Friday, 24 March 2023

அப்பாவும் மகளும்

தினமும் தன் இரு சக்கர வாகனத்தில் தன் மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ஒருவர் ஒரு வித்தியாசமான விசயத்தை தொடர்ந்து செய்து வந்தார். 

மகளுடன் சாலையில் செல்லும்போது ஏதாவது ஒரு கடையின் பெயர் பலகையை அவளை படிக்கச் சொல்வார். 

பின்னர் அந்தக் கடையைப் பற்றிய விவரங்களை அவளுக்கு விளக்குவார். 

அந்தக் கடையில் நடக்கும் வேலைகள், அதற்கான பொருள்கள், தயாரிக்கும் முறை என்று மகளுக்கு சொல்லிக்கொண்டே போவார். 

உதாரணமாக ஒரு டீ கடை என்றால்... 

"எனக்குத் தெரிஞ்சவர் இந்த கடைக்காரர். 

இங்கே 10 வருஷமாக டீ கடை வெச்சிருக்கார். 

தினமும் காலையில் 5 மணிக்கே கடையை திறந்து விடுவார். 

அதுக்காக, 4 மணிக்கே எழுந்து விடுவார். 

ராத்திரி 10 மணி வரைக்கும் கடை இருக்கும். 

ஒரு நாளில் 17 மணி நேரம் வேலை செய்கிறார். 

அதில் முக்கால்வாசி நேரம் நின்றபடியேத்தான் இருப்பார். 

நீ கிளாஸ்ல உட்கார்ந்து பாடம் படிப்பாய். நானும் ஆபீஸ்ல உட்கார்ந்து வேலை செய்வேன். 

ஆனால், இவர் உட்கார்ந்து வேலை செய்ய முடியாது. 

நின்றபடியே வேலை செய்தால்தான் வேலை நடக்கும். 

ஒரு குறிப்பிட்ட நேரத்துல கூட்டம் அதிகமா இருக்கும். 

அந்த நேரத்துல யாரையும் அதிகம் காத்திருக்க வைக்க முடியாது. 

சுறுசுறுப்பா டீ கொடுக்கணும். டேஸ்ட்டும் நல்லா இருக்கணும்.'' 

இப்படி ஆரம்பித்து, அதில் வரும் வருமானம், சவால்கள் எனச் சொல்வார். 

அவர் செல்ல மகளும் இடையிடையே நிறைய கேள்விகள் கேட்பாள். 

அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லியவாறு அழைத்துச் சென்று பள்ளியில் விடுவார் தன் மகளை. 

ஒரு நாள் வகுப்பில் ஒரு பாடம் நடத்தும்போது நடந்த உரையாடலில், பூ விற்பவர் பற்றிய பேச்சு வந்தது. 

உடனே எழுந்த அந்தப்பெண், அதுபற்றி தனக்குத் தெரிந்ததை எல்லாம் கோர்வையாக சொல்லிக்கொண்டே போனாள். 

அது மற்ற குழந்தைகளுக்கு மட்டுமல்ல அந்த வகுப்பு ஆசிரியைக்கும் தெரியாத பல செய்திகளை வெளிப்படுத்துவதுமான ஒரு நிகழ்வாக இருந்தது. 

அந்தத் தகவல்களுக்குள் ஒரு மனிதரின் வாழ்வியல் முறை, சக மனிதருடன் நமக்குள்ள தொடர்பு, அவர்களின் முக்கியத்துவம், அவர்களின் பொருளாதார சூழல் ஆகியவை வெளிப்பட்டன. 

அவள் வகுப்பு ஆசிரியை வியந்து கைதட்டினார். 

மற்ற குழந்தைகளும் கூட அவளை வியந்து பார்த்தது. 

தன் தந்தைக்கு மனதார நன்றி சொன்னாள் அந்தச் செல்ல மகள். 

பொதுவாக, பொருளாதார ரீதியாக எளிய பணிகளைச் செய்பவர்களை நம் குழந்தைகளுக்கு நாம் எப்படி அறிமுகம் செய்கிறோம் என்று யோசித்துப் பாருங்கள்..?! 

"சரியா படிக்கலைன்னா இப்படித்தான் நீயும் கூலி வேலை செய்து கஷ்டப்படணும்'' என்கிறோம். 

அதாவது, நம் குழந்தைகளுக்குள் பயத்தைப் புகுத்தி அதன் மூலமாக புது பொறுப்பை உருவாக்க இதை ஓர் உத்தியாக நினைக்கிறோம். 

ஆனால், அப்படிச் சொல்வதால் அவர்களுக்குள் பயம் மட்டுமா உருவாகிறது? 

நிச்சயமாக இல்லை!
அந்தப் பணியைத் தாழ்வாகவும், அதைச் செய்பவர்கள் மீது இயல்பாகவே மதிப்பும் குறைகிறது. 

இது சரியான வழிமுறையா?
இங்கே செய்யப்படும் எல்லாவிதமான பணிகளும் முக்கியமானவைகளே. 

எல்லா மனிதர்களும் முக்கியமானவர்களே
என்பதை நாம் நம் குழந்தைகளுக்கு உணர்த்துவது மிக முக்கியம். 

எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே.    
         
பின் நல்லவராவதும் தீயவராவதும் பெற்றோர்கள் வளர்ப்பினிலே...

Thursday, 23 March 2023

ஆலமரமும் காட்டுச் செடியும்

🍄 விவசாயி ஒருவர் புதிதாக ஒரு ஆலமரக்கன்றை தனது தோட்டத்தில் நட்டு வைத்தார். அது காற்றில் அசைந்து ஒடிந்து விடாமல் இருக்க அருகில் ஒரு குச்சியை நட்டு வைத்து செடியை அதில் கட்டி வைத்தார். பிறகு அதை சுற்றி வலையால் வேலி அமைத்தார். நேரத்துக்கு நேரம் தண்ணீரும் உரமும் போடப்பட்டது.

🍄 இதைப் பார்த்த எதிரே இருந்த காட்டுச்செடி ஒன்று, " இப்படி ஒரு வாழ்க்கை தேவையா..? எங்களை பார் நாங்கள் எவ்வளவு #சுதந்திரமாக இருக்கிறோம். ஆனால் நீயோ, குச்சியால் கட்டப்பட்டு கூண்டுக்குள் அடைப்பட்டு கிடக்கிறாய்"
என ஏளனம் செய்தது.

🍄 ஆலமரச்செடி யோசிக்க ஆரம்பித்தது. நானும் பிற செடிகளை போல சுதந்திரமாக வாழ்ந்தால் என்ன ? எப்படியாவது இந்த வாழ்க்கையில் இருந்து வெளி வர வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கும் போதே,

🍄 மறுநாள் அந்த காட்டுச்செடி இருந்த இடம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. அந்த #காட்டுச்செடியும் வெட்டி தூக்கியெறியப்பட்டது.

🍄 அந்த வழியாக வந்த விவசாயியின் மகன் , " இது என்ன செடி அப்பா..? ஏன் வலையெல்லாம் போட்டு அடைச்சி வச்சிருக்கீங்க " என்று கேட்க,

🍄 இதுவா.. இது ஆலமரச்செடி, இது மற்ற செடி மாதிரி சீக்கிரமா வளர்ந்து சீக்கிரமா அழிஞ்சு போறது இல்ல. பல நூறு வருஷம் வாழ்ந்து பயன்படக்கூடியது. அதான் இதுக்கு இவ்வளவு பாதுகாப்பு என்றார் விவசாயி.

🍄 தன்னை கட்டி வைத்திருக்கும் குச்சியும், சுற்றியிருக்கும் வேலியும், நான் இன்னும் நன்றாக #வளர்வதற்கு தானே தவிர, சுதந்திரத்தை பறிப்பதற்கு அல்ல என்பதை புரிந்து கொண்டது.

🍄 நீங்கள் ஆலமரமாய் வளர வேண்டுமென்றால் சில கட்டுப்பாடுகள் இருக்க தான் செய்யும்..

🌳🌿🌳🌿🌳🌿🌳🌿🌳🌿🌳🌿🌳🌿🌳

Sunday, 5 March 2023

ஜப்பான் பல்லி

ஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா...

இது ஜப்பானில் நடந்த உண்மை கதை !

ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார்.ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும்.

வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார்.அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த பல்லியை சுற்றி பார்த்தார்,அவர் அப்போதுதான் கவணித்தார். வெளி பகுதியில் இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில் இறங்கி இருக்கிறது.

அவருக்கு ஆச்சரியமாக இருந்தது அந்த ஆணி அடித்து குறைந்தது 3 வருடம் ஆகி இருக்கும்.எப்படி இந்த பல்லி 3 ஆண்டுகள் உயிருடன் இருந்தது இதை நாம் கண்டு பிடித்து ஆக வேண்டும் என்று மேற்கொண்டு வேலை செய்யாமல் அந்த பல்லியை கண்கானித்து கொண்டு இருந்தார்

சிறிது நேரம் கழித்து இன்னொரு பல்லி அதன் அருகில் வருவதை கண்டார்.அந்த பல்லி தன் வாயில் இருந்து உணவை எடுத்து சுவற்றில் சிக்கிக் கொண்டு இருந்த பல்லிக்கு ஊட்டுவதை பார்த்தாஉம்ம்்.அவருக்கு தூக்கி வாரிப்போடது 3 ஆண்டுகளாக இந்த பல்லி சுவற்றில் சிக்கி இருந்த தன் சக பல்லிக்கு உணவு அளித்து வந்து உள்ளது.

ஒரு பல்லி தன் சக பல்லிக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் 3 ஆண்டுகள் உணவளித்து வந்துள்ளது.

ஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா...

உங்களை 10 மாதம் சுமந்த உம் தாய் தந்தைக்கு அவர்கள் முடியாத காலக்கட்டத்தில் உணவளிக்க முடியாதா,

சிந்திப்பீர் மனிதர்களே!!!