Saturday 25 July 2015

உண்மையான வீரன்




சிவாஜியின் படைகள் ஒரு முறை ஒரு பிராந்தியத்தை கைப்பற்ற நடைபெற்ற போரில் அதை ஆண்டு வந்து சுல்தான் ஒருவனை தோற்கடித்தன. அவனது கோட்டையையும் கைப்பற்றின.

அப்போதெல்லாம் யுத்தத்தில் வெற்றி பெற்றால் சம்பந்தப்பட்ட பட்டத்து இளவரசிகளையும் ராணிகளையும் கவர்ந்து சென்றுவிடுவார்கள். வெற்றி பெறும் மன்னனோ சுல்தானோ விரும்பினால் அவளை அவனுக்கு விருந்தாக்கிவிடுவார்கள். இங்கே சிவாஜியின் படை வெற்றி கொண்ட சுல்தானின் மனைவி பேரழகி. அவளது அழகு அந்த பிராந்தியத்திலேயே மிகவும் பிரசித்தம். எனவே சிவாஜியின் படைத் தளபதி மற்றும் வீரர்கள் தம் மன்னனின் மனமும் உடலும் குளிரட்டும் என்று எண்ணி, அவளை சிறைபிடித்து கடுங்காவலுக்கிடையே பல்லக்கில் ஏற்றி அவளை கொண்டு வந்து அவள் தப்பிக்க முடியாதபடி சிவாஜியின் அந்தப் புறத்திற்கு வெளியே விட்டுவிடுகின்றனர்.

அன்றிரவு தூங்கச் செல்லும் சத்ரபதி சிவாஜி, தனது அறைக்கு வெளியே பல்லக்கு இருப்பதை பார்த்து, “பல்லக்கில் இருப்பது யார்?” என்று தனது தளபதியிடம் கேட்க, “மன்னா இவள் சுல்தானின் மனைவி. பார் போற்றும் பேரழகி. இவள் அழைகை கண்டு மயங்காதவர்களே இந்த பிரதேசத்தல் இருக்க முடியாது. எனவே இன்றிரவு இவளை உங்களுக்கு விருந்தாக்கலாம் என்று எண்ணியே இங்கே கொண்டு வந்தோம்” என்று கூறுகிறான்.

சிவாஜி நேரே பல்லக்கு அருகே செல்கிறார். பல்லக்கின் திரைச் சீலையை விலக்கி பார்க்கிறார்… ஏற்கனவே அச்சத்தில் இருந்த சுல்தானின் மனைவி மருண்ட விழிகளோடு சிவாஜியை பார்க்கிறாள்.

சிவாஜியோ, “அம்மா…. நீங்கள் உண்மையில் மிகவும் அழகு தான். உங்கள் வயிற்றில் ஒருவேளை நான் பிறந்திருந்தால் நானும் அழகாக பிறந்திருப்பேன்….!” என்று கூறுகிறார். சிவாஜியின் தளபதி முதல் படைவீரர்கள் வரை அனைவரும் வெட்கித் தலைகுனிகின்றனர். சுல்தானின் மனைவி அந்த வீரமகனை. கையெடுத்து கும்பிடுகிறாள்.

தனது தளபதியை சினந்துகொண்ட சிவாஜி, “பெண்கள் நம் நாட்டில் தெய்வமல்லவா? இப்படி ஒரு காரியத்திற்கு எப்படி துணிந்தீர்கள்? பொன்னாசை, மன்னாசையைவிட கொடியது பெண்ணாசை. மாபெரும் சாமாராஜ்ஜியங்களையே இது தரை மட்டமாக்கியிருக்கிறது. இனி இப்படி ஒரு இழி செயலை கனவிலும் செய்யத் துணியாதீர்கள். முதல் வேலையாக இவர்களை கொண்டு போய் இவர் விரும்பும் இடத்தில் விட்டுவிட்டு வாருங்கள்” என்று கட்டளையிடுகிறார்.

இந்த உலகில் உள்ள மக்கள் பெரும்பாலானோர் இரண்டே வகைகளில் அடங்கிவிடுவர்.
1) கெட்டவர்கள்
2) சந்தர்ப்பம் கிடைக்காத நல்லவர்கள்.

எந்த சூழ்நிலையிலும் குணம் மாறாது நல்லவர்களாக இருப்பவர்கள் மிக மிக அரிது.

நாம் என்றும் எந்த சூழ்நிலையிலும் நல்லவர்களாக மட்டுமே இருப்போம். திருவருள் துணை புரியட்டும்.

~*~

No comments:

Post a Comment