Friday, 29 December 2023

மை-என். எஸ். கிருஷ்ணன்

மை...
ஒரு சமயம் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், எழுத்தாளர்கள் மாநாடு ஒன்றில் பேசினார்.

“தற்போதைய எழுத்தாளர்கள் பேனாவை எப்படிப்பட்ட
மையை 
தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா?

சிலர்
தற்பெரு“மை“ யில்
தொட்டு எழுதுகிறார்கள்.

சிலரோ பொறா“மை" யில்
தொட்டு எழுதுகிறார்கள்.

வேறு சிலரோ
பழ“மை“ யில்
தொட்டு எழுதுகிறார்கள்.

பரவாயில்லை.
இவற்றையெல்லாம்
அரு“மை“ யான
எழுத்துக்கள் என்று சொல்லாவிட்டாலும் ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம்.

“ஆனால் எழுத்தாளர்கள் தொடவே கூடாத சில
“மை“கள்
உள்ளன.
இவை என்ன தெரியுமா?

கய“மை“,
பொய்“மை“,
மட“மை“,
வேற்று“மை“ 
ஆகியவைதாம்.

கூட்டத்தில் கைத்தட்டல் எழுந்தது.
“எழுத்தாளர்கள் தொட்டு எழுதவேண்டிய
“மைகள்“
என்னென்ன தெரியுமா?

நன்“மை“ 
தரக்கூடிய
நேர்“மை“,
புது“மை“,
செம்“மை“,
உண்“மை“.
இவற்றின் மூலம் இவர்கள்
நீக்க வேண்டியது
எவைத் தெரியுமா?

வறு“மை“,
ஏழ்“மை“,
கல்லா“மை“,
அறியா“மை“
ஆகியவையே.

இந்த நோக்கத்தையே எழுத்தாளர்கள் தங்கள்
கட“மை“ யாகவும்,
உரி“மை“ யாகவும்
கொண்டு சமூகத்திற்குப்
பெரு“மை“
சேர்க்க வேண்டும்“ என்று பேசி முடித்தார்.

கூட்டத்தில் உற்சாக ஒலி 
விண்ணைப் பிளந்தன.

விருந்து

1.தந்தை ஒருவர் ஒரு பெரிய ஆட்டை வெட்டி நெருப்பினில் வதக்கி, தன் மகளிடம் சொன்னார்.

"மகளே, நம்முடன் சாப்பிட என் நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைக்கவும் ... எல்லோரும் சாப்பிடுவோம் என்றார்.

அவருடைய மகள் தெருவுக்கு வந்து கத்த ஆரம்பித்தாள். 

2.தயவுசெய்து எங்கள் அப்பாவின் வீட்டில் எரியும் தீயை அணைக்க எங்களுக்கு உதவுங்கள்!".

சில நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு சில மக்கள் வெளியே வந்தனர், மீதமுள்ளவர்கள் உதவிக்கான கூக்குரலைக் கேட்காதது போல் செயல்பட்டனர்.

3.வந்தவர்கள் நள்ளிரவு வரை நன்றாக சாப்பிட்டு கொண்டாட்டமாக கழித்தனர்.
 
திகைத்த தந்தை! தன் மகளிடம் திரும்பி, அவளிடம் கேட்டார்.

"வந்த மக்களை எனக்கு தெரியாது, இதுவரை அவர்களைப் பார்த்ததில்லை, எனவே என்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எங்கே?".

மகள் சொன்னாள்.

4.தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்தவர்கள் நம் வீட்டில் எரிவதாக நினைத்த தீயை அணைப்பதர்க்கே அன்றி, விருந்து உண்ண அல்ல. இவர்களே நம்முடைய தாராள மனப்பான்மைக்கும் விருந்தோம்பலுக்கும் தகுதியானவர்கள். "

நீங்கள், வாழ்க்கையில் துன்பப்படுகிறீர்கள் என்று தெரிந்தும்,

5.உங்களுக்கு உதவாதவர்கள், ஒருநாள் நீங்கள் வெற்றி அடையும் போது அந்த மகிழ்ச்சியில் பங்கு கொள்ள எப்படி தகுதியானவர்களாக இருக்கக்கூடும்?

Saturday, 16 December 2023

ஜி. டி. நாயுடு

**நாடு போற்ற தவறிய ஜி.டி.நாயுடு:**

  ஜெர்மானியர்கள் அவருடைய அதிசய 
          பருத்திச்செடிக்கு **நாயுடு காட்டன்** ’ 
     என்ற பெயர் சூட்டி கவுரவித்தனர். 

                        தனி முதலாளியாக இருக்க விரும்பாத நாயுடு வேறு சிலரையும் கூட்டு சேர்த்து கொண்டு யுனைடெட் மோட்டார் சர்வீஸ் என்ற நிறுவனத்தை துவக்கினார்.

                                   அந்நாளிலேயே பயணிகளுக்கான வசதிகள், ஓட்டுனர்களுக்கு தங்கும் இடம் போன்று வசதிகளை செய்து காட்டியவர் நாயுடு.

                   முதன் முதலாக அவருடைய நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்துகள் வந்து, புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்து பேருந்து நிலையங்களில் வைத்து சாதனைப் படைத்தார். 

               பயணச்சீட்டுகள் வழங்குவதற்கு அந்த காலத்திலேயே ஒரு இயந்திரத்தை தன்னுடைய தொழிற்சாலையிலேயே தயாரித்து பயன்படுத்தினார்.

                   இத்தகைய கண்டுபிடிப்புகள் நாயுடுவிற்கு கைவந்த கலையாகும். பல்கலைக்கழகப் படிப்பில்லாதிருந்தும் அறிவியல் துறையில் அவர் படைத்த சாதனைகள் பல.

                     மோட்டார் ரேடியேட்டருக்கு இணையான ஒரு இயந்திரத்தை கண்டுபிடித்தன் மூலம் ரேடியேட்டருக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் அவருடைய பேருந்துகளுக்கு இருந்ததில்லை.

    எஞ்சின் ஓடிக்கொண்டிருக்கும்போதே அதன் அதிர்வு விகிதம் அதிகமா, குறைவா என்பதைக் கண்டுபிடிக்க (அதிர்வு சோதிப்பான்) Vibrator Tester என்ற இயந்திரத்தையும் கண்டுபிடித்து.,

              அயல்நாட்டு விஞ்ஞானிகளுக்கு இணையாக நம் நாட்டிலும் அறிவியல் துறையில் சாதனைப் புரிய இயலும் என்று உலகுக்கு நிரூபித்தவர் நாயுடு.

                 அவர் செய்து வந்த மோட்டார் வாகனத் துறைக்கு முற்றிலும் மாறுபட்ட துறைகளிலும் அவருடைய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன.

                          புகைப்படத் துறையில் பிற்காலத்தில் மிகவும் உதவியாயிருந்த டிஸ்டன்ஸ் அட்ஜஸ்டர் என்ற கருவி, பழச்சாறு பிழிந்தெடுக்க ஒரு கருவி,

              எந்தவித வெட்டுக்காயமுமின்றி முகச்சவரம் செய்துகொள்ள பிளேடு என அவருடைய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன.

              நாயுடு தயாரித்த பிளேடுகளைத் தானே தயாரித்துக்கொள்ள ஒரு அமெரிக்க நிறுவனம் விருப்பம் தெரிவித்து .,

              அதன் காப்புரிமத்தை ஒரு லட்சம் டாலருக்கு விற்கும்படி கேட்டும் அவர் சம்மதிக்கவில்லை. 

                   தமிழகத்திலேயே அவற்றை தயாரிக்கும் எண்ணத்தில் அதற்கு தேவையான எஃகை நார்வே நாட்டிலிருந்து தருவிக்க பெரும் முயற்சியெடுத்தார். 

                          ஆனால் அவரது முயற்சி கைகூடவில்லை. அதனால் நாயுடுவின் அரும்பெரும் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமம் செய்ய முடியாமலே போய்விட்டன.

              1936-ம் ஆண்டுஜெர்மன் நகரில் நடைபெற்ற பொருட்காட்சியில் அவருடைய கண்டுபிடிப்புகளில் ஒன்றான பிளேடுக்கு மூன்றாவது பரிசு.

                 ஜெர்மன் நகரில் நடைபெற்ற பொருட்காட்சியில் அவருடைய கண்டுபிடிப்புகளில் ஒன்றான சவரக் கத்தி, 

            பிளேடு ஆகியவற்றிற்கு முறையே முதல் பரிசும், மூன்றாவது பரிசும் கிடைத்தன. 

                "பல நிறுவனங்கள் இவருடைய கண்டுபிடிப்புகளுக்கு உரிமையைக் கேட்டும் வழங்க மறுத்து அவற்றை நம் நாட்டிலேயே தயாரிக்க இந்திய அரசிடம் நிதியைக் கோரினார்.

                இந்திய அரசாங்கம் அவருடைய கோரிக்கைக்கு செவிமடுக்காததால் அதுவும் செயல்படுத்தப்படாமல் போனது. இதனால் மனம் உடைந்துப்போன நாயுடு,

                         ஒரு அமெரிக்க நிறுவனம் அவருடைய கண்டுபிடிப்பிற்கு பத்து லட்சம் கொடுக்க முன்வந்தும் அதன் உரிமையை இலவசமாகவே வழங்கி விட்டார்.

                    அதற்கு அவர் கூரிய காரணம்: ‘ஒரு அமெரிக்க நிறுவனத்திடமிருந்து பத்து லட்சம் ரூபாயை வாங்கி .,

                  இந்திய ஆங்கிலேய அரசுக்கு ஒன்பது லட்சம் வரி செலுத்துவதைவிட இலவசமாக கொடுப்பதே மேல்.

                         மேலும், தன்னால் கண்டுபிடிக்கப்பட்டவைகள் எல்லாம் தம் தேசத்திற்கு முழுவதும் சொந்தமாக வேண்டும் என்ற எண்ணத்தில்தான்.,

                  அவற்றை தன் பெயரில் பதிவு செய்து கொள்ளாமல் வைத்திருக்கிறேன் என்றும் இந்தியர்கள் யாராயிருந்தாலும் அவற்றை இலவசமாக பயன்படுத்தலாம் என்றும் பகிரங்க அறிக்கை விட்டார்.

       நாயுடுவின் கண்டுபிடிப்புகள் பலவும் அதிக அளவில் நாட்டுக்கு பயன்படாமல் போனதற்கு .,

         வேறொரு காரணம் அன்றைய அரசு அவர்மேல் திணித்த அதிகபட்ச வரி. 

               அன்றைய சூழலில் நாட்டிலேயே அதிக வரி செலுத்தியவர்களில் ஒருவராயிருந்தும் அவர்மேல் வரி ஏய்ப்பு செய்பவர் என்ற அவப்பெயரும் சுமத்தப்பட்டது.

             எனவே, மனம் உடைந்துப் போன நாயுடு அரசாங்கத்துக்கு கொடுப்பதை காட்டிலும் வெறுமனே இருந்துவிட்டு போய்விடுவேன். 

                 இனி ஒரு பைசா கூட வருமான வரியென்ற பெயரால் செலுத்த மாட்டேன், என்று சபதமெடுத்தார்.

                    அவருடைய கண்டுபிடிப்புகள் இயந்திர, மோட்டார் தொழிலில் மட்டுமல்லாமல் விவசாயத்திலும் பல வியக்கத்தக்க சாதனைகளைப் புரிந்தார்.

                விதைகளில்லா நார்த்தங்காய், ஆரஞ்சு பழம் ஆகியவை இவருடைய கண்டுபிடிப்புகளில் சில. 

          அடுத்து, சோளச்செடிகளுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தி நட்ட சிறிது காலத்திலேயே 26 கிளைகளுடன் 18 1/2 அடி உயரத்திற்கு வளரச் செய்தார்! 

           சாதாரண சோளச்செடியில் மூன்று அல்லது நான்கு கதிர்கள்தான் இருந்தன. ஆனால் நாயுடுவின் அதிசய செடிகளில் 39 கதிர்கள்வரை இருந்தன!

                       அதன் பிறகு பருத்திச்செடி, துவரைச்செடி என அவருடைய ஆராய்ச்சி தொடர்ந்தது.

                        அவர் கண்டுபிடித்த தாவர ஆராய்ச்சி அமெரிக்கர்களையே பிரமிக்க வைத்தன. 

                     **ஜெர்மானியர்கள அவருடைய அதிசய பருத்திச் செடிக்கு ‘நாயுடு காட்டன்’ என்ற பெயர் சூட்டி கவுரவித்தனர்.** 

      ஆயினும் அன்றைய இந்திய அரசாங்கம் அவரை கண்டு கொள்ளவேயில்லை.

Sunday, 19 November 2023

தமிழ் சித்த மருத்துவம்

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் , 
இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும், 

இப்பாடல் 
அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்
    தமிழ் மருத்துவ அறிவுரைப்பா
 
மூளைக்கு வல்லாரை
  முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
   எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
  பசிக்குசீ ரகமிஞ்சி
கல்லீரலுக்கு கரிசாலை
  காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
  காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
  தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
  நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய் 
  மூட்டுக்கு முடக்கறுத்தான் 
அகத்திற்கு மருதம்பட்டை
  அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு எள்ளெண்ணை
  உணர்ச்சிக்கு நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
   கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
  களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
  குரலுக்கு தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
  வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு தாமரைப்பூ
  சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

 கக்குவானுக்கு வசம்புத்தூள்
  காய்ச்சலுக்கு நிலவேம்பு                           
விக்கலுக்கு மயிலிறகு
   வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
  நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ  
   வெட்டைக்கு சிறுசெருப்படையே 

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
  சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
   நஞ்செதிர்க்க அவரிஎட்டி 

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
    குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
  பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு எலுமிச்சைஏலம்
  கழிச்சலுக்கு தயிர்சுண்டை 
அக்கிக்கு வெண்பூசனை
  ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
   விதைநோயா கழற்சிவிதை 
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
  புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
  கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
  கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
   உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
   உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
  அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
  அறிந்தவரை உரைத்தேனே!!

Tuesday, 10 October 2023

பெரிய பிரச்சினை எளிய தீர்வு

ஒருத்தனுக்கு ஒரு பயங்கரமான பிரச்சினைங்க. நெட் ல தேடிப்பிடிச்சு ஒரு நல்ல சைக்கிரியாட்ரிஸ்ட் கிட்டே போய் விசயத்தச் சொன்னான்.

" டாக்டர் ஐயா, எனக்கு டெய்லி நைட் படுக்கறப்ப, கட்டிலுக்குக் கீழே ஒரு ஆள் படுத்திருக்கிற மாதிரி தோணும். எட்டிப் பார்த்தா அப்படி யாரும் இல்லே. பயத்துல தூங்கவே முடியறதில்லே. "

டாக்டரு சொன்னாரு..

"தம்பி, சரி பண்ணிடலாம். 
வாரம் ஒரு தபா வீதம் அஞ்சு செஷன்ஸு என்கிட்டே வாங்க.  
சரி பண்ணிடலாம்!" 

"ரொம்பத் தேங்ஸ் டாக்டர். 
எவ்வளவு பீஸு?"

" ஓரு செஷன்க்கு 2000₹ தான். தம்பி, நான் ஒரிஜினலா கோயம்பத்தூர் பக்கம்தான். மாமியார் ஊருதான் திருச்சி. நீ வேற மதுரை உன் ஊருன்னு சொல்றே. எனக்கு மதுர ரொம்பப் புடிக்கும். அதனாலதான் 2000₹ சொல்றேன். இல்லாட்டி வழக்கமா 2500₹. "

" ஓ அப்டீங்களா? சரிங்க 
டாக்டர் ஐயா. வர்றேன். "

ஆனா பாருங்க.. அப்புறம் அவன் வரவே இல்லே.

ஒரு ரெண்டு மாசம் கழிச்சு ஒரு ப்ளாட்பாரக் கடையில காப்பி சாப்பிடப் போனப்ப டாக்டரு அவனைப் பாக்கறாரு.

" அடடே என்னா தம்பி, 
அப்புறம் வரவே இல்லே? "

"அதுவா டாக்டர் ஐயா. அந்தப் பிராப்ளம் சரியாயிடுச்சு."

" ஓ! அப்டியா,எப்டி சரியாச்சி? "

" நம்ம விருதுநகர் அண்ணாச்சி ஒருத்தரு ஒரு ஐடியா சொன்னாரு. பிரச்சினை போயிடுச்சு. பணமும் லாபம். "

டாக்டருக்கு தலை லேசா சுத்துற மாதிரி இருந்துச்சு.

" என்ன தம்பி சொல்றீங்க? 
வெவரமா சொல்லுங்க! "

" அது ஒண்ணுமில்லீங்க. அண்ணாச்சி கிட்டே அந்தப் பிராப்ளம் பத்தி சொன்னேன். அவரு சொன்னாரு, கட்டிலை வித்துடு. ஒரு பாய் வாங்கி தரைலே விரிச்சுப் படுத்துக்க ன்னாரு. அப்புடியே கட்டிலை 2000 ₹க்கு வித்துட்டு 200₹க்கு பாய் வாங்கிட்டேன். இப்ப பாய்லதான் படுக்கிறேன். அந்த பயமெல்லாம் வர்றதில்லே. "😄

சிம்பிளா யோசிச்சா தான் பல பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

Friday, 22 September 2023

உழைப்பு

மாதம்தோறும் உழைக்காமலேயே அது ஏழை மக்கள் என்றாலும் இலவசமாக பணம் கொடுக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தினால் என்னவாகும் ? என்று படிக்காத மேதை காமராஜர் அந்த காலத்திலேயே ஒரு நிகழ்ச்சியில் தெளிவாக பேசி உள்ளார்.

பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்த காலம்.

தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை நீரேற்று நிலையத்தில் ஒரு நிகழ்ச்சி...

நிகழ்ச்சியில் படிக்காத மேதை காமராஜர் தனக்கே உரிய பாணியில் பேசியது ....

நாட்ல இருக்கிற எல்லாருக்கும் பணம் வேணும்.....

ஏதாச்சும் இயலாமையை சொல்லி அரசாங்கம் பண உதவி பண்ணனும் என்று கேட்கிறாங்க...எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை....

பண நோட்டு அடிக்கிற மிஷின் எங்க கிட்டேதான் இருக்கு.....

எவ்வளவு வேண்டுமானாலும் அச்சடிக்கலாம்னேன்..

அடிச்சு உங்கள் இஷ்டப்படியே ஆளுக்கு ஒரு மூட்டை பணம் கொடுத்துடுவோம்னேன்...

இப்போ பணம் இல்லாதவங்களே நாட்டிலே கிடையாது....

கொஞ்ச நாள் கழிச்சு கடைத்தெரு போனீன்னா எல்லா கடையும் பூட்டி கெடக்கும்...அரிசி பருப்பு உப்பு புளி, மொளகா, எண்ணெய் -ன்னு ஒன்னும் கெடைக்காது. விவசாய வேலைக்கு ஆள் வராது... ஒரு வேலைக்கும் ஒருத்தனும் வரமாட்டான்...
எப்படி வருவான்னேன்.....?

பணம் வேணும்னு உழைக்கிறாங்க....
கட்டு கட்டா பணம் இருக்கும் போது எவன்தான் வேலைக்கு வருவான்...?

பணத்தை தலைமாட்டில் வச்சுக்கிட்டு வயித்துல ஈரத் துணியை போட்டு கிட்டு கெடக்க வேண்டியதுதான்...!

ஊரே தூக்கம் வராம கெடக்கும்....

இப்போ அது மதிப்புள்ள பணம் காசு இல்லை.... வெத்து பேப்பர்தான்னேன்....
உழைப்புதான் பணம்ன்னேன்...

பொருளாதாரத்திற்கு ஆதாரமே உழைப்புதான்....

உழைப்பு இல்லாமல் ஒன்னுமே கெடைக்காது.... ஒன்னுமே கெடையாது....
இப்ப தெரிஞ்சுதா...?

உழைப்பு இல்லாமல் கட்டு கட்டா பணம் குடுத்தால் நாட்டோட பொருளாதாரமே சீர்கெட்டு கதை கந்தலாகி போகும்னேன்..."

இது பொருளாதார படிப்பு படிக்காமல் நாட்டு நிலையையும் நாட்டு மக்கள் நாடித்துடிப்பையும் படிச்ச ஒரு பாமர மனுஷன், படிக்காத மேதை ... சொன்னது.

Thursday, 21 September 2023

duck or eagle ypu decide

நண்பர் வெளியூர் செல்ல Call Taxi 
ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

அவர் கவனித்தது காரின் பின்னால் ஓட்டியிருந்த ஆங்கில வாக்கியம்.

*Duck or Eagle
You decide*

அடுத்து அவர் கவனத்தை 
கவர்ந்தது (Clean and shiny)பளிச்சென்று சுத்தமாக இருந்த கார்.

டிரைவர் நல்ல வெள்ளையுடை அணிந்து பளிச்சென்று புன்னகையுடன் இருந்தார்.

அவரே வந்து கார் கதவை திறந்து 
நண்பரை அன்போடு அமர சொன்னாராம்.

அழகான டிரைவிங். கேட்டதற்கு 
மட்டும் தெளிவான பதில்.

நண்பர் அந்த ஓட்டுனரின் அழகிய செயல்களால் மிகவும், கவரப்படார்.

பொதுவாக Call Taxi டிரைவர்கள் சற்று இறுக்கமாகவே இருப்பார்கள். பயணம் முடிந்தவுடன் அவர் யாரோ? நாம் யாரோ? என்ற கண்ணோட்ட்த்தோடு.

இந்த டிரைவர் மிகவும் வித்தியாசமாக கண்ணியமாக நட்போடு இருந்தார்.
பட்டதாரியும் கூட.

அவரிடம் எப்போதுமே நீங்கள் இப்படித்தானா? என்று நண்பர் கேட்டிருக்கிறார்.

இல்லை சார். நானும் மற்ற டிரைவர்ஸ் 
போல்தான் இருந்தேன். சத்தம் போட்டு கொண்டு.குறை கூறி கொண்டு "என்றார்.

எப்படி உங்களை நீங்களே மாற்றி கொண்டீர்கள்? என்று நண்பர் கேட்டிருக்கிறார்.

ஒரு Client seminar ஒன்றிற்கு சென்றார் . சும்மா டாக்ஸியில் அமர்ந்திருப்பதற்கு கேட்கலாமே, என்று உள்ளே நுழைந்தேன். அந்த seminar என்னை மாற்றி விட்டது" என்றார்.

என்ன Seminar?

உங்களை நீங்களே உயர்த்திக் 
கொள்வது எப்படி ?

என்ன சொன்னார்கள்?

பல அறிவுரைகள். என்னை மிகவும்
கவர்ந்தது இதுதான்.

காலையில் எழுந்திருக்கும் போதே
இந்த நாள் சரியாக இருக்காது என்று எதிர்மறை சிந்தனையோடு எழுந்தால் அந்த நாள் கண்டிப்பாக நன்றாக இருக்காது."

இதையே ஆங்கிலத்தில் சொன்னார்கள்.
அப்போதுதான் அதன் ஆழம் புரிந்தது.

*If you get up in the morning 
expecting a bad day,you will.

Don't be a Duck
Be an Eagle*

*The ducks only make noise and complaints.
The eagles soar above the group*.

அந்த அறிவுரை என்னை
மிகவும் கவர்ந்தது.

என்னை நானே சுய பரிசோதனை
செய்து கொண்டேன்.

நான் Duck போல இருப்பதை உணர்ந்தேன். ஏன் Eagle போல இருக்க கூடாது என்று எண்ணினேன். என்னை நானே மாற்றி கொண்டேன் என்றார்.

எல்லா Customer இடமும் அன்போடு பணிவாக நடந்து கொள்ள ஆரம்பித்தேன்.

மன அமைதி மட்டுமல்ல. என் வருமானமும் பெருகியது. Always my taxi busy.ஒரு முறை பயணம் செய்தவர்கள், என்னையே அழைக்க ஆரம்பித்தார்கள்" என்றார்.

நண்பர் சொன்னபோது எனக்கே
அவரை பார்க்க வேண்டும் போல்
இருந்தது.

அவர் சொன்னது உண்மைதான். 

எந்த வேலையாக இருந்தாலும்,
நாம் நடந்து கொள்ளும் நடத்தையும்,அர்ப்பணிப்பு உணர்வுமே,
(behaviour and involvement) நம்மை உயர்த்தும். 

உயர உயர வாழ்வில்
Eagle போல பறக்க வைக்கும்.

இப்பொழுது நம் முன்னால் 
இருக்கும் ஒரே கேள்வி :

நாம் எப்படி வாழ வேண்டும்?
Duck or Eagle ?

முடிவு எடுக்க வேண்டியது நாமே.

நல்ல நண்பனாக, நல்ல சகோதரனாக, 
நல்ல அப்பாவாக, நல்ல கணவனாக, 
நல்ல அம்மாவாக, நல்ல மனைவியாக, குறிப்பாக நல்ல குடிமகனாக மாறுவது
எல்லாமே நம் கையில்தான்.

பயணிக்க போவது சிறிது காலமே. அனைவரிடமும் அன்பை செலுத்துவோம். அன்பை பெறுவோம். நம்மை நாமே 
உயர் சிந்தனையால் Eagle போல 
வானத்தை நம் நல்லெண்ண 
சிறகுகளால் அளப்போம்.❤️🔔