Saturday, 25 July 2015

தாய்மை...

இரவு 12 மணிக்கு சாலையில் ஓர் வாடகை கார் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, அந்த காரை கையசைத்து நிறுத்தினார்.

"தம்பி ஆஸ்பத்திரி போகணும்"

"நான் வரமுடியாது. சாப்பிட்டுட்டு, படுக்கப் போறேன்".

"என் மகளுக்கு பிரசவவலி வந்து விட்டது, தயவுசெய்து வரமாட்டேன்னு சொல்லிடாதேப்பா"என்றார் அப்பெண்மணி.

"நீங்க இவ்வளவு சொல்றதாலே வர்றேன். 500 ரூபா ஆகும்" என்றான் அந்த கார் ஓட்டும் இளைஞன்.

அப்பெண்மணி 500 ரூபா என்ன 1000 ரூபாய் கேட்டால் கூட தர சம்மதம் என்பதுபோல் வேகவேகமாக தலையாட்டி சம்மதிக்க, கார் அவர்களுடன் மருத்துவமனைக்கு விரைந்தது.

கார் ரெயில்வே கேட்டை நெருங்கவும், எச்சரிக்கை மணி ஒலிக்க கேட் மூடப்பட்டது. அக்கர்ப்பிணியின் முனகல் சற்று அலறலாக மாறியது. இரண்டு ரெயில் வண்டிகள் எதிர் எதிர் திசையில் கடக்க, பத்து நிமிடத்தில் கேட் திறந்தது.

இப்போது கார் இன்னும் சற்று வேகமாக ஓடி மருத்துவமனையில் நின்றது. நடுநிசியின் நிசப்தத்தைக் கிழித்தது அப்பிரசவத் தாயின் அலறல். மூடிய விழிகளில் நீர் மல்க, அந்த நடுத்தர வயதுப் பெண்மணி கைகளைக் கூப்பி மகளுக்காக இறைவனிடம் வேண்டினாள்.

அந்த கார் இளைஞனும் அமைதியாக அங்கே நின்றிருந்தான்.

சற்று நேரத்தில் மருத்துவர் வந்து சுகப்பிரசவம் நடந்துள்ளது. ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்தார். 

இந்த தாய் கார் இளைஞரிடம் "தம்பி! ரொம்ப நன்றிப்பா. இந்தா நீ கேட்ட பணம்" என பணத்தை நீட்டினாள் அப்பெண்மணி.

"வேணாம்மா. எங்கம்மா என்னைப் பெற எவ்வளவு வேதனைப்பட்டிருப்பாங்கன்னு இறைவன் எனக்கு புரிய வச்சிட்டார். பணத்தை நீங்களே வைங்க" என்று சொன்னபடி நடக்க ஆரம்பித்தான்.

ஏதோ யோசிக்க போனை எடுத்து ஒரு நம்பரை கண்டுபிடித்து டயல் பண்ணினான்.

"ஹலோ முதியோர் இல்லமா?"

"ஆமா என்ன இந்த நேரத்துல போன் பண்ணுறீங்க?"

"மன்னிக்கவும். நாளு நாளைக்கி முன்னாடி அனாதைன்னு சொல்லி ஒருத்தவங்கள உங்க இல்லத்துல சேர்த்தேன்.. இல்லையா? 

அவுங்க அனாதை இல்லை என்ன பெத்த தாய். நாளைக்கு காலையிலே வர்றேன் அவுங்கள கூட்டிட்டு போக" முதியோர் இல்ல பொறுப்பாளரின் அனுமதியைக் கூட கேட்காமல் மொபைலை கட் பண்ணி விட்டு வண்டியை தீர்க்கமான முடிவோடு ஸ்டார்ட் செய்தார் .

'ஆம். நிஜத்தை தரிசிக்கும் ஒவ்வொரு இதயமும்... ஒரு மனிதனைப் பிரசவிக்கிறது'.

~*~

உண்மையான வீரன்




சிவாஜியின் படைகள் ஒரு முறை ஒரு பிராந்தியத்தை கைப்பற்ற நடைபெற்ற போரில் அதை ஆண்டு வந்து சுல்தான் ஒருவனை தோற்கடித்தன. அவனது கோட்டையையும் கைப்பற்றின.

அப்போதெல்லாம் யுத்தத்தில் வெற்றி பெற்றால் சம்பந்தப்பட்ட பட்டத்து இளவரசிகளையும் ராணிகளையும் கவர்ந்து சென்றுவிடுவார்கள். வெற்றி பெறும் மன்னனோ சுல்தானோ விரும்பினால் அவளை அவனுக்கு விருந்தாக்கிவிடுவார்கள். இங்கே சிவாஜியின் படை வெற்றி கொண்ட சுல்தானின் மனைவி பேரழகி. அவளது அழகு அந்த பிராந்தியத்திலேயே மிகவும் பிரசித்தம். எனவே சிவாஜியின் படைத் தளபதி மற்றும் வீரர்கள் தம் மன்னனின் மனமும் உடலும் குளிரட்டும் என்று எண்ணி, அவளை சிறைபிடித்து கடுங்காவலுக்கிடையே பல்லக்கில் ஏற்றி அவளை கொண்டு வந்து அவள் தப்பிக்க முடியாதபடி சிவாஜியின் அந்தப் புறத்திற்கு வெளியே விட்டுவிடுகின்றனர்.

அன்றிரவு தூங்கச் செல்லும் சத்ரபதி சிவாஜி, தனது அறைக்கு வெளியே பல்லக்கு இருப்பதை பார்த்து, “பல்லக்கில் இருப்பது யார்?” என்று தனது தளபதியிடம் கேட்க, “மன்னா இவள் சுல்தானின் மனைவி. பார் போற்றும் பேரழகி. இவள் அழைகை கண்டு மயங்காதவர்களே இந்த பிரதேசத்தல் இருக்க முடியாது. எனவே இன்றிரவு இவளை உங்களுக்கு விருந்தாக்கலாம் என்று எண்ணியே இங்கே கொண்டு வந்தோம்” என்று கூறுகிறான்.

சிவாஜி நேரே பல்லக்கு அருகே செல்கிறார். பல்லக்கின் திரைச் சீலையை விலக்கி பார்க்கிறார்… ஏற்கனவே அச்சத்தில் இருந்த சுல்தானின் மனைவி மருண்ட விழிகளோடு சிவாஜியை பார்க்கிறாள்.

சிவாஜியோ, “அம்மா…. நீங்கள் உண்மையில் மிகவும் அழகு தான். உங்கள் வயிற்றில் ஒருவேளை நான் பிறந்திருந்தால் நானும் அழகாக பிறந்திருப்பேன்….!” என்று கூறுகிறார். சிவாஜியின் தளபதி முதல் படைவீரர்கள் வரை அனைவரும் வெட்கித் தலைகுனிகின்றனர். சுல்தானின் மனைவி அந்த வீரமகனை. கையெடுத்து கும்பிடுகிறாள்.

தனது தளபதியை சினந்துகொண்ட சிவாஜி, “பெண்கள் நம் நாட்டில் தெய்வமல்லவா? இப்படி ஒரு காரியத்திற்கு எப்படி துணிந்தீர்கள்? பொன்னாசை, மன்னாசையைவிட கொடியது பெண்ணாசை. மாபெரும் சாமாராஜ்ஜியங்களையே இது தரை மட்டமாக்கியிருக்கிறது. இனி இப்படி ஒரு இழி செயலை கனவிலும் செய்யத் துணியாதீர்கள். முதல் வேலையாக இவர்களை கொண்டு போய் இவர் விரும்பும் இடத்தில் விட்டுவிட்டு வாருங்கள்” என்று கட்டளையிடுகிறார்.

இந்த உலகில் உள்ள மக்கள் பெரும்பாலானோர் இரண்டே வகைகளில் அடங்கிவிடுவர்.
1) கெட்டவர்கள்
2) சந்தர்ப்பம் கிடைக்காத நல்லவர்கள்.

எந்த சூழ்நிலையிலும் குணம் மாறாது நல்லவர்களாக இருப்பவர்கள் மிக மிக அரிது.

நாம் என்றும் எந்த சூழ்நிலையிலும் நல்லவர்களாக மட்டுமே இருப்போம். திருவருள் துணை புரியட்டும்.

~*~