Tuesday, 14 December 2021

நாவிதன்

"என்னப்பா! முடி வெட்ட எவ்வளவு? சவரம் பண்ண எவ்வளவு?" என்றார்...

 அவரும், "முடிவெட்ட நாலணா, சவரம் பண்ண ஒரணா சாமி!" என்று பணிவுடன் கூறினார்...

 பண்டிதர் சிரித்தபடியே,
"அப்படின்னா, என் தலையை சவரம் பண்ணு..." என்று கூறிவிட்டு வெற்றிப் புன்னகையோடு அமர்ந்தார்...

வயதில் பெரியவர் என்பதால் நாவிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை...

 வேலையை ஆரம்பித்தார்...

'நாவிதர் கோபப்படுவார்' என்று எதிர்பார்த்திருந்த
பண்டிதருக்கு சற்று ஏமாற்றந்தான்...

பின்னர், பண்டிதர் அடுத்த கணையைத் தொடுத்தார்...

"ஏன்டாப்பா ! உன் வேலை முடி வெட்டுறது... 
உன் கைகளைத்தான் பயன்படுத்தி வெட்டுறே... அப்புறம் எதுக்கு சம்மந்தமில்லாம உன்னை நாக்கோட சம்மந்தப் படுத்தி நாவிதன்னு சொல்றாங்க...?"

இந்தக் கேள்வி நாவிதரை நோகடிக்குமென்று நம்பினார். ஆனால் நாவிதர் முகத்திலோ புன்னகை.
            
"நல்ல சந்தேகங்க சாமி... 
நாங்க தொழில் செஞ்சா மாத்திரம் பத்தாது. 
முன்னால உக்காந்து இருக்கறவங்களுக்கு அலுப்புத் தட்டாம இருக்க, நாவால இதமா நாலு வார்த்தை பேசுறதனால தான் நாங்க நாவிதர்கள்...
எங்க பேச்சைக் கேக்குறதுக்குன்னே எத்தனை பேர் எங்களைத் தேடி வராங்க தெரியுமா...?" 

இந்த அழகான பதில் பண்டிதரை மேலும் கடுப்பேற்றியது.

அடுத்த முயற்சியைத் துவங்கினார்...
"இதென்னப்பா, கத்தரிக் கோல்னு சொல்றீங்க. கத்தரி மட்டுந்தானே இருக்கு... கோல் எங்கே போச்சு?''

இந்தக் கேள்விக்கு பலமான சிரிப்பு மட்டுந்தான் பதிலாக வந்தது நாவிதரிமிருந்து.
 
"சாமி ரொம்ப சிரிப்பா பேசுறிங்க..." என்று சொல்லி நிறுத்திக் கொண்டார்...

இதிலும் பண்டிதருக்கு ஏமாற்றம். 
கொஞ்சம் கடுமையாகவே ஆரம்பித்தார்...

"எப்பப் பாத்தாலும் வெட்டித் தள்ளிக்கிட்டே இருக்குற...
ஊர்லயே நீ தான் பெரிய வெட்டிப் பய போலருக்கு..." 

இந்த வார்த்தை நாவிதர் மனதைக் கொஞ்சம் காயப்படுத்திவிட்டது...

அவர் முகத்தில் கொஞ்சம் வித்தியாசம்...

இதைத்தானே பண்டிதரும் எதிர்பார்த்தார். 

கொஞ்சம் உற்சாகமாகி அடுத்த நக்கலை யோசித்துக் கொண்டிருந்தார்....

இப்போது நாவிதர் பேச ஆரம்பித்தார்... பண்டிதரின் பிரியமான மீசையைத் தொட்டுக் காட்டிக் கேட்டார்,
"சாமிக்கு இந்த மீசை வேணுங்களா?" 
பண்டிதர் உடனே, "ஆமாம்..." என்றார்...

கண்ணிமைக்கும் நேரத்தில் பண்டிதரின் மீசையை வழித்தெடுத்து அவர் கையில் கொடுத்து,
"மீசை வேணுமுன்னிங்களே சாமி! இந்தாங்க..."

பல வருடங்கள் ஆசையாய் வளர்த்த மீசை இப்போது வெறும் மயிர்க் கற்றையாய்...

அதிர்ச்சியில் உறைந்து போனார் பண்டிதர்...

நாவிதரோ அடுத்த நடவடிக்கையில் இறங்கினார். 

அவரது அடர்த்தியான புருவத்தில் கை வைத்தபடிக் கேட்டார்,
"சாமிக்கு இந்தப் புருவம் வேணுங்களா...?" 

இப்போது பண்டிதர் சுதாரித்தார்.
'வேணும்னு சொன்னா வெட்டிக் கையிலல்ல குடுத்துடுவான்...' என்ற பயத்தில் உடனே சொன்னார்,
"இந்தப் புருவம் எனக்கு வேண்டாம்... வேண்டவே வேண்டாம்...".

நாவிதர் உடனே பண்டிதரின் புருவங்களையும் வழித் தெடுத்தார்...

"சாமிதான் புருவம் வேண்டாம்னு சொன்னீங்கள்ல? அதைக் குப்பைல போட்டுடுறேன். சாமி பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது..." என்றபடி கண்ணாடியை பண்டிதரின் முகத்துக்கு முன்பாகக் காட்டினார்...

நாற்பது வருஷமாய் ஆசை ஆசையாய் வளர்த்த மீசையில்லாமல்...

முகத்துக்கு கம்பீரம் சேர்த்த அடர்த்தியான புருவமும் இல்லாமல்...

அவருடைய முகம் அவருக்கே மிகுந்த கோரமாக இருந்தது...

கண்கள் கலங்கக் குனிந்த தலை நிமிராமல் ஒரணாவை அவர் கையில் கொடுத்து விட்டு, விரக்தியில் தளர்ந்து போய் நடையைக் கட்டினார் பண்டிதர்...

*"நம்முடைய அறிவும்...*
*புத்தியும்...*
*திறமையும்...*
*அதிகாரமும்...*
*அந்தஸ்தும்...*
*பொருளும்...*
*மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர மட்டம் தட்ட அல்ல..."*

இதை உணராதவர்கள் இப்படித்தான் அவமானப்பட நேரும்...

*தலைக்கனம் நம் தலையெழுத்தை மாற்றி விடும்...*

*இந்த பிரபஞ்சம் அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது...*

*அனைத்து உயிர்களும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தவைகளே...*

*நாம் பெற வேண்டியது நல்ல அனுபவங்களை தவிர வேறோன்றுமில்லை...*

ஆகவே, 
*இறைவனால் படைக்க பட்ட அனைத்து உயிர்களையும் நேசிப்போம்...*
*மதிப்போம்...*
*வாழ்வளிப்போம்...*

நாம் அனைவரும் நலமாக வாழ...

நன்றி சகோதரர் அருள்மணி.(திரு. ராஜ்கிரன் அவர்களின் முகநூல் பக்கத்தில் இருந்து) 

Saturday, 11 December 2021

மகானின் அறிவுறை..

ஒரு பெண் ஒரு மகானிடம்... "என் கணவருக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வருகிறது, என்னை அவர் புரிந்துகொள்ளவதில்லை, தினந்தோறும் எங்களுக்குள் பிரச்சினையாகவே பொழுது விடிகிறது, என் திருமண வாழ்க்கை நிம்மதி பெற எனக்கு ஏதாவது யோசனை சொல்லுங்கள்!" என்றாள்... ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு மகான் சொல்கிறார்...

"ஊருக்கு வெளியே இருக்கும் காட்டில் ஏதாவது ஒரு விலங்கிற்கு 30நாள் உணவு கொடு... 30 நாட்களுக்கு பிறகு என்னை வந்து பார் உன் பிரச்சினைக்கான வழியை சொல்கிறேன்!" என்றார்... குழப்பத்தில் இருந்தவள், "தன் கணவருக்கும் தனக்கும் சண்டையில்லாத நிம்மதியான வாழ்க்கை கிடைத்தால் போது!" என்ற எண்ணத்தில் தைரியத்துடன்... 

மகான் சொல்லியது போல... அடர்ந்த காட்டிற்குள் சென்று தான் கொண்டு வந்த மாமிசத்தை ஒரு இலையில் வைத்துவிட்டு தூரத்தில் ஒரு மரத்திற்கு பின்னால் ஒழிந்து கொண்டாள்... மாமிசத்தின் வாடை காடெங்கும் வீச வெகுநாட்களாக அங்கு இறை கிடைக்காத ஒரு புலிக்கு அந்த உணவு கிடைத்தது... இப்படியே தினமும் மாமிசம் வைப்பது அந்த நேரத்தில் சரியாக புலி வருவது... என நாட்கள் பல ஓடியது... 20நாட்களுக்கு பிறகு அப்பெண் மாமிசம் வைக்கும் அதே இடத்தில் புலி படுத்திருந்தது... 

இப்பெண்ணை கண்டு புலி ஏதும் செய்யவில்லை... பணிவுடன் அப்பெண்ணிடம் பணிந்து போனது... மாமிசத்தை வைத்துவிட்டு அவள் விருட்டென ஓடியேவிட்டாள்... 30வது நாளில் புலியிடமே தைரியமாக சென்று மாமிசம் வைத்தாள், உணவு உண்ட புலி அப்பெண்ணின் மடியிலேயே பாசமாக படுத்துக்கொண்டது...  31வது நாளில் அப்பெண்ணின் பின்னாலே அந்த புலி ஊருக்குள் வந்துவிட்டது புலியை கண்டு மக்கள் தெறித்து ஓட அப்பெண்ணிற்கோ பயமில்லை அந்த புலி  பூனை போல அவள் காலை சுற்றி சுற்றி வந்தது, இது என்ன சோதனை என்று முழி பிதிங்கியவள்... நேராக மகானை சந்திக்க வந்தாள், புலியுடன் வந்த பெண்ணை பார்த்தவர்கள் ஆங்காங்கே தெறித்து ஓடீவிட்டனர்...

"பார்த்தீர்களா குரு! பிரச்சினையை தீர்க்க நான் உங்களிடம் வந்தேன். இப்போது மேலும் ஒரு புதிய பிரச்சினையை எனக்கு உருவாக்கிவிட்டீர்கள், இந்த புலி பூனையாகவே மாறிவிட்டது என் காலை சுற்றி சுற்றி வருகிறது!" என்றாள்... மென்மையாக சிரித்த அந்த மகான்... 

"ஒரு உயிரை கொன்று உண்ணும் இந்த கொடிய விலங்கையே உன் அன்பினால் பூனையாக மாற்றிவிட்டாய், உன் கணவர் இந்த புலியை விடவா கொடிய குணம் கொண்டவர்!" என்றார். 

மகானின் சொல்லில் உண்மை அறிந்தவள், அன்புதான் எல்லாவற்றையும் எல்லோரையும் மாற்றிவிடும் என்பதை உணர்ந்தாள். 

*நேசியுங்கள் நேசிக்கப்டுவீர்கள்.*

அன்பானது உங்களை தனிமையில் விடாது...

அன்பு சகலத்தையும் உருவாக்கும்...

*அன்பாலே உங்கள் வாழ்க்கையை அமையுங்கள்*!

Tuesday, 23 November 2021

நாத்திகனின் தியானம்

ஒரு நாத்திகர் என்னிடம் வந்து, 
"நானும் தியானம் செய்ய முடியுமா?",
என்று கேட்டார்.

நான் சொன்னேன், 
"கடவுளை நம்பினால்தான் தியானம் செய்ய முடியும் என்ற கருத்து நிலவி வருகிறது. அது ஒரு முட்டாள்தனமான கருத்து! தியானத்திற்கும் கடவுளுக்கும் சம்பந்தமே இல்லை" - என்று. 

இன்னும் சொல்லப்போனால், எதையும் நம்பாதவர் எளிதில் எண்ணங்களை கடந்து போய்விட முடியும்.

ஒன்றின் மேல் விசுவாசம் வைத்திருப்பவன், அந்த நம்பிக்கையை பலமாக பற்றிக்கொண்டு இருப்பதால் அந்த நம்பிக்கையே மனதினால் கடக்க முடியாத ஓர் எண்ணமாக மனதில் படிந்து விடுகிறது.  

விசுவாசம் என்பது மனதின் ஒரு பகுதி! நீங்கள் தீவிரமான கடவுள் நம்பிக்கையோடு இருந்தால், உங்களால் மனதை கைவிட முடியாது. 

மனம் தீவிரமாக உள்ள இடத்தில் தியானம் நிகழாது. எனவே அந்த இடத்தில் நீங்கள் "பக்தி" என்ற படிமானத்தை தாண்டி வர வேண்டியுள்ளது. 

கடவுள் நம்பிக்கை இல்லாதவருக்கு உள்ள பக்குவம்,  இந்த  படிமானம் என்கிற தொல்லை இல்லாமல் செய்துவிடுகிறது!!

~~ஓஷோ

Saturday, 16 October 2021

RATTAN TATA

ரத்தன் டாடா சொன்ன வரிகள் .

                           இரும்பை வேறு எந்த பொருளாலும் அழித்துவிட முடியாது. இரும்பு அழிய வேண்டுமென்றால் துருப்பிடித்து அதுவாகவே அழிந்தால் தான் உண்டு. இதேதான் நமக்கும்.

          நம் சிந்தனை சிதைந்து நாமாகவே அழிந்தால்தான் உண்டு. நாம் உறுதியாக நின்றுவிட்டால் எப்பேர்ப்பட்டவனாலும் நம்மை அழித்துவிட முடியாது. எவ்வளவு பெரிய சோதனையாலும் நம்மை வீழ்த்திவிட முடியாது.

                   நாம் முடங்குவதாகவும், தோற்பதாகவும் உருவாகிற தோற்றங்கள் எல்லாம் தற்காலிகமானவை.எந்த வெற்றியும் நிலையானது இல்லை .

         எந்தத் தோல்வியும் நிரந்தரமானது இல்லை. இன்றைக்கு வேண்டுமானால் எதிரியின் கை ஓங்கி இருக்கலாம்.

             நம் துக்கத்தின் அளவு உயர்ந்து இருக்கலாம். அது நிரந்தரமான ஓங்குதல் இல்லை. அது வலிமையான துக்கமில்லை. துக்கத்தின் சுவடு நிச்சயமாகக் கரையும்.

        எனக்கு எப்பொழுதெல்லாம் மனம் சோர்வடைகிறதோ அப்பொழுதெல்லாம் இத்தகைய மனிதர்களைத்தான் நினைத்துக் கொள்கிறேன். காய்ச்சல் வந்துவிட்டது .

      உடலில் சர்க்கரை அதிகரித்து விட்டது; ப்ரஷர் ஏறிவிட்டது என்று முடங்கிக் கொள்வதற்கும் சிறகுகளைச் சுருக்கிக் கொள்வதற்கும் ஆயிரம் காரணங்களை தேடுகிறவர்களுக்கு இவரைப் போன்றவர்கள்தான் டானிக் பாட்டில்கள்.

        என்னதான் ஆகிவிடும்..? ஒரு கை பார்த்துவிடலாம். இங்கு யாருக்குத்தான் பிரச்சினையில்லை? எறும்பிலிருந்து யானை வரைக்கும் அத்தனை உயிரினங்களுக்கும் பிரச்சினைகள் தான்.

          மனிதர்கள்தான் எல்லாவற்றையும் மண்டையில் ஏற்றி நாளை எப்படிச் சமாளிப்பது..? நாளைக் கழித்து எப்படிச் சமாளிப்பது..? 

            அடுத்த ஆண்டு என்ன செய்வது என்று ஆயிரத்தெட்டுக் குழப்பங்களில் சிக்கிச் சின்னாபின்னமாகிறோம். எல்லாவற்றையும் சற்றே ஒதுக்கி வைத்துப் பார்ப்போம். இன்றைய கணத்தை வாழ்ந்து பார்க்கலாம்.

                இன்றைய தினத்தில் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்யலாம். நாளை நடப்பதை நாளை பார்த்துக் கொள்ளலாம்.

        செத்துப்போவது பெரிய காரியமே இல்லை. ஒன்றரை நிமிட வேலைதான். அதோடு எல்லாம் முடிந்தது. 

        ஆனால் இனி எந்தக் காலத்திலும் இந்த பூமியில் வாழ்வதற்கான வாய்ப்பே கிடைக்கப் போவதில்லை. அவ்வளவு சீக்கிரமாக முடித்துக் கொள்வதற்காக இவ்வளவு சிரமப்பட்டோம்?

               நம் அத்தனை சுமைகளையும் துன்பங்களையும் தூக்கி நம்மைச் சார்ந்தவர்களிடம் கொடுத்துவிட்டுப் போவதுதான் நம் பிறப்பின் அர்த்தமா?

       ஓர் எறும்பைப் பிடித்துத் தண்ணீரில் போட்டால் அது கடைசி மூச்சு வரைக்கும் போராடிப் பார்த்துவிட்டுத்தான் சாகிறது. ஒரு மீனைத் தூக்கி தரையில் வீசினால் அதுவும் கடைசி மூச்சு வரைக்கும் தம் கட்டி பார்த்து விடுகிறது. 

           மனிதர்கள் நமக்கு என்ன? நாம் மட்டும் ஏன் இடையிலேயே மூச்சை நிறுத்திக் கொள்ள வேண்டும்?

                நம்மிடம் உயிர் இருக்கிறதா..? தெளிவான சிந்தனை இருக்கிறதா? அது போதும். எல்லாவற்றையும் சமாளித்துவிடலாம். யார் எதிர்த்தாலும் மோதிப் பார்த்துவிடலாம்.

                  நம்பிக்கைதான் வாழ்க்கை. கடைசி வரைக்கும் முயற்சித்துப் பார்த்துவிட்டேன் இனி வாய்ப்பில்லை என்று சொல்வதே கூட அவநம்பிக்கை தான்.

             அதை உடைத்து நொறுக்கினால் போதும். அந்தச் சுவருக்கு அப்பால் காத்திருக்கும் வெற்றி நமக்குத்தான்.

Thursday, 30 September 2021

மரண தண்டனை

மூன்று நபர்களுக்கு மரண தண்டனை நிர்ணயிக்கப்பட்டது .மூவரும் தூக்கு மேடைக்கு வரவழைக்கப்பட்டனர். 

- மதத்தலைவர்
- வழக்கறிஞர் 
- இயற்பியலாளர் 

முதலில் மதத் தலைவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது. 'கடைசியாக ஏதாவது சொல்லவருகிறீர்களா? என் வினவப்பட்டது. 

ஆண்டவன்! ஆண்டவன்! ஆண்டவன் அவனே என்னை காப்பாற்றுவான் என்றார். 

மேடை இழுக்கப்பட்டது, மதத்தலைவரின் கழுத்தை நெருங்கிய போது சட்டென்று நின்றுவிட்டது. மக்கள் அதிசயத்தோடு பார்த்தனர். அவரை விட்டுவிடுங்கள்! ஆண்டவன் அவரை காப்பாற்றிவிட்டான். என்றனர். மதத்தலைவர் தப்பிவிட்டார். 

அடுத்ததாக வழக்கறிஞர் அழைத்துவரப்பட்டார். அவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது. 'கடைசியாக ஏதாவது சொல்லவருகிறீர்களா? என வினவப்பட்டது.

'நீதி! நீதி! நீதியே வெல்லும்' என்றார். 

மேடை இழுக்கப்பட்டது, வழக்கறிஞரின் கழுத்தை நெருங்கிய போது சட்டென்று நின்றுவிட்டது. மக்கள் அதிசயத்தோடு பார்த்தனர். அவரை விட்டுவிடுங்கள்! நீதி அவரை காப்பாற்றிவிட்டது. என்றனர். வழக்கறிஞர் தப்பிவிட்டார்.

அடுத்ததாக இயற்பியலாளர் அழைத்துவரப்பட்டார். அவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது. 'கடைசியாக ஏதாவது சொல்லவருகிறீர்களா? என வினவப்பட்டது.

எனக்கு ஆண்டவன் பற்றியும் தெரியாது, நீதி பற்றியும் தெரியாது. ஆனால் அங்கே தூக்கு மேடை கயிற்றில் ஒரு முடிச்சு இருக்கிறது. அதனால்தான் கயிறு கழுத்தை பதம் பார்க்கவில்லை என்பது எனக்குத் தெரியும்' என்றார்.  

உடனே தூக்குமேடையை பரிசீலித்தனர். அங்கே அந்த கோளாறு இருந்தது. அதனை சரி செய்தனர். பின்னர் இயற்பியலாளர் தூக்கில் ஏற்றப்பட்டு தலையும் துண்டிக்கப்பட்டது. 

*நீதி*

👉 சில சந்தர்ப்பங்களில் 
வாய் மூடி இருக்கப் பழகிக்கொள்!

👉 தெரிந்த உண்மைகளையெல்லாம்  உளரிக்கொட்டுவதால் உன் கழுத்துக்கே ஆபத்தாகலாம்!

👉 சிலவேளை முட்டாளாக இருப்பதுதான் 
புத்திசாலித்தனமானது!

Saturday, 18 September 2021

அப்பா

*அப்பா........🙏🙏🙏🙏🙏🙏*
*மனச தொட்ட கதை* 

கணேசன் எழுபது வயதைக் கடந்த தாத்தா. ஒருநாள் அவர் ஒரு பூங்காவில் ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கிருந்தார். 

பக்கத்தில் குழந்தைகள் விளையாடும் சத்தம்.  

மரத்தில் பறவைகள் கத்தும் சத்தம்.  
இந்த சூழலை ரசித்துக் கொண்டிருந்தார் கணேசன். 

வாழ்க்கையில் இனி ஓடி ஒளிய முடியாமல், பழைய நினைவுகளை உயர்த்திப் பிடித்து அசைபோடும் நிலை அது.  

அதே பெஞ்சில் அவருடன் அமர்ந்திருந்த நண்பர்கள் யாரும் தற்போது உயிரோடு இல்லை.   

அந்த சமயத்தில் ஒருவர் கணேசனின் பக்கத்தில் 
வந்து அமர்ந்தார்.

"மிஸ்டர் கணேசன்!  
நான் தான் கடவுள். உங்களுக்கு ஆசை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் நிறைவேற்றுகிறேன" என்றார் அவர் (கடவுள்).

ஆச்சரியப்பட்டார் கணேசன்.  
யோசித்தார்.  
பிறகு பேசினார்.

""கடவுளே! என் அப்பாவை நான் பார்க்க வேண்டும். அவரை என் கண் முன் கொண்டு வந்து நிறுத்திவீர்களா?""
என்று கேட்டார் கணேசன்..

""மிஸ்டர் கணேசன்! நீங்களே தாத்தாவாகி பல வருஷங்கள் ஆயிடுச்சு. இன்னமும் உங்கள் அப்பாவை பார்க்கும் ஆசை இருக்கிறதா?' என்று கேட்டார் கடவுள்.

''கடவுளே! ஆம். ... அவருக்கு நிகர் யாருமில்லை'' என்றார் கணேசன்..

‘அப்படியா!' என்றார் கடவுள்.

''அப்பா பலமுறை என்னிடம் கோபப்பட்டுள்ளார். தண்டித்திருக்கிறார். அப்போதெல்லாம் எனக்கும் கோபம் வரும். மனத்திற்குள் திட்டித் தீர்த்திருக்கிறேன். ஆனால், நானும் ஒரு அப்பாவாக மாறிய பிறகு அப்படிப்பட்ட கோபத்தில் இருக்கும் நியாயம் எனக்கு புரிந்தது. அதனால் இந்த நிலையில் அவர் என்னுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்'' என்றார் கணேசன்.

''அதெல்லாம் சரி! உன் அம்மாவை பார்க்க வேண்டும் என்று ஏன் உனக்கு தோன்றவில்லை?'''
என்று கேட்டார் கடவுள்.

‘அப்பாவா? அம்மாவா?இதில் யார் தவிர்க்க முடியதவர் என்ற போட்டி தற்போது நடக்கவில்லை. திருமணமான பிறகு மனைவி அம்மாவின் இடத்தில் பாதியை நிரப்பிவிட்டார். ஆனால், அப்பாவின் இழப்பை இதுவரை யாரும் நிரப்பவில்லை. அதனால்தான் அப்பாவை பார்க்க விரும்பினேன்''', என்றார் கணேசன்..

''சரி! உன் அப்பா என்னை விட சிறந்தவரா? என்று கேட்டார் கடவுள்

''என் அப்பாவிடம் எதை கேட்டாலும் வாங்கிக் கொடுத்து விடுவார். ஆனால், என் அப்பாவையே கேட்டால், அது உங்களால் மட்டுமே கொடுக்க முடியும்.  

அந்த வகையில் நீங்கள்தான் சிறந்தவர். ஆனால், அப்பா, என்னை ஒரு நல்ல தகப்பனாக உருவாக்கியிருக்கிறார்.  

நான் என் மகனை அவனது பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாக உருவாக்குவேன்.  

ஆனால், நீங்கள் ஒரு நல்ல கடவுளை உருவாக்கியிருக்கிறீர்களா? உங்களால் முடியாததை செய்த என் அப்பாதான் சிறந்தவர்தானே?''
என்று கேட்டார் கணேசன்.   

அமைதியானார் கடவுள்.  
மீண்டும் கணேசன் பேசினார்.

''‘ராமன் காட்டுக்குப் போனான் என்றவுடன் உயிரை விட்டார் தசரதன், 

இந்திரஜித் இறந்தவுடனே பிணமாய் வாழ்ந்து உயிரை விட்டான் இராவணன், 

பிள்ளைக்கு சாகாவரம் பெற்றுத் தந்தார் துரோணர்.   

இப்படி பிள்ளைகளுக்காக வாழ்ந்த அப்பாக்கள் ஏராளம். அந்த அப்பாக்கள் தவிர்க்க விரும்பிய விஷயம் ‘புத்திர சோகம்'.  

ராமனை பிரிந்தவுடன் உயிரைவிட்டார் தசரதன். ஆனால், தசரதன் இறந்த பின் ராமன் இறக்கவில்லை. அதுதான் மகன் மீதான அப்பாவின் பாசத்திற்கும், அப்பாவின் மீதான மகனின் பாசத்திற்கும் உள்ள வித்தியாசம்', என்றார் கணேசன்.

ஆச்சர்யமாக பார்த்தார் கடவுள்.   
'''‘ம்..... மேலே சொல்'' என்றார் கடவுள்.

''ஒருமுறை ஆபிஸுக்கு பஸ்ஸில் போய்க்கொண்டி ருந்தேன். பக்கத்தில் ஒரு பெண். என் முன்னால் இருந்த கம்பியை பிடித்துக்கொண்டிருந்தார்.  

அடிக்கடி அவளுடைய முகத்தை பார்த்தேன். ஒவ்வொரு முறையும் ஒரு புன்சிரிப்பு தென்பட்டது.  

அவளின் விரல்களில் ஒரு சிகப்புக் கல் வைத்த மோதிரம் இருந்தது. என்னை அறியாமல் அந்த சிகப்புக் கல்லை தொட்டுப் பார்த்தேன். வெடுக்கென்று கையை எடுத்துக் கொண்டார். அப்போதுதான் அது தவறு என்று புரிந்தது.   

அடுத்த ஸ்டாப்பில் அந்தப் பெண் இறங்கத் தயாரானார். கிளம்பிய பெண் சட்டென்று திரும்பி அந்த மோதிரத்தை என் கைகளில் திணித்துவிட்டு கிளம்பினார். அது ஒரு இன்ப அதிர்ச்சி. பஸ் கிளம்பியது. அந்தப் பெண் தூரத்தில் சென்று மறைந்தாள்.  

அன்று மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். எதிரில் அப்பா வந்து கொண்டிருந்தார். அவரிடம் சென்று பஸ்ஸில் நடந்ததை அப்படியே ஒரு வரி மாறாமல் சொன்னேன். மோதிரத்தை அவரிடம் காட்டினேன். அவர் முகத்தில் எந்த சலனமும் இல்லை. ''நாளைக்கு அந்த மோதிரத்தை அவளிடம் திருப்பி கொடுத்துடு''என்று சொல்லிவிட்டு வாக்கிங்கை தொடர்ந்தார்.  

வீட்டில் யாரிடமும் அவர் இதைப் பற்றி பேசவில்லை', என்று சொல்லிவிட்டு அமைதியானார் கணேசன்..

''அந்த மோதிரத்தை அடுத்த நாள் திரும்ப அந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டீர்களா?'' என்று கேட்டார் கடவுள்.

சிரித்தார் கணேசன்.

‘இந்தக் கேள்வியை அப்பா என்னிடம் கேட்கவில்லை. ஆனால் நீங்கள் கேட்கிறீர்கள்.  
அடுத்த நாள் அந்த மோதிரத்தை திரும்ப கொடுத்துவிட்டேன். ஆனால், அதைக்கூட அப்பாவிடம் சொல்லவில்லை.  
அவரும் அந்த பதிலுக்காக காத்திருக்கவில்லை.    

எங்களுக்குள் அப்படி ஒரு புரிதல் இருந்தது. அதனால்தான் சொல்கிறேன் என் அப்பா உங்களை விட சிறந்தவர்', என்றார் கணேசன்..

கடவுள் சிரித்தார்.  

‘கடவுளே! அப்பா என்பது உன்னதமான உறவு. நம்மைச் சுற்றி நடக்கும் உண்மை நிலையை புரிந்துகொள்ளும் அற்புதமான நடைமுறை உலகத்து உறவு.   

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் 
அப்பா என்பவர் நம்மைப் பற்றி முழுமையாகத் தெரிந்த முதிர்ந்த நண்பர்', என்றார் கணேசன்.

':அதெல்லாம் சரி! அப்பாவிடம் எதையாவது மறைத்திருக்கிறீர்களா?' என்று கேட்டார் கடவுள்.

‘ஒரு விஷயத்தை மறைத்திருக்கிறேன். நான் ஒரு பெண்ணை ஐந்து வருஷமாய் காதலித்து வந்தேன். பிறகுதான் தெரிந்தது அவளுடைய அப்பாவிற்கும் என் அப்பாவிற்கும் ஆகாது என்று. அதனால் காதலை அத்தோடு நிறுத்திக் கொண்டோம். அது வலி நிரம்பிய பிரிவு', என்று சொல்லும் போது கணேசனின் கண்களில் கண்ணீர் சேர்ந்தது.  

‘மிஸ்டர் கணேசன் ! நீங்க இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்ததை உங்க அப்பா கேட்டுக் கொண்டுதான் இருந்தார்.  

இதோ அப்பா நிற்கிறார். இன்னும் சில நிமிடங்கள் அவர் உங்களோடு இருப்பார். பேசிக்கொள்ளுங்கள்', என்று சொன்னார் கடவுள்.

கணேசன் ஓடிச் சென்று அப்பாவை கட்டிப் பிடித்துக் கொண்டார். இருவர் கண்களிலும் கண்ணீர்.

''மகனே! என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கக் கூடாதா? 
என் வரட்டு பிடிவாதத்தை விட்டுக் கொடுத்திட்டு அந்த பெண்ணையே திருமணம் செய்து வைச்சிருப்பேனே!', என்றார் அப்பா.  

மெளனம் மட்டுமே பதிலாய் தந்தார் கணேசன்.  

அப்பா பேசினார்.

''ஒரு அப்பாவிற்கு கிடைத்த பெரிய வரம் என்ன தெரியுமா?  
அவர் மற்றவர்கள் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்வதுதான்.  

அந்த விஷயத்தில் நீங்கள் எல்லோரும் என்னை நன்றாக புரிந்து வைத்திருக்கிறீர்கள். இதைவிட சிறந்த வரம் ஒரு அப்பாவிற்க்கு இருக்க முடியாது', என்றார் அப்பா.

‘அப்பா! நீங்க என் கூடவே தங்கிடுங்கப்பா!' என்று கெஞ்சினார் கணேசன்.

‘அது முடியாதுப்பா! என்னோட கதை முடிந்த கதை. வாழ்க்கையில ஒரு அப்பாவின் பங்கு என்ன என்பதை நீ நன்றாக புரிந்து வைத்திருக்கிறாய். அதை உன் மகனுக்கும் புரிய வைத்திருக்கிறாய். அவன், அவனுடைய மகனுக்கும் புரியவைப்பான். இதன் விளைவாக உலகம் நல்ல தகப்பன்களை உருவாக்கும். அது நல்ல குழந்தைகளை உருவாக்கும். இதை விட பெருமை எந்த தகப்பனுக்கும் கிடைக்காது. நான் பாக்கியசாலி. நான் கிளம்பறேன்', என்று சொல்லிவிட்டு சற்று தூரம் நடந்து மறைந்து போனார்.    
 
கணேசன் அழத்தொடங்கினார்.

‘என்ன மிஸ்டர் கணேசன்! போதுமா? நான் கிளம்பட்டுமா?' என்று கடவுள் கேட்டார்.

‘கடவுளே! நான் பள்ளிக்குச் சென்ற முதல் நாளை என்றுமே மறக்க முடியாது. கையில் ஒரு சாக்லேட்டை கொடுத்து மரத்தடி பள்ளிக்கூட வகுப்பறையில் இறக்கிவிட்டு டாட்டா காண்பித்துவிட்டு கிளம்பினார் அப்பா.   

நான் அழத் தொடங்கினேன். யார்யாரெல்லாம் சமாதானம் சொல்லியும் விம்மலும், அழுகையும் நிற்கவில்லை.   
அப்பா சென்ற வழியை பார்த்து அழுதுகொண்டே யிருந்தேன், அப்பா அந்த வழியே வருவார் என்ற நம்பிக்கையோடு....   

அதே நேரத்தில் அப்பா சற்று தொலைவில் ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு நான் என்ன செய்கிறேன் என்பதை பார்த்துக் கொண்டிருந்தார்.    

நிச்சயமாக அவரும் அழுதிருப்பார். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அப்பா வந்தார்.என்னை தூக்கிகொண்டு வீட்டுக்குப் புறப்பட்டார். அவர் தோளில் சாய்ந்த நான் அப்படியே தூங்கிப்போனேன். இது என் முதல் நாள் பள்ளி ஞாபகம்'.  

கணேசன் மீண்டும் பேசினார்.

‘கடவுளே! இன்றும் கிட்டத்தட்ட அதே நிலையில்தான் இருக்கிறேன். என்னை விட்டுச் சென்ற அப்பா மீண்டும் வரமாட்டாரா? என்று அவர் சென்ற வழியிலேயே காத்துக் கொண்டிருக்கிறேன்.  

இப்போது அப்பா எந்த மரத்தடியில் ஒளிந்து என்னை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் தோளில் தூங்கினால் என்னுடைய எல்லாக் கவலைகளும் பறந்துபோகும். அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா?' என்று கேட்டுவிட்டு அழுதார் கணேசன்..
  
( கணேசனுக்கு மட்டுமல்ல.. நம் அனைவருக்கும் மனச்சுமையை நீக்கும் அப்பாவின் தோள் கிடைக்குமானால், நம்மைவிட அதிர்ஷ்டசாலி யாரும் இருக்க முடியாது. அப்பா, நம்மில் விதைக்கப்பட்ட கற்பக விருட்சம்)
ஆகவே அப்பா............. இருந்தால்.................... மதியுங்கள்.................... 
அப்பா........................ இல்லையேல்....... ..........
நினையுங்கள்..... ............

Saturday, 24 July 2021

இன்றைய கல்விமுறை

ஒரு ஆராய்ச்சி மாணவன் தவளை ஒன்றை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான்.

*"தாவு"என்று சொன்னால் தாவும்படி பழக்கியிருந்தான்!*.
ஒரு காலை வெட்டி விட்டு "தாவு"என்றான்.தாவியது.
இரண்டாம் காலை வெட்டி விட்டு "தாவு" என்றான். வலியோடு தாவியது. மூன்றாம் காலை எடுத்தும் மிகுந்த வலியோடு ஒற்றைக் காலால் தாவியது.
நான்காம் காலையும் வெட்டி விட்டு "தாவு"என்றான்.
நகர முடியாமல் பரிதாபமாய் படுத்தது. மறுபடி தாவச் சொல்லி கத்திக் கொண்டேயிருந்தான்.

 அதனிடமிருந்து அசைவேயில்லை!
ஆராய்ச்சி முடிவை இப்படி எழுதினான்-
*"நான்கு கால்களையும் எடுத்து விட்டால் தவளைக்கு காது கேட்காது"*
*இப்படி தான் இன்றய கல்விமுறையும் பலரின் புரிதல்களும் உள்ளது.*

*மொபைல் போன்* குறைந்தது 10 ஆயிரம் விலைகொடுத்து வாங்கும் சாமானியன் ஒரு *பசு மாட்டுக்கு* 10 ஆயிரம் விலைகொடுத்து வாங்குவதில்லை!

தினமும் *20, 50, 100, 200* ரூபாய் ரீச்சார்ச், இன்டர்நெட்டுன்னு *செலவு செய்யும் சாமானியன்* தக்காளி கிலோ 5 ரூபாய்க்கு கிடைக்கணும்னு நினைக்கிறான் !
*நாட்டுப் பற்று, சொந்தம் பந்தம்* பற்றி பேசறாங்க , நமக்காக நம்ம *ஊருக்காரன்* வச்சிருக்கும் கடையில் போய் ஒரு பேனா கூட வாங்கறதில்ல !,
நமக்கு தெரிஞ்சதெல்லாம் *அமேசான், பிளிப்கார்ட்!* அதில வாங்குறத கௌரவமா வேற நினைக்கிறாங்க !
அரிசி போட்டவுடன் வேகணும் !

சோறு பளபளன்னு வெள்ளையா இருக்கணும் !
பொடிசா இருக்கணும் !
ஆனா நோய் வரக்கூடாது ! !
பழுப்பு நிறத்துல இருக்கிற அரிசிய வெள்ளையா கேட்டா எதையாவது போட்டு கலரா மாத்ததான செய்வான்?
தப்பு யார் மேல ?

கீரை பச்சையா இருக்கணும், இலையில சின்ன ஒட்டைகூட இருக்ககூடாது ன்னு கடைக்காரண்ட கேட்டா அவன் விளைவிக்கிறவண்ட சொல்லி…
விளைய வைக்கிறவன் பூச்சி மருந்த அடிக்க
நாமும் வாங்கி சாப்பிடறோம்…! அப்பறம் டாக்டர தேடி அலையறோம் !

நாமெல்லோருமே ஆடு மாடு மேய்ச்சவங்க வாரிசுதான்.!
என்ன கூட குறைய ஒரு சில தலைமுறைகள் இருந்திருக்கும்.
இப்போ பேண்ட் சர்ட் , KFC Chicken, Pizza, Burger அப்போல்லுனு வாழ்ந்துட்டா சந்தோசம் கிடைச்சிடுமா?

*இன்னும் ஆடு மாட வச்சு சாணிய அள்ளி உரமாக்கி எங்கே ஒரு காட்டுல நமக்காக உழைச்சிட்டு இருக்கானே அவன் எவ்வளவு மேலானவன் என்பதை என்று உணர்வீர்களோ!*

*நல்லதை சாப்பிட நினையுங்கள்.*
*சாப்பிட கொடுத்தவரை நினையுங்கள் !*.
*வாழ்க விவசாயி !*
*வாழ்க இயற்கை விவசாயம் !*

~*~