஒரு மூலையில் உண்டு. ஆனால் இந்தக்கூட்டத்தில் விவாதிப்பதனால் என்ன பயன்..
சும்மா இருந்தேன்..

என்னை வந்து சுரண்டியது அந்த மனிதரின் குரல்...

உலகம் இப்படி கெட்டுக்கிடக்கே அதுக்கு என்ன காரணம்னு நீ நினைக்கிற  என்றார்... பேச நாட்டம் இல்லை  என்றாலும் என்னையும் மதித்து ஒரு மனிதர் கேள்வி கேட்டிருக்கிறாரே... பதில் சொன்னேன்.. நீங்களும் நானும் தான் என்று..

எப்படி..?

மாற்றம் வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்க மட்டுமே செய்கிறோம்.. ஆனால் மாற்றம் என்பது நமக்குள் நிகழவிடுகிறோமா??? இல்லையே... நாம் நம்மை சரி செய்து கொள்ளத் தொடங்கினால் போதும்.. அந்த மாற்றம் தொடங்கிவிடும்.

எப்படி??

அதை நான் சொன்னால் புரியாது...சிந்தித்து பாருங்கள் ஒரு நாள் புரியும் என்றேன்...

ம்ம்ம்.. அதுக்கப்புறம் அரை நிமிஷம் குழப்பத்தோட இருந்தார் அந்த மனிதர். பின்பு சம்மந்தமே இல்லாத ஒருவிசயத்தை சம்மந்தப்படுத்தி கேட்டார்..மனிதர்கள் சண்டையிட சாதி மதம் இதுதான் முக்கியக் காரணம் என நான் சொல்கிறேன்... நீ என்ன சொல்கிறாய் என்றார்..?? எனக்கு தெரிந்ததெல்லாம் ஒரே கடவுள் ஒரே மதம் 4 சாதிகள்அவ்வளவுதான். ஆனால் எனக்கு தெரிந்த மதத்தில் நீங்க சொல்லுறது போல வன்முறை இல்லை. ஆனால் சாதிச் சண்டை மட்டும் அப்பப்ப நடக்கும் என்றேன்...

ஒரு கடவுள் னா?? யார் உன் கடவுள்..

முதலில் இறை ஆணுமல்ல பெண்ணுமல்ல. பெயரற்றது.எந்த ஒரு குறிப்பிட்ட பொருளிலோ, ஊரிலோ, மதத்திலோ, இனத்திலோ அது இல்லை.ஆனால் எல்லாம் அதுவாகவே உருவற்று நீக்கமற நிறைந்து இருக்கிறது என்றேன்..

பின் இன்னமும் சுருக்கமாக
100% நம்பிக்கை என்பது கடவுள் இதிலிருந்து
99.999999 என .000001 ஆக குறைந்தால் அது சாத்தான் என்றேன்.

புரியல...சரிவிடு

ஒரு மதம் என்றால் என்ன என்றார்.
எனக்கு தெரிந்த  ஒரே மதம் மனிதம் என்றேன்.

அப்படியானால் மற்ற மதங்களை என்ன சொல்ல என்றனர்...

மற்றவை மனிதனால் படைக்கப்பட்டு மனிதனை பிடித்துக்கொண்டு அவனை மலுங்கடிக்கிறது..
ஆனால் மனிதம் மனிதனுக்குள் உள்ள மனிதத்தை விடுவித்து உணர்வுகளை உற்பத்தி செய்து மகிழ்வித்து தெளியச் செய்கிறது. மனிதம் என்ற மதம் பிடித்தவன் உள்ளத்தில் அன்பென்னும் பூந்தோட்டம் பூத்துக்கொண்டே இருக்கிறது. அதன் வாசனை வன்முறையின் நாற்றம் வீசாமல் பார்த்துக் கொள்கிறது.என்றேன்

அப்படி என்றால் அந்த 4 சாதி??
உண்டு...
மனித இனத்தில் நான்கு சாதிகள் உண்டு.... சொல்கிறேன்.. ஆனால் இவற்றில் மனிதத்தின் தன்மை குறையும்போது மதம் பிடித்துவிடுகிறது...

அவை
ஆண், பெண், திருநங்கை, திருநம்பி. ..

ஓஓஓ... அப்படிச்சொல்றியா.... சரி திருநங்கைக்கும் திருநம்பிக்கும் என்ன வித்தியாசம்??

ஆணாய் பிறந்து பெண்ணாய் வாழ்பவர்கள் திருநங்கைகள்.பெண்ணாய் பிறந்து  ஆணாய் வாழ்பவர்கள் திருநம்பிகள்.

ஆனால் மனிதன் உருவாக்கிய சாதிகளுக்குள் கலப்பினத்திருமணம் தடைசெய்யப்படுகிறது...இயற்கை உருவாக்கிய இந்த 4 சாதிகளைச் சார்ந்தவர்கள் கலப்பின திருமணம் மட்டுமே செய்யமுடியும்.என்றேன்.

எதையோ யோசித்து விட்டு என்னமோ சொல்ற.. சரிவிடு... எல்லாருமே நல்லாருக்கனும்னா என்னபன்னனும்...? இதுக்கு பதில் சொல்லு என்றார்...
நான் மிகச் சாதாரணமாக  இரண்டே வரிகளைச் சொல்லிவிட்டு புன்னகையோடு கிளம்பிவிட்டேன்...

அன்பாயிரு
சும்மாயிரு...

ம.முத்தரசு
~☆~

No comments:

Post a Comment