Wednesday 26 October 2022

பட்டாம்பூச்சியின் கனவில்

ஒரு ஜென் குரு மிகவும் அமைதி இழந்து, பதற்றத்துடன் காணப்பட்டார்.

சீடர்கள், அவரிடம் கேட்டார்கள். குருவே உங்களுக்கு என்ன ஆயிற்று. ஏன் இப்படி நிம்மதி இழந்து தவிக்கிறீர்கள்.

குரு சீடர்களிடம் சொன்னார் நேற்று இரவு நான் கண்ட கனவில் நான் ஒரு வண்ணத்துப்பூச்சியாக மாறி மலருக்கு மலர் தாவிக் கொண்டிருந்தேன் என்றார்.

சீடர்கள் கேட்டார்கள், குருவே இது ஒரு சாதாரண நிகழ்வு தானே!! இதில் கவலைப்பட என்ன இருக்கிறது.

குரு சொன்னார், 'இல்லை. அதில் ஒரு சிக்கல் இருக்கிறது" அதாவது என்னுடைய கனவில் நான் வண்ணத்துப்பூச்சியாக இருக்கிறேன் என்றால்' இப்போது இங்கு இருக்கும் நான், ஏன் ஒரு வண்ணத்துப்பூச்சியின் கனவாக இருக்கக் கூடாது?.

இப்பொழுது இங்கு இருக்கும் நான், ஒரு வண்ணத்துப்பூச்சியின் கனவாக இருந்து விட்டால்!! அதுதான் என்னுடைய பிரச்சனையும், சிக்கலும்.

சீடர்கள் சிந்தனையில் ஆழ்ந்து விட்டார்கள். அவர்களுக்கும் குழப்பம் ஏற்பட்டது.

உண்மைதானே!! நாம் கனவு காணும் போது கனவில் நடப்பதெல்லாம் உண்மை இல்லை என்று சொல்வதற்கு அங்கு எந்த ஆதாரமும் இல்லை. விழித்து எழும்வரை கனவில் நடப்பதெல்லாம் உண்மையாகவே தெரிகிறது.

அப்படி என்றால் இப்பொழுது இருக்கும் நாம் ஏன் ஒரு கனவாக இருக்கக் கூடாது.

கனவிலும் மகிழ்ச்சி அடைகிறோம்,துக்கம் அடைகிறோம், பயங்கரங்களை சந்தித்து அலருகிறோம்.

விழித்த பிறகும் இவையெல்லாம் நிகழத்தான் செய்கிறது.

உண்மையில் அந்த குரு பதற்றத்தில் இல்லை. அவர் ஒரு விழிப்படைந்த ஞானி.

சீடர்களை சிந்திக்க வைப்பதற்காக அவர் செய்த தந்திரம் இது.

உண்மையாகவே தூங்கும் பொழுது மட்டும் அல்ல. விழித்த பிறகும் நீங்கள் கனவில்தான் இருக்கிறீர்கள்.

*__ஓஷோ.*

No comments:

Post a Comment