அப்போது 8ம் வகுப்பு டிராப் அவுட்...
இப்போது வருமான வரித்துறை இணை ஆணையர்...!
“ஸ்கூல்ல நான் ரொம்ப பிரபலம். நந்தகுமார்னா யாருக்கும் தெரியாது; ‘தூங்குமூஞ்சி’ன்னா கரெக்ட்டா சொல்லிடுவாங்க. பள்ளிக்கூடத்துக்கு உள்ளே நுழைஞ்சவுடனே எங்கிருந்துதான் வருமோ தூக்கம்... உக்காந்தவுடனே தூங்கிருவேன். டீச்சர் சொல்லிப் பாத்தாங்க, அடிச்சுப் பாத்தாங்க. கடைசியா ஒரு பெஞ்சை காலிபண்ணிக் கொடுத்து, ‘படுத்து தூங்குப்பா’ன்னு சொல்லிட்டாங்க...’’ - சிரிக்கிறார் #நந்தகுமார். நந்தகுமார், இந்திய வருமான வரித்துறையின் இணை ஆணையர். தற்போது திருச்சி மண்டலத்தில் பணிபுரிகிறார். சென்னை ஆவடியில், விளிம்புக் குடும்பத்தில் பிறந்து, ஒவ்வொரு நகர்விலும் தடுக்கி விழுந்து, கற்பனைக்கு அப்பாற்பட்ட சாதனை மனிதராக உயர்ந்து நிற்கும் இவரின் கதை உற்சாக நரம்புகளை முறுக்கேற்றும் சக்திமிக்கது. ‘‘அஞ்சு வயசுக்குள்ள சின்னம்மை, மஞ்சள் காமாலை, மலேரியா, டைபாய்டுன்னு உடம்பு நோய்க் கூடாரமா ஆயிடுச்சு. அதனால எதிர்ப்பு சக்தி குறைஞ்சு போச்சு. எப்பவும் சோர்வாவே இருக்கும். படிச்சா மனசுல தங்காது; டீச்சர் சொல்றதை புரிஞ்சுக்க முடியாது. புரிஞ்சுக்கிட்ட விஷயத்தை சரியா வெளிப்படுத்தவும் முடியாது.
போர்டுல எழுதிப் போடுறதை எழுதமுடியாது. அப்படியே எழுதினாலும் தப்புத் தப்பா எழுதுவேன். இதுக்கெல்லாம் காரணம் ‘டிஸ்லெக்ஸியா’ என்று சொல்லப்படுற ‘கற்றல்குறைபாடு’தான்னு சிவில் சர்வீஸ் பிரிப்பேர் பண்ணும்போது தான் தெரியவந்துச்சு. ‘தாரே ஜமீன் பர்’ படத்தில ஒரு சின்னப் பையனுக்கு இருக்குமே, அதே பிரச்னைதான். இது நோயில்லை; உளவியல் பிரச்னையும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு சிக்கல். இதுக்கு மருத்துவத்துறை இன்னும் தீர்வு கண்டுபிடிக்கல...’’ - நிதானமாகப் பேசுகிறார் நந்தகுமார். ‘‘ஒருவழியா 8ம் வகுப்பு வரைக்கும் வந்துட்டேன். அதுக்குமேல என்னைச் சிரமப்படுத்த அப்பா விரும்பல. ‘படிப்புதான் வரல... லாட்டரிச் சீட்டு வியாபாரம் பண்ணியாவது பொழச்சுக்கோ’ன்னு ஆவடியில இருந்த கடையில உக்கார வச்சுட்டார். தெருக்கள்ல போய் விப்பேன். கடையையும் பாத்துக்குவேன். வயது ஆக ஆக, ஸ்கூலுக்குப் போற பிள்ளைகளைப் பாக்க ஆசையா இருக்கும்.
இன்னொரு பக்கம், ‘அவன்கூடப் பழகுனா நீயும் ஊர்சுத்திப் பயலாயிடுவே’ன்னு சொல்லி என்கூட பழகுற பசங்களை அவங்க பேரன்ட்ஸ் அடிப்பாங்க. படிக்காம இருக்கிறது தப்புன்னு உணர்ந்தேன். ஆனா, திரும்பவும் பள்ளிக்கூடம் போறதுக்கு மிரட்சியா இருந்துச்சு. அப்போ தான் அமல்ராஜ்னு ஒரு நண்பன், ‘பள்ளிக்கூடம் போய்தான் படிக்கணும்னு இல்லைடா, வீட்டில இருந்துக்கிட்டே தேர்வு எழுதலாம்’னு சொன்னான். அதுதான் முதல் பொறி. உடனடியா அப்ளை பண்ணினேன். கடையில இருந்துக்கிட்டே எட்டாவது பாஸ் பண்ணிட்டேன். அடுத்து பத்தாவது... டியூஷன் போகக்கூட நேரம் கிடைக்காது. எழுதி எழுதிப் பாப்பேன். நாலு தடவை தப்பா எழுதினா, அஞ்சாவது தடவை சரியா எழுதிடுவேன். மத்தவங்க மாதிரி வேகமா எழுத வராது. எல்லோரும் ரெண்டரை மணி நேரத்தில 40 கேள்விக்குப் பதில் எழுதினா என்னால 15 கேள்விக்குத்தான் எழுதமுடியும். கையெழுத்தும் சரியா இருக்காது. ஆனா விடையை சரியா எழுதுவேன்.
இப்படித்தான் பத்தாம் வகுப்பை முடிச்சேன். கணக்குல 92...’’ - வியக்க வைக்கிறார் நந்தகுமார். ‘‘திடீர்னு லாட்டரிச் சீட்டை தடை பண்ணிட்டாங்க. கடையை மூடிட்டு சித்தாள் வேலைக்குப் போனேன். என் உடல்வாகுக்கு செங்கலும், மண்ணும் சுமக்க முடியலே. ஜெராக்ஸ் கடைக்குப் போனேன். அதுவும் சரியா வரல. அப்புறம் சவுண்ட் சர்வீஸ் கடை. அங்கிருந்து டி.வி. மெக்கானிக் சென்டர். வாழ்க்கையில ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க அலையா அலைஞ்சேன். கடைசியா மெக்கானிக் ஷாப். அங்கே வேலை செஞ்சுக்கிட்டே +2வுக்கு அப்ளை பண்ணினேன். அந்த வருஷம் எக்கனாமிக்ஸ் சிலபஸ் மாறிடுச்சு. அது தெரியாம பழைய புக்கையே படிச்சதால அந்தப் பாடத்தில ஃபெயிலாகி, அட்டெம்ட்ல பாஸ் பண்ணினேன். அடுத்து கல்லூரி போகணும். இப்போ அப்பாவோட மனநிலையும் மாறிடுச்சு. ‘சரி.. வேலைக்குப் போகவேணாம், படிடா’ன்னு சொல்லிட்டார். எனக்கு பி.எஸ்சி கணிதம் படிக்க ஆசை.
ஆனா தனித்தேர்வரா எழுதினதால எந்தக் கல்லூரியிலயும் இடம் கிடைக்கலே. வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில, ‘பி.ஏ. ஆங்கிலம் இருக்கு, எடுத்துக்கிறியா’ன்னு கேட்டாங்க. சேந்துட்டேன்...’’ என்கிறார் நந்தகுமார். கல்லூரியில் சேர்ந்த ஒரே வாரத்தில் நந்தகுமாரின் ‘ஆங்கில அறிவைப்’ பார்த்து மிரண்டு போன பேராசிரியர்கள், ‘நீயெல்லாம் படிச்சு பாஸ் பண்ணமுடியாது... ஒர்க்ஷாப்புக்குப் போய் ஒழுங்கா தொழிலைக் கத்துக்கோ’ என்று அறிவுரை சொன்னார்கள். ‘‘போகப் போக சரி பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டு, தீவிரமா படிக்க ஆரம்பிச்சேன். முதல் செமஸ்டர்... தேர்வுக்கு முதல் நாள் அம்மை போட்டுருச்சு. எழுந்து உக்காரக்கூட முடியலே. தட்டுத்தடுமாறி கல்லூரிக்குப் போயிட்டேன். ஆனா உள்ளே அனுமதிக்கலை. போராடி அனுமதி வாங்கி தனியா உக்காந்து எழுதுனேன். அடுத்த செமஸ்டர் நேரத்தில பெரிய விபத்து. அதிலிருந்தும் மீண்டு வந்தேன்.
அந்த செமஸ்டர்ல ஆங்கிலத்தில டிஸ்டிங்ஷன். இறுதியா, என் பேட்ச்ல அரியர் இல்லாம டிகிரி வாங்கின ஒரே ஆள் நான் மட்டும்தான். பி.ஏ முடிச்சதும் எம்.ஏவுக்கு நிறைய கல்லூரிகளுக்கு அப்ளை பண்ணினேன். மாநிலக் கல்லூரியில ‘வராண்டா அட்மிஷன்’தான் கிடைச்சுது. வராண்டா அட்மிஷன்னா, ‘போனாப் போகுது’ன்னு கொடுக்கிறது...’’ என்கிற நந்தகுமாருக்கு அங்கு நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்கள்தான் டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி தேர்வுகளை எல்லாம் அறிமுகம் செய்தார்கள். ‘‘எல்லாரும் தீவிரமா பிரிப்பேர் பண்ணினோம். ஆனா அவங்க வேகத்துக்குப் படிக்க முடியலே. இடையில, ‘ஆபீசர்ஸ் டிரெயினிங் அகாடெமி’ நடத்தின ஒரு தேர்வை எழுதுனேன். என்.சி.சி.யில இருந்ததால அந்த வாய்ப்பு கிடைச்சுச்சு. அதுல பாஸ் பண்ணி, ஆர்மியில செகண்ட் லெப்டினென்ட் வேலைக்குத் தேர்வானேன். ஆனா பயிற்சிக்குப் போறதுக்கு முன்னாடி திரும்பவும் பெரிய விபத்து. டாக்டர்கள் கை விட்டுட்டாங்க.
54 கிலோவா இருந்த எடை 38 கிலோவாயிடுச்சு. மருத்துவர்களுக்கே புரியாத புதிர். ஆனா நான் மனம் தளரலே. அதிலிருந்தும் மீண்டு வந்தேன். ஆனா, வேலை கைவிட்டுப் போயிடுச்சு. டிஎன்பிஎஸ்சி குரூப்-2 எழுதி பாஸ் பண்ணினேன். ஏ.எஸ்.ஓவா வேலை கிடைச்சுச்சு. ஆனா அதில்லை என் இலக்கு. அடுத்து குரூப்-1 எழுதினேன்... வெற்றி! கூட்டுறவுத்துறையில துணைப் பதிவாளரா 3 வருஷம் வேலை செஞ்சேன். டெபுடி கலெக்டர் ரேங்க் வர்ற நேரம், யு.பி.எஸ்.சி பாஸ் பண்ணிட்டேன். ஐ.பி.எஸ் கிடைச்சுச்சு. ஆனா எனக்கு தமிழ்நாடு கேடர் கிடைக்கலே. அதனால ஐ.ஆர்.எஸ்ல (இந்திய வருவாய்ப்பணி) சேர்ந்துட்டேன்...’’ - சிலிர்க்க வைக்கிறார் நந்தகுமார். இன்று நேரம் கிடைக்கும்போதெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்குப் பயணிக்கிறார். தன் கதையைச் சொல்லி, ‘நானே சாதித்திருக்கிறேன்... நீங்களும் சாதிக்கலாம்’ என்று நம்பிக்கையூட்டுகிறார். மாணவர்களிடம் உற்சாகம் கிளர்ந்தெழுகிறது. ஐ.ஏ.எஸ். மாணவர்களுக்கும் வகுப்பெடுக்கிறார். நந்தகுமாரின் காதல் மனைவி விஜயலெட்சுமி, மெக்கானிக்கல் எஞ்சினியர். இவர்கள் அன்பில் விளைந்த குட்டிப்பையன் சரண், ஸ்கூலில் படிக்கிறான்.