Wednesday, 28 October 2015

எடை

யானையின் எடையை எப்படி அறிவது?

அரசர் ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடைமேடைகள் எல்லாம் இல்லை; யானையை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசும் கிடையாது.

யானையின் எடையை எப்படி அறிவது.? என்று அமைச்சர்களிடம் கேட்டார் மன்னர். யாருக்கும் அதற்கான வழி தெரியவில்லை. அப்போது அமைச்சர் ஒருவரின் பத்து வயது மகன், ‘நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்’ என்றான். அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். ஆனால், அவனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தார் மன்னர்.

அந்தச் சிறுவன், யானையை நதிக்கு அழைத்துச் சென்றான். அங்கே இருந்த மிகப் பெரிய படகில் யானையை ஏற்றினான். யானை ஏறியதும், தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே அவன், தண்ணீர் நனைத்த மட்டத்தைப் படகில் குறியீடு செய்தான். பிறகு, யானையைப் படகிலிருந்து இறக்கி, பெரிய பெரிய கற்களைப் படகில் ஏற்றச் சொன்னான். முன்பு குறித்து வைத்திருந்த குறியீடு அளவுக்குப் படகு தண்ணீரில் மூழ்கும் வரை, கற்கள் ஏற்றப்பட்டன. பின்பு, அரசரிடம் அந்தக் கற்களைக் காட்டி, ”அவற்றின் எடைதான் அந்த யானையின் எடை” என்றான். அனைவரும் வியந்தனர். அவனது புத்திசாலித்தனத்தைப் போற்றிப் புகழ்ந்தனர்.

எல்லோரும் யானையை ஒட்டுமொத்த உருவமாகத்தான் பார்த்தார்கள். ஆகவே, அவர்களால் அதன் எடையைக் கணிக்கமுடியும் எனும் நம்பிக்கை வரவில்லை. ஆனால் அந்தச் சிறுவனோ, பல எடைகளின் கூட்டுத்தொகையே யானையின் எடை என்று எண்ணிச் செயல்பட்டான்; எளிதில் விடை கண்டான்.

எவ்வளவு பெரிய செயலாக இருந்தாலும், அதைச் சின்னச் சின்ன செயல்களாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். பிறகு, அந்த ஒவ்வொரு செயலையும், செவ்வனே செய்து முடிக்கவேண்டும். அப்போது, ஒட்டுமொத்தத் திட்டமும் அழகாக நிறைவேறிவிடும்...

~*~

Thursday, 22 October 2015

வியாபரம் தர்மம்...!

செட்டி நாட்டு வீதியொன்றில் கீரை
விற்றுகொண்டு செல்கிறாள் ஒரு பெண். வீட்டு
வாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை
வாங்க அவளை கூப்பிடுகிறாள்.
" ஒரு கட்டு கீரை என்ன விலை....?"
" ஓரணாம்மா"
"ஓரணாவா....? அரையணாதான் தருவேன்.
அரையணான்னு சொல்லி நாலு கட்டு
கொடுத்திட்டு போ"
"இல்லம்மா வராதும்மா".
" அதெல்லாம் முடியாது. அரையணாதான்". பேரம்
பேசுகிறாள் அந்த தாய்.
பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்த பெண்
கூடையை எடுத்துக்கொண்டு சிறிது தூரம்
சென்றுவிட்டு
"மேல காலணா போட்டு கொடுங்கம்மா"
என்கிறாள்.
"முடியவே முடியாது. கட்டுக்கு அரையணாதான்
தருவேன்"... என்று பிடிவாதம் பிடித்தாள்.
கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு "சரிம்மா
உன் விருப்பம்" என்று கூறிவிட்டு நாலு கட்டு
கீரையை கொடுத்துவிட்டு ரெண்டணா காசை
வாங்கி கொண்டு கூடையை தூக்கி தலையில்
வைக்க போகும் போது கீழே சரிந்தாள்.
"என்னடியம்மா காலை ஏதும் சாப்பிடல...?" என்று
அந்த தாய் கேட்க
"இல்லம்மா போய்தான் கஞ்சி காய்ச்சிணும்"
"சரி. இரு இதோ வர்றேன்." என்று கூறிவிட்டு
வீட்டுக்குள் சென்றவள், திரும்பும்போது ஒரு
தட்டில் ஆறு இட்லியும், சட்னியோடு வந்தாள். "
இந்தா சாப்ட்டு போ" என்று கீரைக்காரியிடம்
கொடுத்தாள்.
எல்லாவற்றையும் பார்த்துகொண்டிருந்த அந்த
தாயினுடைய மகன்" ஏம்மா அரையணாவுக்கு
பேரம் பேசுனிங்க.. ஒரு இட்லி அரையணான்னு
வச்சுகிட்டாக்கூட ஆறு இட்லிக்கு
ரெண்டரையணா வருதும்மா.....? என்று கேட்க
அதற்கு அந்த தாய்,
"வியாபாரத்துல தர்மம் பார்க்ககூடாது,
தர்மத்துல வியாபாரம் பார்க்ககூடாதுப்பா" என்று
கூறினாள்...!!!

~*~

Friday, 9 October 2015

புத்தி



அது ஒரு பயங்கரமான கார் ஆக்ஸிடெண்ட் இரண்டு கார்கள் மோதி, கார்களில் இருந்த ஒரு வாலிபனும் ஒர் வாலிப பெண்ணும், எந்த ஒரு பெரிய காயங்கள் இன்றி காரில் இருந்து தப்பி, கஷ்டப்பட்டு தவழ்ந்து வெளியே வந்தனர்.
கார்களுக்குகோ பயங்கர சேதாரம் ஆனால் அவர்களுக்கோ ஓன்றும் பெரிய அடி காயங்கள் ஏதும் இல்லை பெறும் வியப்பு கலந்த சந்தோஷம் இருவருக்கும்.
அந்த வாலிபனிடம் பெண் சொன்னாள் பாருங்க நம்ம கார்கள் எந்த அளவுக்கு அடையாளம் தெரியாமல் நொறுங்கி போகிறுக்கிறது ஆனால் என்ன ஆச்சிரியம் பாருங்க நமக்கு ஒன்னும் ஆகவில்லை.
நான் நினக்கிறேன் இது நமக்கு கடவுளின் வழிகாட்டுதல், ஆசிர்வாதம். எனவே நாம் நல்ல நண்பர்களாக முடிந்தால் வாழ் நாள் முழுவதும் சேர்ந்து வாழ்வோம். நீங்கள் இதை பற்றி என்ன நினைக்கிறிர்கள் என்று கேட்டாள்.
அதற்கு அவன் பதில் சொன்னான். நான் நீங்கள் சொல்வதை 100% ஒத்துக் கொள்கிறேன். இது கடவுளிடம் வந்த சிக்னல் தான் என்று ஒத்துக் கொண்டான்.
தன் காரை சுற்றி பார்த்த பெண் அதில் இருந்த அவள் ஷாப்பிங் பேக்கை வெளியே இழுத்து பார்த்தாள் அதில் இருந்த வைன் பாட்டில் உடையாமல் இருந்ததை பார்த்து சந்தோஷம் கொண்ட அவள், அவனை பார்த்து சொன்னாள். இங்க பாருங்க மீண்டும் என்ன அதிசயம் காரோ இந்த அளவு டேமேஜ் ஆகி இருக்கிறது ஆனால் இந்த வைன் பாட்டில் சிறிது கூட உடையாமல் இருக்கிறது . இதுவும் கடவுளின் ஒரு சைன் தான் நமக்கு.
நாம் உயிர் பிழைத்து எதிர்காலத்தில் நாம் நல்ல படியாக சேர்ந்து வாழ வேண்டும் என்று அதை நாம் இன்று கொண்டாட கடவுள்தான் இதை உடைக்காமல் வைத்துள்ளார்.
இந்தாங்க முதலில் இதை நீங்கள் திறந்து உங்களுக்கு வேண்டிய அளவு குடித்து விட்டு சிறிய அளவில் எனக்கு தாருங்கள் என்றாள்.
நம்ம ஹீரோவும் அதை ஆமோதித்து விட்டு தாகம் வேற எடுத்ததால் முக்கால் பாட்டிலையும் காலி செய்துவிட்டு மீதியை அவளிடம் கொடுத்து குடிக்க சொன்னான்.
அதற்கு அந்த பெண் அமைதியாக பாட்டிலை வாங்க மறுத்தாள். ஏன் உனக்கு கொஞ்சம் கூட வேண்டாமா என்று கேட்டான்.
இல்லை போலீஸ் வந்து இந்த ஆக்ஸிடெண்டை விசாரித்து விட்டு போகும் வரை குடிக்க வேண்டாம் அது வரை காத்திருக்கலாம் என்று நினைக்கிறேன் என்று வெகு ஸ்மார்ட்டாக பதில் சொன்னாள்.

~*~

தூதன்

கடவுள் நம் 'குடி'மக்களை பார்த்து பொறாமை கொண்டு , அப்படி என்ன தான் இருக்கு இந்த , டாஸ்மார்க் கடை'லன்னு பார்த்துட்டு வர, தன்னோட கிங்கரன் ஒருத்தனை மனுச ரூபத்துல பூமிக்கு அனுப்புறார்..
அவனும் டாஸ்மார்க் வந்து உள்ளே சென்று ஆர்டர் செய்தான்,
5 பீர் முழுவதும் முடிந்தது,
ஒரு வித்தியாசமும் தெரியாததால் மேலும்
தொடர்ந்தான்,
2 ஃபுல்.. அப்பொழுதும் ஒன்னும் ஆகல..
மீண்டும் ஆரம்பிதான் ,
2 பீர் ..
கடைகாரருக்கு ஆச்சரியம் தாளாமல் , கேடடார் ..
"யார் யா நீ..? ஏரியாவுக்கு புதுசா தெரியுர...! இவ்வளவு குடிச்சும் உனக்கு போதை எறல? சரியான மொடாக் குடியனா இருப்ப போல...?
மறுபடியும் கேட்குற ?
அதற்கு அவன்
"நான் தான் கடவுளின் தூதன்..!" எனக்கு இந்த போதையெல்லாம் ஒன்றும் செய்யாது" என்றான்.
கடைகாரர் : "தோ டா ..!
அவனவன் குடிச்சாலே நான் தான் கடவுள்'ன்னு சொல்லுவான்....!!
தொரைக்கு இப்ப தான் ஏற அரம்பிச்சி இருக்கு..! அதான் புதுசா தூதன்னு சொல்லுறாரு....!
நடக்கட்டும் ..! நடக்கட்டும் ..!"

~*~

புண்ணியவான் ...

ஒரு ஓடக்காரன் இருந்தான். ஆற்றைக் கடக்க கொள்ளைப் பணம் வசூலிப்பான்.
மக்கள் எல்லோரும் திட்டுவார்கள். அதையெல்லாம் அவன் கண்டு கொள்ள மாட்டான். மக்களும் வேறு வழியின்றி அவன் கேட்கிற பணத்தைக் கொடுத்து ஆற்றைக் கடந்து செல்வார்கள்.
அவனுக்கு அந்திமக் காலம் வந்தது. மக்கள் தூற்றினார்கள். இவனுக்கு நற்கதியே கிடைக்காது என்று.
இறக்கும் தருவாயின் தன் மகனை அழைத்தான்.
மகனே, நான் உயிரோடு இருக்கையில் செய்த செயல்களுக்காக இப்பொழுது வருத்தப்படுகிறேன்.
மக்கள் ஒருவரும் என்னை நல்லவிதமாகச் சொல்லியதே இல்லை. ஏச்சும் பேச்சும்தான் கேட்டிருக்கிறேன்.
இறந்த பின்னராவது மக்கள் என்னை நல்ல விதமாகப் பேசும்படி செய்." என்று கூறி உயிர்விட்டான்.
மகனும் யோசித்தான். தந்தை பார்த்த தொழிலையே அவனும் செய்து கொண்டு, ஆனால் தந்தையை விட இரண்டு மடங்கு பணம் வசூலித்தான்.
இப்பொழுது மக்கள் சொன்னார்கள்,
"இவனுக்கு இவன் தந்தை எவ்வளவோ மேல். பாவம் புண்ணியவான் அதுக்குள்ள போய்ச் சேர்ந்துட்டான்." என்று..!

~*~

கடற்பேய்

நள்ளிரவு நேரம்.
கடலில் ஒரு படகு போய்க் கொண்டிருந்தது அதில் மூன்று பேர் பயணம் செய்து கொண்டு இருந்தார்கள். திடீரென்று ஒரு பேய் படகில் வந்து குதித்தது.
மூன்று பெரும் நடுங்கி போனார்கள். பேய் தன் கோரமான பல் வரிசையை காட்டி சிரித்தது. "உங்கள் மூன்று பேரையும் சாப்பிட போகிறேன்" என்றது.
மூன்று பெரும் தங்களுடைய உயிர்களை காப்பாற்றிக் கொள்ள பேயிடம் கெஞ்சினார்கள்.
ஆனால் பேய் ஒரு நிபந்தனை விதித்தது.
"உங்களில் ஒருவனாவது புத்திசாலியாக இருந்தால் உயிர் பிச்சை கொடுப்பேன். அதை நிரூபிக்க இப்போது ஒரு சோதனை.
நீங்கள் மூன்று பேரும் ஒவ்வொருவராய் கடலில் எதையாவது தூக்கி போடவேண்டும். அதை நான் எடுத்து வந்து விட்டால் நீங்கள் தோற்று போனதாய் அர்த்தம்."
மூன்று பேரும் ஒப்புக் கொண்டனர்: முதலாவது நபர் தன் கையில் போட்டிருந்த மோதிரத்தை எடுத்து கடலில் வீசினான். பேய் உடனே கடலில் குதித்து அதைத் தேடி எடுத்து வந்தது.
இரண்டாவது நபர் தன் கழுத்தில் இருந்த செயினை கழற்றி கடலில் வீசினான். பேய் அதையும் தேடி பிடித்து கொண்டு வந்து கொடுத்தது.
பேய் சிரித்தது.
"இரண்டு பேர் தோற்று விட்டார்கள். இனி மீதி இருப்பது நீ மட்டும் தான்.
நீ எதை வீசப் போகிறாய்..?"
உடனே மூன்றாவது நபர் தன்னிடம் இருந்த குடி தண்ணீர் பாட்டிலை எடுத்து, அந்த கடலில் கொட்டி விட்டு
"இந்த தண்ணீரை கொண்டு வா !" என்றான்.
பேய் திகைத்தது.
ஓட்டம் பிடித்தது.
நீதி: இந்த கதையின் நீதி என்னவென்றால் பேய்'க்கே தண்ணி காட்டுபவர்களும் இந்த உலகத்தில் இருக்கிறார்கள்..! என்பது தான்.!

~*~

சொர்க்கம் நரகம்

ஒரு ஊரில் ஒரு கருமி வாழ்ந்து வந்தான். அவன் மிகப் பெரிய பணக்காரன். ஆனால் யாருக்கும் உதவ மாட்டான்.
அவனுக்கு சொர்க்கத்தையும் நரகத்தையும் காணஆசை வந்தது. ஒருநாள் அவனது கனவில் ஒரு பெரியவர் தோன்றினார்.
மிகப் பெரிய அழகிய பாத்திரங்களில் அறுஞ்சுவைமிக்க பதார்த்தங்களும் இருந்தன. அவரவர்களுக்கு தட்டுகள் கொடுக்கப்பட்டு,சுவைமிக்க உணவு பரிமாறப்பட்டது.
எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊறியது. ஆனால்….
அந்தோ பரிதாபம்! அனைவராலும் கையை நீட்டி உணவுப் பொருளை எடுக்க முடிந்ததே தவிர, கையை மடக்கி, வாய்க்கு அந்த உணவைக் கொண்டு செல்ல முடியவில்லை!
எனவே அறுஞ்சுவை உணவு எதிரே இருந்தும் அவர்களால் உண்ண முடியவில்லை. அவர்களுக்குப் பசியோடு ஆத்திரமும் சேர்ந்து கொண்டது. அனைத்து அண்டாக்களையும் கீழே தள்ளிவிட்டு, அவற்றிலுள்ள உணவை வீணாக்கினர்.
பின்னர், தாங்க முடியாத பசியானால் உட்கார்ந்து அழுதனர். இப்படி அழுதுகொண்டே இருந்தனர்.
பின்னர், அந்தப் பெரியவர் அந்தக் கருமியை சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கும் அதேப் போல பெரிய அழகிய பாத்திரங்களில் அறுஞ்சுவைமிக்க பதார்த்தங்களும்வைக்கப்பட்டிருந்தது. அங்கு இருந்தவர்களுக்கும் கையை நீட்ட முடிந்தது. ஆனால் தங்கள் வாய்க்கருகே கொண்டு செல்ல கையை மடக்க முடியவில்லை.
ஆனால், அவர்களில் ஒருவர் தனது நீட்டிய கையினால் இனிப்பு வகைகளை எடுத்து எதிரே இருந்தவர் வாயருகில் நீட்டினார். மடக்கத்தானே முடியாது? கையை நீட்டி எதிரே இருப்பவரின் வாயில் ஊட்ட முடியுமல்லவா?
இப்படியே அனைவரும் ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்தனர். அனைவரின் வயிறும் நிரம்பியது.
கருமி கனவிலிருந்து மீண்டான்.
"ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதே சொர்க்கம் என்பதை அவன் புரிந்து கொண்டான்.
தான் மட்டும் சுகமாய் வாழ நினைப்பது நரகம் என்பதை உணர்ந்தான். அன்றிலிருந்து அவன் அனைவருக்கும் உதவிகள் பல புரிந்து நல்வாழ்வு வாழ்ந்தான்'...

~*~

Thursday, 8 October 2015

திருந்திட்டான்...

மூன்று பேருக்கு 25 வருட சிறைத்தண்டனை தரப்பட்டது.
ஆனால் தன்னோடு வைத்துக்கொள்ள ஏதாவது அவர்கள் கேட்கலாம்
முதல் ஆள்,”எனக்கு 500 புத்தகங்கள் வேண்டும்” என்றான்.
இரண்டாம் ஆள், “எனக்கு சிறையில் உடற்பயிற்சி செய்ய உபகரணங்கள் வேண்டும்”
மூன்றாவது ஆள்,”எனக்கு ஒரு லட்சம் சிகரெட்கள் வேண்டும்”
25 வருடம் கழித்து மூன்று பேரும் விடுதலை செய்யப்பட்டனர்
முதல் ஆள்,” நான் நிறைய தெரிந்து கொண்டேன் ஒரு லைப்ரரி அமைப்பேன்”
இரண்டாம் ஆள்,”நான் உடலை வலுவாக்கினேன் ஜிம் வைப்பேன்”
மூன்றாம் ஆள்,”நாம் சிகரெட் பிடிப்பதை விட்டு விட்டேன்”என்றான
எல்லோருக்கும் ஆச்சர்யம் போகும்போது லட்சம் சிகரெட் கேட்டவன் எப்படி திருந்தினான் என்று.
அவன் சொன்னான், “தீப்பெட்டி கேக்க மறந்துட்டேன்ப்ப
.....!!!!!!!!!

~*~

Monday, 5 October 2015

தைரிய வைத்தியம்

சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார். அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார். ''மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய். இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும். ஆனாலும் நீ பயப்படக்கூடாது; வீட்டிற்கு ஓடிவந்துவிடவும் கூடாது'' என்றார். சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான்.
அவனது கண்களைத் தந்தை துணியால் இறுகக் கட்டினார். பிறகு, தந்தை திரும்பிச் செல்லும் காலடி ஓசை, மெல்ல மெல்ல மறைந்தது. அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு, தூரத்தில் ஆந்தை கத்துவதும் நரி ஊளையிடுவதும் நடுக்கத்தைக் கொடுத்தது.
காட்டு விலங்குகள் வந்து தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் அவனது இதயத்துடிப்பு வழக்கத்தைத் தாண்டி எகிறியது.
மரங்கள் பேயாட்டம் ஆடின. மழைவேறு தூறத் தொடங்கியது. கடுங்குளிர் ஊசியாய் உடலைத் துளைத்தது. ‘’அய்யோ! இப்படி நிர்க்கதியாய்த்தவிக்க விட்டு தந்தை போய்விட்டாரே! யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்களேன்’’ என்று பலமுறை கத்திப் பார்த்தான். பயனில்லை.
சிறிது நேரத்தில், இனி கத்திப் பயனில்லை என்பது அவனுக்குப் புரிந்தது. திடீரென்று அவனுக்குள் ஒரு துணிச்சல். என்னதான் நடக்கும், பார்ப்போமே என்று சுற்றுப்புறத்தில் கேட்கும் ஓசைகளை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கினான். இப்படியே இரவு கழிந்தது. விடியற்காலையில் லேசாகக் கண்ணயர்ந்தான். சூரியன் உடம்பைச் சுட்டபோதுதான், கண்கட்டைத் திறந்துப் பார்த்தான். கண்ணைக் கசக்கிக்கொண்டு எதிரே பார்த்தபோது, அவனுக்கு ஆச்சரியம்! ஆனந்தம்! அழுகையே வந்துவிட்டது. ‘’அப்பா’’ என்று கூவி அருகில் அமர்ந்திருந்த தன் தந்தையைப் பாய்ந்து தழுவிக் கொண்டான்.
‘’அப்பா நீங்க எப்போ வந்தீங்க?’’ என்று ஆவலாகக் கேட்டான். சோர்வும் மகிழ்ச்சியும் கொண்டிருந்த அந்தத் தந்தை, ''நான் எப்போது மகனே உன்னை விட்டுப் போனேன்’’ என்றார். இரவு இங்குதான் இருந்தீங்களா? பிறகு ஏன் நான் பயந்து அலறியப் போதெல்லாம் என்னைக் காப்பாற்றவில்லை? ஏன் என்னிடம் எதுவும் பேசவில்லை?’’ என்று கேட்டான்.
‘’உன் மனோதிடம் வளர வேண்டும். நீ எதற்கும் அஞ்சாத வீரனாக வேண்டும் என்பதற்காக மெளனம் காத்தேன். ஏனென்றால் அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது, துணிச்சல் தானே வரும்’’ என்றார் தந்தை. மகனுக்கு தந்தையின் நோக்கம் புரிந்தது.
கடவுளும் அந்தத் தந்தையைப் போலத்தான், நம்மோடு இருக்கிறார். துன்பத்திலும் சோகத்திலும் தவிக்கும்போது துவண்டுவிடாமல், நாம் தீரர்களாக வேண்டும் என்பதற்காகவே பல நேரங்களில் மெளனம் காத்து வெறும் பார்வையாளரைப் போல் இருக்கிறார்.
நல்ல ஆன்மீக சிந்தனையை தூண்டும் தன்னம்பிக்கையுடன் இறை நம்பிக்கையூட்டும் அற்புதமான கதை!
பகிர்ந்தால் அனைவரும் இன்பம் அடைவார்கள்

Thursday, 1 October 2015

எமலொகத்தில் நம்மாளு...

நம்ப ஊரு ஆளு ஒருத்தர் செத்து எலோகம் போறாரு..
எமனோட அங்க இருக்கிற சித்திர குப்தன், "இங்க இருக்கிற ருல்ஸ் பிரகாரம்..., நீ ரெண்டு கேள்விக்கு பதில் சொல்லிட்டா, உன்னை சொர்க்கத்துல ஜாலியா இருக்கிறத்துக்கு நாங்க அனுமதிப்போம்" ன்னு சொல்றாரு...
சரிங்க கேளுங்க ன்னு நம்பாளு சொல்ல...,
அதுக்கு சித்திர குப்தன்,
முதல் கேள்வி :- ஒரு வாரத்துல இருக்கிற நாட்கள்ல முக்கியமான மூன்று நாட்கள் எது ?
இரண்டாவது கேள்வி :-
ஒரு வருசத்துக்கு எத்தினை செகன்ட்ஸ் இருக்கு..? உனக்கு ரெண்டு நிமிஷம் அவகாசம்'ன்னு சொன்னார்.
நம்ப ஆளு, இதுக்கெதுக்கு ரெண்டு நிமிசம் யோசிக்க..! நான் உடனே சொல்லுறேன்னான் ....!!
சித்திரகுப்தன் ஆச்சர்யமாயிட்டார்.!! சரி சொல்லுப்பான்னார்..
முதல் கேள்வி விடை :-
ஒரு வாரத்துல இருக்கிற நாட்கள்ல முக்கியமான மூன்று நாள், "நேற்று, இன்று, நாளை"ன்னான்
இரண்டாவது கேள்வி விடை :- ஒரு வருசத்துக்கு 12 SECONDS இருக்கும் - னு சொல்றான்.
சித்திர குப்தன் உடனே ஆச்சர்யபட்டு, "நம்ப ஆளிடம், யோவ்.... எனக்கு ஒரே ஆச்சர்யமா இருக்கு, இது வரைக்கும் இங்க வந்த யாருமே யோசிக்காத ஒரு பதிலை முதல் கேள்விக்கு கொடுத்திருக்க, சரி பரவாயில்லை, அதை கூட நாங்க எங்க ஆன்சர் புக் ல சேத்துக் கொள்கிறோம்.
ஆனா இரண்டாவது கேள்விக்கு எப்பிடிய்யா 12 SECONDS மட்டும் இருக்கும் - ன்னு கேக்க....
அதுக்கு அந்த நம்மூரு ஆளு..., ஒரு வருசத்துல , ஜனவரி 2 nd , பிப்ரவரி 2 nd, மார்ச் 2 nd, ஏப்ரல் 2 nd, .........டிசம்பர் 2 nd, ன்னு மொத்தம் 12 SECOND'S
இருக்கும் ன்னு சொன்னதுமே...,
சித்திர குப்தன் மயக்கமாயிட்டாரு....!!! எமனுந்தாங்க...!!!

Wednesday, 2 September 2015

எதில் மகிழ்ச்சி!!!

ஒரு பெரிய ஹாலில் செமினார் நடந்து கொண்டிருந்தது.அப்போது பேச்சாளர் எல்லார் கையிலும் ஒரு பலூனை கொடுத்து தங்கள் பெயரை எழுத சொன்னார்.
எல்லோரும் தங்கள் பெயரை பலூனில் எழுதி முடித்தவுடன் ,அதை இன்னொரு அறையில் நிரப்ப சொன்னார்.இப்பொழுது அந்த பேச்சாளர், உங்கள் பெயர் எழுதிய பலூனை அந்த அறைக்குள் இருந்து எடுத்து வாருங்கள் என்று அறிவித்தார்.
உடனடியாக அனைவரும் விழுந்து அடித்து அந்த அறைக்குள் ஓடிச் சென்று ஒவ்வொரு பலூனாக எடுத்து தேடினர் . ஒருவருக்கொருவர் நெக்கி தள்ளிக்கொண்டு கீழே விழுந்து தங்கள் பெயருக்குரிய பலூன் கிடைக்கிறதா என்று பரபரப்பாக தேடினர்.5 நிமிடம் கடந்த போதிலும் ஒருவராலும் தங்களுக்குறிய பலூனை தேடி கண்டு பிடிக்க முடியவில்லை.
இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார், ’ஒவ்வொருவரும் ஒரு பலூன் மட்டும் எடுங்கள்,அந்த பலூனில் யார் பெயர் இருக்கிறதோ அதை அந்த பெயர் உடைய நபரிடம் கொடுங்கள்’ என்றார்.
அடுத்த ஒரே நிமடத்தில் தங்கள் பெயர் எழுதப்பட்ட பலூன் எல்லோருக்கும் கிடைத்துவிட்டது.
இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார்,’இது தான் வாழ்க்கை.எல்லோரும் மகிழ்ச்சியை தேடுகிறோம், ஆனால் அது எங்கே,எப்படி,எதில் கிடைக்கும் என்று நினைப்பது இல்லை’.
’நம்ம சந்தோஷம் அடுத்தவர்களுக்கு உதவுவதில் தான் இருக்கிறது.அடுத்தவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுங்கள்,உங்கள் மகிழ்ச்சி உங்களை தேடி வரும்’.

~*~

Tuesday, 1 September 2015

இது நம்ம ஆளு ஓய்...

நம் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்றார் ஒருவர்.
அங்கே ஒரு விற்பனை நிலையத்தில்....
"சேல்ஸ் துறையில் உனக்கு முன் அனுபவம் இருக்கிறதா?" மேனேஜர் கேட்க,
"நான் எனது நாட்டில் சேல்ஸ்மேனாகத்தான் வேலை பார்த்தேன்" என்றார் நம்மாளு.
"அப்படியானால் உனக்கு நான் வேலை தருகிறேன். நாளை முதல் நீ வேலையைத் தொடங்கலாம். கடை மூடும்பொழுது நீ எப்படி வேலை பார்த்தாய் எனப் பார்ப்பதற்கு நான் வருவேன்"
முதல் நாள் கடை மூடும் நேரம் மேனேஜர் வருகிறார்.
"இன்று எத்தனை நபர்களிடம் சேல்ஸ் செய்தாய்?"
"ஒருவரிடம் மட்டும்…"
"என்ன ஒருத்தர் மட்டுமா? ... உன்னுடன் வேலை பார்க்கும் மற்றவர்களெல்லாம் நாள் ஒன்றுக்கு 20லிருந்து 30 வரை செய்யக் கூடியவர்கள். உன் வேலை நிரந்தரமாக வேண்டுமானால் நீயும் இவர்களைப் போல் முயற்சி செய்ய வேண்டும். சரி எவ்வளவு டாலருக்கு விற்றாய்?"
"$1012347.64"
"ஒரே ஒரு நபரிடம் இவ்வளவு டாலருக்கா? என்னென்ன விற்றாய்?"
"முதலில் அவரிடம் சிறிய தூண்டில்,
கொஞ்சம் பெரிய தூண்டில்,
அதைவிடப் பெரிய தூண்டில்,
ஃபிஷிங் ராட்,
ஃபிஷிங் கியர் எல்லாம் விற்றேன்.
பிறகு அவரிடம் “எங்கே மீன் பிடிக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அவர் கரையில் அமர்ந்து மீன் பிடிப்பதாகச் சொன்னார். உடனே நமது போட்டிங் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு போட்டை விற்றுக் கொடுத்தேன். அவர் என்னுடைய கார் இந்த போட்டை இழுக்குமா எனத் ன்று தெரியவில்லையே என்றார். நான் நமது ஆட்டோமோடிவ் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு 4x4 ட்ரக் விற்றுக் கொடுத்தேன். பின்னர் அவரிடம் நீங்கள் எங்கு தங்கியிருக்கிறார் எனக் கேட்டேன். இப்போதைக்கு இடம் எதுவும் இல்லை என்று சொன்னார். உடனே நான் அவருக்கு 4 பேர் தங்கக் கூடிய அளவுள்ள “டெண்ட்” –ம் விற்றுக் கொடுத்தேன்"
"என்ன ஒரு தூண்டில் வாங்க வந்தவரிடமா இவ்வளவும் விற்றாய்?"
மேனேஜர் அதிசயமாய்க் கேட்க, நம்மாளு சொன்னார்,
"அய்யோ! இல்லை சார்! அவர் தலைவலிக்காக அனாசின் மாத்திரை வாங்க வந்தார். நான்தான் மீன் பிடித்தால் மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸ் - ஆக இருக்கும். எப்போதும் உங்களுக்குத் தலைவலியே வராது என்று கூறினேன்"
இந்தியன்னா சும்மாவா

~*~

உபகாரம் ...!

ஒரு வயதான மனிதர் தனிமையாக ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தார். அவரது தோட்டத்தில் நன்றாக மண்வெட்டி ஒரு உருளை கிழங்கு தோட்டம் பயிரிட விரும்பினார். அது அவரால் செய்யமுடியாத அளவிற்கு மிகவும் அதிக வேளையாயிருந்தது. அவருக்கென்று உதவியாக இருந்த அவரது ஒரே மகன் சிறைச்சாலையிலிருந்தான்
அந்த வயதான மனிதர் தன் மகனுக்கு ஒரு கடிதம் எழுதினார்:
அன்புள்ள மகனுக்கு,
நான் இந்த வருடம் உருளை கிழங்கு தோட்டம் நட முடியாமல் போனது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. நான் இந்த வருடம் தோட்டம் பயிரிடாதிருப்பது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது ஏனென்றால் உனது அம்மாவிற்கு தோட்டம் பயிரிடுதால் மிகவும் பிரியமாயிருந்தது. எனக்கு மிகவும் வயதான காரணத்தினால் தோட்டத்தை பயிரிட உழவு வேலை செய்யமுடியவில்லை. நீ இங்கு இருந்திருந்தால்என்னுடைய எல்லா பிரச்சனைகளும் தீர்ந்திருக்கும். எனக்கு தெரியும் நீ சிறையிலில்லாமலிருந்தால் எனக்காக தோட்டத்தை உழவு செய்து கொடுத்திருப்பாய்.
அன்புடன்,
அப்பா.
சிறிது நாட்களில் அந்த வயதான மனிதருக்கு ஒரு தந்தி வந்திருந்தது. “கடவுளே, நல்ல வேலையாக நீங்கள் தோட்டத்தை உழவு செய்யவில்லை, ஏனென்றால் அங்கு தான் எல்லா துப்பாக்கிகளையும் நான் புதைத்து வைத்துள்ளேன்”.
அடுத்த நாள் விடிகாலை 4 மணிக்கு ஒரு டஜன் காவலர்கள் வீட்டிற்கு வந்தார்கள். பின்னர் அந்த தோட்டத்தில் துப்பாக்கிகளை தேடுவதற்காக எல்லா இடங்களிலும் தோண்டி பார்த்தனர். ஆனால் எந்த துப்பாக்கியும் கண்டுபிடிக்கப்படவில்லை.
குழப்பத்திலிருந்த அந்த மனிதர் அடுத்த நாளன்று அவரது மகனிற்கு இன்னொரு கடிதம் எழுதி என்ன நடந்ததென்று விளக்கிவிட்டு அடுத்து என்ன செய்வதென்று கேட்டு எழுதினார்.
அவரது மகன் அடுத்த கடிதத்தில் சொன்னது : “நீங்கள் சென்று உருளைகிழங்கு தோட்டத்தை அங்கே பயிருடுங்கள் அப்பா, இதுதான் நான் இங்கே இருந்து கொண்டு உங்களுக்கு செய்ய முடிந்த பெரிய உபகாரம்”.
நீதி : நீங்கள் உலகில் எங்கே இருக்கிறீர்கள் என்பது பெரிதல்ல, ஒன்று செய்ய வேண்டுமென்று உங்கள் உள்ளத்தின் ஆழத்தில் நீங்கள் முடிவு செய்து கொண்டால் உங்களால் அதனை செய்ய முடியும். எண்ணங்கள் தான் மிகவும் முக்கியம், நாம் எங்கு இருக்கிறோமோ அல்லது அந்த மனிதர் எங்கு இருக்கின்றார்களோ அது அல்ல.


~*~

Sunday, 30 August 2015

மனம்

மாலைநேரம்.. அந்த மன்னன் தன் மந்திரியுடன் மாறுவேடத்தில் நகர்வலம் வந்துகொண்டிருந்தான். நகருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த அந்த இடத்தில் இருந்த குடிசையொன்றின் வாசலில் சோகமே உருவாக ஒரு மனிதன் அமர்ந்துகொண்டிருந்தான். 

அவனை எப்போதுமே, முன்பின் பார்த்திராத மன்னனுக்கு அவனைக் கண்டதும், திடீரென்று எரிச்சலும் ஆத்திரமும் வந்தது. மன்னனுக்கே அது அதிசயமாக இருந்தது. அவசரமாக நகர்வலத்தை முடித்துக்கொண்ட மன்னன், அரண்மனைக்கு திரும்பும்போது மந்திரியைக் கேட்டான். "அங்கு அமர்ந்திருப்பவன் யார் மந்திரி? அவனை இதுவரை நான் கண்டதேயில்லை, ஆனால் அவனைப் பார்த்ததுமே அவன் மீது தீரா வெறுப்பு வந்தது. கொன்றுவிடலாமா என்று கூட யோசித்தேன்.. ஏன் எனக்கு இப்படி ஓர் எண்ணம் வரவேண்டும்?"

மன்னனின் கேள்விக்கு மந்திரியால் பதில்சொல்ல முடியவில்லை."எனக்கு சிலநாள் அவகாசம் கொடுங்கள் மன்னா,இதற்கான சரியான காரணத்தை அறிந்துசொல்கிறேன்." என்றார் மந்திரி.

அடுத்த நாள், "அரண்மனையின் சுவர்களெல்லாம் சிதைந்துவிட்டன, விரைவில் சீரமைக்கவேண்டும், சீரமைப்பில் சந்தன மரங்களைப் பயன்படுத்தினால்வாசனையாகவும் இருக்கும்" என்று மன்னனிடம் ஆலோசனை கேட்ட மந்திரி, மன்னன் ஒத்துக்கொண்டதும், அரண்மனை, அந்தப்புரம் எல்லாவற்றையும் சந்தன மரங்களால் அலங்கரித்தார்.

நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தன. அன்றைய மாறுவேட நகர்வலம், அன்றைக்குஅதே பழைய இடத்தை அடைந்தது. அதே மனிதன் குடிசையின் முன் அமர்ந்திருந்தான். மன்னனுக்கோ ஆச்சரியம்.

"மந்திரி, ஞாபகமிருக்கிறதா? சிலநாட்களுக்கு முன், எனக்கு இவனைப் பார்த்தாலே அருவருப்பாக இருக்கிறது என்று கூறினேன், நீங்களும் கொஞ்ச நாட்களுக்குப் பின் காரணம் சொல்வதாகச் சொன்னீர்கள். ஆனால்,இதென்ன அதிசயம்... இன்று இவனைப் பார்த்ததும் எரிச்சலே ஏற்படவில்லையே? பதிலாக அவனிடம் சென்று அன்பாக உரையாடவேண்டும், அவனை ஆரத்தழுவி நண்பனாக்கிக் கொள்ள வேண்டும் என்றல்லவா என் மனம் சொல்கிறது? இஃதென்ன விந்தை?"

மந்திரி புன்னகைத்தார்.
"அதுதான் எண்ணத்தின் வலிமை மன்னவா, இவன் ஒரு சந்தனமர வியாபாரி. அண்மைக்காலமாக, சந்தன மரம் வாங்குமளவு நம்நகரில் வணிக வசதி அவ்வளவாக இல்லாததால் இவனுக்கு வியாபாரத்தில் பெருநட்டம் ஏற்பட்டது. வாழ்க்கையே வெறுத்துப் போயிருந்த இவன், நாட்டின் மன்னனான தாங்கள் இறந்தால், தங்களை எரிக்க சிதை அமைக்கவாவது சந்தன மரங்கள் பயன்படும் என்று தங்கள் மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.அந்த அவன் எண்ணமே சில நாட்களுக்கு முன் இவனைக் கண்டபோது தங்களிடம் பெருவெறுப்பாக வெளிப்பட்டது.

இதையெல்லாம் விசாரித்து அறிந்துகொண்ட நான், அரண்மனைச் சீரமைப்புக்காக பெருந்தொகையான சந்தனமரங்களை கொள்வனவு செய்தேன். இப்போது பெருத்த இலாபம் கிடைத்ததால், அந்த இலாபத்திற்குக் காரணமான மன்னர் நீடூழி வாழவேண்டும் என்று மனதார வாழ்த்திக் கொண்டிருக்கிறான். அந்த நல்லமனமே உங்களை அவனுடன் பழகவும் அவனுடன் அன்புபாராட்டவும் தூண்டுகிறது.

வாழ்க்கையே கொடுக்கல் வாங்கல் தான்... மற்றவர்கள் மீது நாம் அன்பு செலுத்தினால் அதன் பிரதிபலனாக இன்னும் அன்பை நிச்சயம் பெறுவோம். மற்றோரை வெறுத்தால், நாமும் வெறுத்தொதுக்கப்படுவோம். இன்னொருவர்க்கு தீங்கு நினைக்கும்போது, அதுவே எதிர்மறை எண்ணமாய் மாறி அவரையும் எம்மை வெறுக்கவைக்குமே தவிர, அங்கே ஆக்கபூர்வமாக எதுவும் நடவாது. நல்ல எண்ணங்களைக் கொண்டிருந்தாலே போதும்... எப்போதும் நம்மைச் சுற்றி நல்லதே நடக்கும்!" என்று விளக்கினார் மந்திரி. புரிந்துகொண்டதற்கு அறிகுறியாக தலையை அசைத்தான் மன்னன்.

~*~

Saturday, 29 August 2015

சுவை...

ஒரு நாட்டு மன்னன்
தன் அரன்மனையில்
நாட்டியம் ஆடவந்த
பெண்ணின் அழகில்
மயங்கி
அவளை
அடைய
ஆசைப்பட்டான்.
"அப்பெண்னோ
மன்னா
நாங்கள்
நடனம்
ஆடுவது
எங்கள்
குல
தொழில்
வேண்டாம் ......
"மன்னா
நாங்கள்
ஆண்டவனுக்கு
தொண்டு
செய்பவர்கள்
என்றாள் ........
"மன்னவனோ
ஆண்டவனும்
அரசனும்
ஒன்று
தான் ......
"நீ
என்
இச்சைக்கு
இணங்கதான்
வேண்டும் ......
"வா
நான்
இந்த
நாட்டிற்க்கே
உன்னை
அரசியாக்குகிறேன
என்றான் ......
"அப்பெண்
எவ்வளவே
வாதாடியும்
விடவில்லை
மன்னனிடம்
கடைசியில்
ஒப்புக் கொண்டாள் ....
"அப்பெண்
சரி
மன்னா
நாளை
தாங்கள்
என்
வீட்டிற்க்கு
வாங்கள்
விருந்து
வைக்கிறேன் .......
"அமுதுண்டு
பிறகு
சல்லாபிக்களாம்
என்றாள் ......
"மன்னனும்
சென்றான் ....
"அப்பெண்
மன்னனுக்கு
16 வகை
கலரில்
இனிப்பு
வழங்கினாள் .....
"மன்னன்
எனக்கு
சாப்பிட
பொறுமை
இல்லை ......
" நீயே
ஊட்டி விடு
என்று
கூறினான் .....
"அப்பெண்ணும்
ஊட்டி
விட்டாள் .....
"மன்னன்
சுவைத்தான்
விருத்து
முடிந்தது .....
"மன்னனிடம்
கேட்டாள்
மன்னா
16
வகையான
இனிப்பு
சுவைத்தீர்களே
ஒவ்ஒன்றின்
சுவை
எப்படி
இருந்தது
மன்னா .......
"மன்னன்
நிறம்
மட்டுமே
வேறு வேறு
சுவை
ஒன்று
தான்
என்றான் ....
"பெண்
மன்னா
நாங்களும்
அப்படிதான்
பெண்கள்
நிறம்
மட்டுமே
வேறு வேறு
சுவை
ஒன்று
தானே
என்றாள் .....
"மன்னன்
அப்பெண்ணின்
காலில்
விழுந்து
வணங்கினார் ..
"தாயே
என்
அறிவுக்கண்
திரந்தவளே
என்றான் ......
"இது
கதை
அல்ல
உண்மை"
"நம் வீட்டிலும் பெண்கள் உண்டு ....
"பிற பெண்களிடம் பழகும் போது நம்
வீட்டு பெண்ளாக நினைத்து சகோதரிகளிடம்
பழகுவதாக பழகுங்கள் ..
"நட்பு வளரும் பிற பெண்கள் மனதை
காயப்படுத்தாதீர்கள் ....

~*~

Tuesday, 25 August 2015

கடவுள் கணக்கு ...!

வருஷம் பூரா, படாத பாடு பட்டும் பலன் கிடைக்காமல், திடீர் மழையாலும், திடீர் புயலாலும், திடீர் வறட்சியாலும் பயிர்கள் பாதிக்கப்படுவதால், மனம் நொந்துப் போன ஒரு விவசாயி, கடவுள்கிட்டே கேட்டான்...
"ஏ ஆண்டவனே! உனக்குக் கொஞ்சமாச்சும் மூளை இருக்கா? மழையை அளவாப் பெய்ய வைச்சா என்ன? ஏன் இப்பிடி காட்டாற்று வெள்ளமா பெருக வச்சு பயிர்களையெல்லாம் அழிக்குறே?
அதே மாதிரி காத்து இதமா அடிச்சாப் பத்தாதா? புயலாய்த் தான் அடிக்கணுமா? வெயில் அடிச்சாப் பரவாயில்லே! ஒரேயடியா இப்பிடி வறட்சி வர வைக்கணுமா?
உனக்கு பஞ்ச பூதங்களை எப்படி மேனேஜ் பண்றதுன்னு கொஞ்சம் கூடத் தெரியலை! எங்கிட்டே அந்த சக்தியைக் கொடு. உற்பத்தியைப் பெருக்கி நாட்டில் சுபிட்சத்தை உண்டாக்கிக் காட்டுறேன்”ன்னு சவால் விட்டான்.
கடவுளும், "சரி உன் இஷ்டம். இனி இயற்கை உன் சொல்ப்படி நடக்கும்"ன்னு அவனுக்கு அந்தச் சக்தியைக் கொடுத்தார்.
அன்றிலிருந்து அந்த விவசாயி இட்ட கட்டளைக்கு நிலம், நீர், ஆகாயம், வெப்பம், காற்று எல்லாம் கட்டுப் பட்டுச்சு.
மழை அளவா பெய்ஞ்ச்சு. காற்று மிதமா வீசிச்சு. நிலம் நல்ல விளைச்சலைக் கொடுத்துச்சு. வெப்பம் அளவோடு இருந்துச்சு. பயிர்கள் அமோகமா விளைஞ்சிருப்பதைப் பாத்து அவனுக்குப் பெருமிதம் தாங்கல.
கடவுளைக் கூப்பிட்டு, "பாத்தீங்களா ஆண்டவனே? நான் எப்படி விளைச்சலைப் பெருக்கி இருக்கேன்ன்னு" சொன்னான்.
கடவுளும், "சரி.. அறுவடை செய்" என்று அருகில் நின்று வேடிக்கை பார்த்தார்.
விவசாயி அறுவடை செய்து முற்றிய கதிர்களை உதிர்த்துப் பார்த்தான். நெல் சிதறியது. ஆனால் உள்ளே அரிசி இல்லை. எல்லாமே பதராக இருந்தன. அவன் திகைத்துப் போய் இறைவனை ஏறிட்டுப் பார்த்தான்.
கடவுள் அமைதியாகச் சொன்னார். "இதான் உனக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். நான் புயலைக் கொடுக்கும் போது பயிர் தன் வேரை பலப்படுத்திக்கும். நான் வறட்சியைக் கொடுக்கும் போது தன் வேர்களை நன்றாக பாய விட்டு நீரைத் தேடி வளரும். நான் நீரை அதிகமாகக் கொடுக்கும் போது அதில் வேர்கள் அழுகிப் போகாமல் தன் வேர்க்கால்களை வலுவாக்கிக் கொள்ளும். அதனால் அதன் வளர்ச்சி, எல்லா பருவ நிலைகளுக்கேற்றபடி மாறி நல்லதொரு பலன் கொடுக்கும். பயிராய் அது வளரும்.
ஆனால் நீ வளர்த்த பயிர்கள், சகல வசதியும் சுகமாய் கிடைத்ததும், சோம்பேறியாய் வளர்ந்து பலன் கொடுக்காமல் பதராய் மாறிவிட்டது.
இது விவசாயிக்கு மட்டுமில்லை. நம் குடும்பத்துக்கும் பொருந்தும். பிள்ளைகளுக்குக் குடும்பக் கஷ்டம் தெரியாமல் சுகமாக வளர்த்தால், அவர்களால் குடும்பத்துக்கும் சமுதாயத்துக்கும் எந்தவிதப் பலனும் இருக்காது. ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்து வளர்ந்த பிள்ளைகளே எதிர்காலத்தில் ஏற்றமிகு பலனைத் தருவார்கள்!" என்றார் ஆண்டவன்.

~*~

ஐந்தாண்டு இராஜா...!

ஒரு ஊரில் , ஒரு ராஜா !
ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.
அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.
இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர்'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.
இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக் காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவர் சிறப்பாக மக்கள் போற்றும் படி ஆட்சி செய்ததால் அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது. அவனை காட்டிற்கு அனுப்ப யாருக்கும் விருப்பமில்லா விட்டாலும், சட்டத்துக்கு கட்டுப்பட்டு சோகத்துடன் காத்திருந்தனர்.
மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான்; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''
தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்! நான் மறு கரைக்கு செல்லும் வரை நான்தான் அரசன் தெரியுமல்லவா....? என உத்தரவிட்டான்...!!!''
கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப் பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.
மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.
மிகவும் அதிர்ச்சியடைந்தது படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறு கரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றது இல்லை. அழுது புலம்பி,புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.
படகோட்டி பொறுத்துக் கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''
''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''
''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''
''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''
''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''
''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக் காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!
இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள், காய்கனிகள், மற்றும் வாழ தேவையான அனைத்தும் தயார் செய்தோம்.
மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!
நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.
இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.
இந்தக் கதையில்
ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?
பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.
ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.
இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!
அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல;
நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும், திட்டமிட்ட பின் வெற்றி பெறும் வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே....!!!

~*~

கடன் ...!

வீடு வீடாகப் பொருட்களை வினியோகிக்கும் அந்தச் சிறுவனுக்கு ரொம்பப் பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் அவனிடம் பணமே இல்லை.

அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிடக் கேட்கலாம் என நினைத்தான். கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். அவனுக்கோ சாப்பாடு கேட்க ரொம்பக் கூச்சம்.

‘கொ… கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?’ தயக்கத்துடன் கேட்டான்.

அவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியைக் கவனித்தாள்.

உள்ளே போய் ஒரு கப் பால் கொண்டு வந்து கொடுத்தாள்.
பாலைக் குடித்துப் பசியாற்றிய சிறுவன் கேட்டான், `நான் எவ்வளவு கடன்பட்டிருக்கேன்?’

`கடனா? அப்படியொன்றுமில்லை. அன்பான செயலுக்கு விலை இல்லை என அம்மா சொல்லியிருக்கிறார்…’, அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள்.

‘ரொம்ப ரொம்ப நன்றி…’ சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான்.

ஆண்டுகள் கழிந்தன. அந்த சிறுவன் நகரிலேயே பெரிய டாக்டர் ஆனான். அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது. அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அந்த டாக்டரிடமே அவளுடைய பரிசோதனை வந்தது.

மெடிக்கல் ரிப்போர்ட்டில் அந்தப் பெண்ணின் ஊரைப் படித்ததும் அவருக்குள் சின்ன மின்னல். விரைவாக அறைக்குப் போய் அந்தப் பெண்ணைப் பார்த்தார். அவளேதான். தனது பசியாற்றிய நல்ல உள்ளம் படைத்தவள்.

அன்று முதல் தனது அத்தனை உழைப்பையும் செலுத்தி அவளுக்கு சிறப்பான சிகிச்சை அளித்தார். நீண்ட சிகிச்சைக்குப் பின் அவள் குணமானாள். பல லட்சங்கள் செலவானது. மருத்துவமனை அந்தப் பெண்ணுக்கு ஒரு நீண்ட பில்லை அனுப்பியது. இதை எப்படிக் கட்டப் போகிறேனோ எனும் பதற்றத்துடன் அதைப் பிரித்த அவள் திகைத்துப் போனாள்.

அந்த பில்லின் கடைசியில் எழுதப்பட்டிருந்தது, `ஒரு கப் பாலில் உங்கள் கடன் எல்லாம் தீர்க்கப்பட்டுவிட்டது. இது நன்றி சொல்லும் நேரம்.’ அவளுடைய கண்கள் கசிந்தன.
மனிதனுக்கு இருக்க வேண்டிய மகத்தான குணாதிசயங்களில் ஒன்று நன்றி....

~*~

Monday, 24 August 2015

கோணம் ...!

ஓர் அற்புதமான சிற்பி, ஒருநாள் தெருவில் போய் கொண்டிருந்தவர் ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார்.
ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி, அதன் பின் அந்தக் கடைக்காரரிடம், 'ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா?' என்று கேட்டார்.
'தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள். இது இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க் கிடக்கிறது. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்! என்றார் கடைக்காரர்.
பாறாங்கல்லை உருட்டிச் சென்ற அந்த சிற்பி, அதை நுட்பமாகச் செதுக்கி அற்புதமான கடவுள் சிலை ஒன்றை உருவாக்கினார்.
அந்தச் சிலை கடைத்தெருவில் விலைக்கு வந்தது. போட்டி போட்டுக் கொண்டு மக்கள் அதை விலைக்குக் கேட்டார். அப்படிக் கேட்டவர்களுள் கல்லைக் கொடுத்த கடைக்காரரும் ஒருவர்.
முடிவில் அந்தக் கடைக்காரரே அதிக விலை கொடுத்து அந்தச் சிலையைப் பெற்றுக் கொண்டார்.அந்த சிற்பியை மறந்துவிட்ட அந்தக் கடைக்காரர், 'இந்த அற்புதமான சிலைக்குரிய கல்லை எந்த மலையிலிருந்து எடுத்து வந்தீர்கள்?'… என்று கேட்டார்.
அதற்கு சிற்பி, 'வேறு எங்கிருந்தும் இல்லை. தங்கள் கடை வாசலில் தான் இதைக் கண்டெடுத்தேன். என்னை நினைவில்லையா தங்களுக்கு? ஆறு மாதங்களுக்கு முன் இடையூறாய்க் கிடக்கிறது என்று சொல்லி என்னிடம் நீங்கள் கொடுத்த கல் தான் இது என்றார்.
கடைக்காரர் வியந்தார்.
ஆம். தங்கள் பார்வையில் இது தடைக் கல்லாய்த் தெரிந்தது. என் பார்வையில் கடவுளை பொதிந்து வைத்திருக்கும் சிற்பக் கல்லாய்த் தெரிந்தது. வேண்டாத பகுதியையெல்லாம் செதுக்கி எடுத்தேன். உள்ளே இருந்த கடவுளின் உருவம் வெளிப்பட்டது!' என்றார்.

தேவையற்ற என்ணங்களை வாழ்வில் நீக்கினால் நாமும் விலைமதிப்பற்ற மனிதனாய், ஒவொருவரும் நம்மை போற்றும் வகையில் வாழ்ந்து காண்பிக்கலாம்

~*~

2 ஆப்பிள்

ஒரு அழகிய குட்டி பெண் தன் இரு கைகளிலும் இரண்டு ஆப்பிள்கள் வைத்திருந்தாள் .

அவளது அம்மா உள்ளே வந்து ஒரு புன்னகையுடன் குட்டிப் பெண்னை கேட்டார்: "என் செல்லம் , நீங்கள் உங்கள் அம்மாவுக்கு இரண்டு ஆப்பிள்களில் ஒன்றை கொடுக்க முடியுமா ?"

சில விநாடிகள் தனது அம்மாவை பார்த்துவிட்டு
திடீரென்று குட்டி பெண் ஒரு கையில் உள்ள ஆப்பிளை ஒரு விரைவான கடி கடித்து, மற்றும் ,அடுத்த கையில் உள்ள ஆப்பிளையும் ஒரு கடி கடித்து விட்டாள் .....

அவளின் முகத்தில் இருந்த புன்னகை மாறுவதை .அம்மாவால் உணரவே முடிந்தது ......ஆனாலும் ஏமாற்றத்தை காட்டவில்லை .

அப்பொழுது, சிறு பெண் தனது அம்மாவிடம் கடித்த ஆப்பிள் ஒன்றை நீட்டி சொன்னாள் " இந்தாங்க ...இது தான் மிகவும் சுவையா இருக்கு " ......

நீங்கள் யாராக இருந்தாலும் ,
எவ்வளவு அனுபவ சாலியாக இருந்தாலும் ,
எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும்,
முடிவுகளை சற்றே தள்ளி ........

மற்றவர்கள் தங்கள் கருத்தை விவரிக்க வாய்ப்பு கொடுங்கள் ..
நீங்கள் பார்ப்பது என்றுமே உண்மையாகாது ....

~*~

நேர்மை விதை ...!

ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி தனக்கு வயதாகி விட்டதால் அவர் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். எல்லாரும் தன் அறைக்கு வருமாறு கட்டளை இட்டார். உங்களில் ஒருவர் தான் என் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும், அதனால் உங்களுக்கு ஒரு போட்டி வைக்க போகிறேன். யார் வெற்றியடைகிறார்களோ அவர் தான் அடுத்த மேலாளர் என்றார்.
என் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன இதை ஆளுக்கு ஒன்று கொடுப்பேன். இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரம் இட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக வளர்த்து அடுத்த வருடம் என்னிடம் காட்ட வேண்டும். யார் செடி நன்றாக வளர்ந்து இருக்கிறதோ அவரே என் கம்பெனியின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.
அனைவரும் ஆளுக்கு ஒரு விதை வாங்கி சென்றனர். அந்த கம்பெனியில் வேலை செய்யும் ரபீக்கும் ஒரு விதை வாங்கி சென்றான். தன் மனைவியிடம் முதலாளி சொன்ன அனைத்தையும் சொன்னான். அவன் மனைவி தொட்டியும் உரம் தண்ணீர் எல்லாம் அவனுக்கு கொடுத்து அந்த விதையை நடுவதற்க்கு உதவி செய்தாள்.
ஒரு வாரம் கழிந்தது நிறுவனதில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்து விட்டது என்று பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். ஆனால் ரபீக்கின் தொட்டியில் செடி இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை.
ஒரு மாதம் ஆனது செடி வளரவில்லை, நாட்கள் உருண்டோடின ஆறு மாதங்கள் ஆனது அப்பொழுதும் அவன் தொட்டியில் செடி வளரவே இல்லை. நான் விதையை வீணாக்கிவிட்டேனா என்று புலம்பினான் ஆனால் தினந்தோறும் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தவில்லை. தன் தொட்டியில் செடி வளரவில்லை என்று அலுவலகத்தில் யாரிடமும் சொல்லவில்லை.
ஒரு வருடம் முடிந்து விட்டது எல்லாரும் தொட்டிகளை முதலாளியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள். ரபீக் தன் மனைவியிடம் காலி தொட்டியை நான் எடுத்து போகமாட்டேன் என்று சொன்னான். அவன் மனைவி அவனை சமாதானப்படுத்தி நீங்கள் ஒரு வருடம் முழுக்க உங்கள் முதலாளி சொன்ன மாதிரி செய்தீர்கள். செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியதில்லை. நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் தொட்டியை எடுத்து சென்று முதலாளியிடம் காட்டுங்கள் என்றாள்.
ரபீக்கும் காலி தொட்டியை அலுவலகத்திற்-க்கு எடுத்து சென்றான். எல்லார் தொட்டியையும் பார்த்தான் விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தன. இவன் தொட்டியை பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.
முதலாளி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறு சொன்னார். அருமை எல்லாரும் செம்மையாக செடியை வளர்த்து உள்ளீர்கள் உங்களில் ஒருவர் தான் இன்று பொறுப்பு ஏத்துகொள்ளபோகறீர்கள் என்றார். எல்லாருடைய செடியையும் பார்வை இட்டார். ரபீக் கடைசி வரிசையில் நின்றிருந்தான் அவனை அருகே வருமாறு அழைத்தார்.
ரபீக் தன்னை வேலையை விட்டு நீக்கத்தான் கூப்பிடுகிறார் என்று பயந்து கொண்டே சென்றான். முதலாளி ரபீக்கிடம் உன் செடி எங்கே என்று கேட்டார். ஒரு வருடமாக அந்த விதையை நட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விலாவாரியாக சொன்னான்.
முதலாளி ரபீக்கை தவிர அனைவரும் உட்காருங்கள் என்றார். பிறகு ரபீக் தோளில் கையை போட்டுகொண்டு நமது கம்பெனியின் நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர்தான் என்றார். ரபீக்கிற்க்கு ஒரே அதிர்ச்சி தன் தொட்டியில் செடி வளரவே இல்லை பிறகு ஏன் நமக்கு இந்த பொறுப்பை கொடுக்கிறார் என்று குழம்பிபோனார்.
சென்ற வருடம் நான் உங்கள் ஆளுக்கு ஒரு விதை கொடுத்து வளர்க்க சொன்னேன் அல்லவா அது அனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள் [Boiled seeds]. அந்த விதைகள் அவிக்கப்பட்டதால் அது முளைக்க இயலாது. நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால் அதற்கு பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்து கொண்டு வந்தீர்கள். ரபீக் மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டான், ஆகவே அவனே என் நிறுவனத்தை நிர்வாகிக்க தகுதியானவன் என்றார்.
நாம் சொல்லும் சொல் | நாம் பயணிக்கும் பாதை நேர்மையாக இருந்தால் வெற்றிகள் நம்மைத் தேடி வரும்…!
வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வதும் ஒரு போராட்டம் தான் உண்மையும் நேர்மையும் தர்மத்தை பாதுகாக்கும், நேர்மை ஒரு போதும் வீண்போகாது | நேர்மையை விதையுங்கள் | பதவியும் பணமும் தேடிவரும்....

~*~