Tuesday, 23 January 2018

மனிதம்

மார்கழி இரவு பனி இறங்க ஆரம்பித்திருந்தது.. யாரோ காம்பவுண்ட் கேட்டை தட்டும் சத்தம்
பூட்டிய கிரில்லுக்கு அப்பால், ஒரு பெரியவர், கசங்கிய சாதாரண வேட்டி சட்டை, முகத்தில் கருப்பும், வெள்ளையுமாக மண்டிய ரோமக் காடு, நீண்ட பயணத்தால் களைத்த முகம் என, கையில் நகைக்கடை விளம்பரத்துடன் இருந்த ரெக்சின் பையுடன் நின்றிருந்தார்.

வெளியே வந்த போது அந்த பெரியவர் சற்று தயக்கத்துடன் மெல்லிய குரலில்...

""ஆனந்த், நம்பர். 8, யோகானந்தம் நகர்?''

""ஆமாம்... இது தான். நான் தான் ஆனந்த்... நீங்க... என்ன வேணும்?''

அவர் வறண்ட உதடுகளை, நாவால் ஈரப்படுத்திக் கொண்டார்.

""நான் உங்கப்பாவோட நண்பன்; காரைக்காலேருந்து வர்றேன். உங்கப்பா லெட்டர் கொடுத்து அனுப்பியிருக்கார்.''

பெரியவர் ரெக்சின் பை ஜிப்பை திறந்து, ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினார்.
வாங்கிப் பார்த்த ஆனந்த், ""அப்பாவா?'' என்று வினவியபடி, கடிதத்தை படித்தான்.

அதில், "அன்புள்ள ஆனந்துக்கு, அப்பா எழுதுவது. ஆசிர்வாதம். கடிதம் கொண்டு வரும் ராமசாமி, என் நண்பன். ரொம்ப கஷ்ட ஜீவனம். இவரது ஒரே பிள்ளை, சமீபத்தில் விபத்தில் இறந்து விட்டான். விபத்துக்கான இழப்பீடு கிடைத்தால், ராமசாமியும், அவர் மனைவியும் வாழ, ஓரளவாவது உதவியாக இருக்கும்.

""விபத்து சம்பந்தமான போலீஸ் விசாரணை, விபத்து ஏற்படுத்திய டிராவல்ஸ் வேன் உரிமையாளர் தர ஒப்புக் கொண்ட இழப்பீடு போன்ற சகல விவரங்களையும் சேகரித்து, அவரிடம் கொடுத்தனுப்பி இருக்கிறேன். சென்னையில், தலைமை அலுவலகத்தில் தருவார்களாம்... சென்னை அவருக்கு புதிது. நீ கொஞ்சம் அவருக்கு உதவி செய்தால் நல்லது; செய்வாய் என்று நம்புகிறேன். மற்றபடி உடம்பை பார்த்துக் கொள். பொங்கலுக்கு கண்டிப்பாக ஊருக்கு வர வேண்டும். உன் அப்பா பரமேஸ்வரன்...' என்று எழுதப்பட்டிருந்தது.

அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றார் ராமசாமி.
ஒரு வினாடி யோசித்தவன், சட்டென சாவி எடுத்து வந்து, கேட்டைத் திறந்தான்.

""வாங்க சார்... உட்காருங்க...'' என்றவன், டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான். தயங்கியபடி உள்ளே வந்த ராமசாமி, தண்ணீரை வாங்கிப் பருகினார்.

""சாப்பிட்டீங்களா?''

""இல்லே... வழியிலே இரண்டு வாழைப் பழம் சாப்பிட்டேன். பஸ் லேட்டு, காலையில காரைக்கால்லே கிளம்பினா, சாயங்காலம் மெட்ராஸ் போயிடலாம்ன்னு உங்கப்பா சொன்னார். பஸ் பிரேக் டவுன் ஆயிடுச்சு... அதான்... அகாலத்திலே வந்து...''

""அதனாலே என்ன... பரவாயில்லை.''

பிரிட்ஜை திறந்து பார்த்தான் ஆனந்த்.

தோசைமாவு இருந்தது. நான்கு தோசை சுட்டு, மிளகாய் பொடி, எண்ணெய், தண்ணீர் கொண்டு வந்து, டேபிள் மேல் வைத்தான்.

""சாப்பிடுங்க... இதோ வர்றேன்,'' என்றவன், வாசல் பக்கம் மொபைலுடன் போனான்.

திரும்பி வந்த போது, சாப்பிட்டு முடித்து, கை நிறைய பேப்பர்களுடன் காத்திருந்தார் ராமசாமி.

""சொல்லுங்க... என்ன நடந்தது?'' என்று, அவர் எதிரில் அமர்ந்து, பேப்பர்களை வாங்கிப் பார்த்தான்.

பையனின் போட்டோ இருந்தது. 22 வயதில், அழகாக, பதவிசாக இருந்தான் பையன். ஆனந்துக்கு கண்கள் கலங்கின.

முகத்தை துடைத்துக் கொண்டார் ராமசாமி.

""இவனுக்கு முன்னாலே பிறந்த நாலஞ்சு பேரும், சின்ன வயசிலேயே போய் சேர்ந்துட்டாங்க... இவன் தான் தங்கினான். மகேஷ்ன்னு பேர்; கஷ்டப்பட்டு படிக்க வெச்சேன்... பொறுப்பான பிள்ளை. ஸ்காலர்ஷிப்லயே பி.இ., முடிச்சான். வேலை கிடைச்சுட்டா, நம்ம கஷ்டம் தீர்ந்துடும்ன்னு வாய்க்குவாய் சொல்வான்; வேலையும் கிடைச்சுது. என்னையும், என் மனைவியையும், நிற்க வச்சு நமஸ்காரம் செய்துட்டு, மெட்ராஸ் கிளம்பினான். பஸ் ஸ்டாண்ட் போக, ரோடு கிராஸ் செய்யறப்போ, வேகமா வந்த டிராவல் வேன் மோதி, ஸ்பாட்லேயே...'' மேல் துண்டால் முகத்தை மூடி, குலுங்கினார் ராமசாமி; பேசாமல் அவரையே பார்த்தான் ஆனந்த்.

அவராகவே தொடர்ந்தார்.

""அந்த வேன் சொந்தக்காரர், நஷ்ட ஈடு தர ஒத்துக்கிட்டார். முதல்லே அதை வாங்கவே மனசு ஒத்துக்கல. பிள்ளையை பறி கொடுத்துட்டு, அந்த பணத்திலே சாப்பிடறதான்னு வெறுப்பா இருந்தது. உங்கப்பா தான் எனக்கு ஆறுதல் சொல்லி, வாங்கிக்க சொல்லி வற்புறுத்தினார். எனக்கு நிரந்தரமா ஒரு வேலையும் கிடையாது. என் மனைவி ஏற்கனவே நோயாளி, பிள்ளை போன துக்கத்திலே, படுத்த படுக்கையாயிட்டா... எங்களை பகவான் அழைச்சுக்கற வரை, சாப்பிட்டுத் தொலைக்கணுமே... அதனாலே, கடைசியா நஷ்ட ஈடு வாங்கிக்க சம்மதிச்சேன். உங்கப்பா தான் எல்லா ஏற்பாடுகளையும் செய்து, இங்கே அனுப்பி வெச்சார். என் பிள்ளை உங்களுக்கு உதவி செய்வான்னு லெட்டர் கொடுத்தார்.''

""செய்யறேன்... கண்டிப்பா உதவி செய்றேன்,'' என்று எழுந்தவன், அவர் படுக்க, பாயும் தலையணையும் கொடுத்தான்.

மறுநாள் காலை, காபி போட்டு அவருக்கு கொடுத்து, தானும் குடித்து, குளித்து விட்டு வந்தான்.

அவரும் குளித்து விட்டு வர, இருவருமாக பைக்கில் கிளம்பினர்.

""இங்கே நுங்கம்பாக்கம்ன்னு இருக்காமே... அங்கே தான் ஹெட் ஆபீஸ் இருக்காம்.''

""நுங்கம்பாக்கம் பக்கம் தான். நான் கூட வந்து செஞ்சு தர்றேன்,

வழியில் ஓட்டலில் டிபனை முடித்து, டிராவல் ஆபீஸ் வந்தனர்.

பார்மாலிடீஸ் எல்லாம் முடித்து, "செக்' கைக்கு வர மதியானம் ஆகி விட்டது.

""ரொம்ப நன்றிப்பா... எனக்காக ரொம்ப சிரமப்பட்டுட்டே. நான் இப்படியே ஊருக்கு கிளம்பறேன். இப்ப பஸ் புடிச்சா, ராத்திரிக்குள்ளே காரைக்கால் போயிடலாம். என் மனைவி தனியா இருக்கா; துணைக்கு ஆள் இல்லை...''

""நானே பஸ் ஏத்தி விடறேன் வாங்க,'' என்றவன், ஓட்டலுக்கு அழைத்துப் போய், அவர் மறுத்தும் கேளாமல், சாப்பிட வைத்து, தானும் சாப்பிட்டான்.

கோயம்பேடு வரை, பைக்கில் அழைத்துச் சென்று, காரைக்கால் பஸ்சில் ஏற்றி விட்டான். டிக்கட் வாங்க என்று ஐநூறு ரூபாயை, பிடிவாதமாக அவர் சட்டைப் பையில் திணித்தான்.

""ஒரு நிமிஷம்...'' என்று போனவன், ஒரு பிளாஸ்டிக் பையுடன் வந்தான்.

""ஊர் போய் சேர எத்தனை நேரம் ஆகுமோ, வழியிலே சாப்பிட்டுக்குங்க...'' என்று, டிபன் பொட்டலம், தண்ணீர் பாட்டில் அடங்கிய பையை, அவரிடம் கொடுத்தான்.

அவர் நெகிழ்ந்தார்.

""என்னாலே உனக்கு ரொம்ப சிரமம்ப்பா. லீவு வேறே போட்டுட்டு, எனக்காக அலைஞ்சிருக்கே... ஊருக்கு போனதும் முதல் வேலையா உங்கப்பாவைப் பார்த்து நன்றி சொல்லணும்.''

ராமசாமி உணர்ச்சி வசப்பட்டு பேசிக் கொண்டே போக, அமைதியாக அவர் பக்கத்தில் அமர்ந்தான், ஆனந்த்.

""ஒரு விஷயம் சார்... நீங்க தேடி வந்த ஆனந்த் நான் இல்லே...''

ராமசாமி திடுக்கிட்டார்.

""என்னப்பா சொல்றே?''

""ஆமாம்... நீங்க அட்ரஸ் தப்பா வந்துட்டீங்க... நான் இருக்கிறது, யோகானந்தம் நகர் எக்ஸ்டன்ஷன். நீங்க, மெயின் யோகானந்தம் நகர் போயிருக்கணும். அது, கிட்டத்தட்ட, 2 கி.மீ., தொலைவில இருக்கு.''

ராமசாமிக்கு, "குப்'பென வியர்த்தது.

""அடடா... தப்பு செய்துட்டேனே... ரொம்ப ரொம்ப சாரிப்பா. நீ, நான் வந்தவுடனேயே சொல்லியிருக்கலாமே... அனாவசியமா எதுக்கு எனக்காக மெனக்கட்டு...''

அவரைத் தடுத்தான் ஆனந்த்.

""நீங்க வந்தது ராத்திரி பத்தரை மணிக்கு... மெட்ராஸ்ல இருக்கிறவங்களுக்கே, இங்க அட்ரஸ் தேடி கண்டு பிடிக்கறது கஷ்டம்; நீங்க மெட்ராசுக்கு புதுசு வேற. அதிலேயும், நீங்க வந்த காரியத்தை பத்தி தெரிஞ்சதுலே, எனக்கு மனசு சங்கடமா போயிட்டது...

""அதான் உங்களை சாப்பிட சொல்லிட்டு, லெட்டர்லே இருந்த நம்பருக்கு கால் போட்டு பேசினேன். நீங்க அட்ரஸ் மாறி வந்த விஷயம் கேட்டு, உங்க நண்பர், அதான் அந்த ஆனந்தோட அப்பா ,ரொம்பவே வருத்தப்பட்டார். அவர் கிட்டே, அவர் பிள்ளையோட நம்பர் கேட்டு வாங்கிப் பேசிட்டு... பொழுது விடிஞ்சதும், ஒரு ஆட்டோவிலே உங்களை அனுப்பி வைக்கலாம்ன்னு இருந்தேன்.

""ஆனா, மொபைல் போன்ல பேசினது ஆனந்தோட மனைவி. அவர் ஆபீஸ் விஷயமா டில்லி போயிருக்காராம். வர ஒரு வாரம் ஆகுமாம். அப்பதான் முடிவு செய்தேன். நேரடியா, நானே உங்களுக்கு உதவி செய்திடலாம்ன்னு... எந்த ஆனந்துன்னா என்ன சார்... நஷ்ட ஈடு உங்களுக்கு கிடைக்க, நான் உதவியா இருந்தேனேன்னு, நிம்மதி என் மனசிலே நிறைஞ்சு இருக்கு. அது போதும் சார்...''

டிரைவரும், கண்டக்டரும் பஸ்சில் ஏற, எழுந்தான் ஆனந்த். அவன் கைகளைப் பற்றி கண்ணில் ஒற்றிக் கொண்டார் ராமசாமி. அவன் உள்ளங்கை, ராமசாமியின் கண்ணீரால் நனைந்தது.

""நல்லா இருப்பா... நல்லா இரு... வேறென்ன சொல்றது?''

பதினைந்து வருடங்களுக்கு முன் செத்துப் போன தன் அப்பாவை நினைத்துக் கொண்டான்.

"அப்பா... நீங்க இப்ப உயிரோடு இருந்து, இது மாதிரி லெட்டர் கொடுத்தனுப்பி இருந்தாலும், கண்டிப்பா உதவி செஞ்சிருப்பேன். என் வளர்ச்சியை பார்க்காமலே போயிட்டீங்களே... யாரோ ஒருத்தருக்கு பிள்ளையா இருந்து, அவர் நண்பருக்கு உதவி செய்திருக்கேன் அப்பா... உங்களுக்கு திருப்தி தானே?'

கனத்த மனதுடன், பஸ்சை விட்டு இறங்கினான் ஆனந்த்.

இன்னும் மனிதம் இருக்கிறது.. சிலரின் இரக்க வடிவில்..

Thursday, 18 January 2018

திருஓடு

ஒரு ஊரில் ஒரு பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான்.

அவனுடைய சொத்து என்று பார்த்தால் அழுக்குப் பிடித்த உடை, கரிபிடித்த ஒரு பிச்சை ஓடு என இவ்வளவுதான்.

இந்த சூழ்நிலையில் தினமும் அவன் அந்த பிச்சை ஓட்டை நீட்டி எல்லோரிடமும் பிச்சை கேட்பது அவன் வழக்கம். எவன் வந்தாலும் பிச்சை கேட்பான்.

ஒருநாள் ஒரு துறவியிடம் போய் தன் பிச்சை ஓட்டை அவர் முகத்துக்கருகில் நீட்டி பிச்சைக் கேட்டான்.

முதலில் முகம் சுழித்த அவர், சற்று நிதானத்துக்கு வந்து, அவனையும், அந்த ஓட்டையும் மாறி மாறி பார்க்க தொடங்கினார்.

சட்டென்று அவனிடமிருந்த அந்த பிச்சை ஓட்டை பிடுங்கினார். பிச்சைக்காரன் பயந்து போனான். துறவி தன் பிச்சை ஓட்டை எடுத்துக் கொள்வாரோ என்னு பயந்தான்.  ஆனால் அந்த துறவியோ அந்த ஓட்டை மேலும் கீழும் ஆராய்ந்தார்.

பிறகு பிச்சைக்காரனைப் பார்த்து “எவ்வளவு காலமா பிச்சை எடுக்கறே?” எனக் கேட்க, “நெனப்பு தெரிஞ்ச காலத்துல இருந்தே இதாங்க சாமி!” என்றான் பிச்சைக்காரன்.

இந்தப் "பிச்சை" ஓட்டை எவ்வளவு
காலமா வச்சிருக்க? என அவர் மறுபடியும் கேட்க..

எங்க தாத்தா, அப்பான்னு இரண்டு தலைமுறைக்கு முன்னாடில இருந்தே இந்த ஓட்டை வச்சிருக்கோம்.
யாரோ ஒரு மகான்கிட்ட பிச்சை கேட்டப்போ அவர் இந்த ஓட்டைக் கொடுத்து, 'இதை வச்சுப் பொழைச்சிக்கோ- ன்னு குடுத்தாராம் என்றான்.

அந்த துறவி  “அடப்பாவிகளா! மூணு  தலைமுறையா இந்த ஓட்டை வச்சு பிச்சைதான் எடுக்கறீங்களா?” எனக் கோபமாக கேட்க..

பிச்சைக்காரனுக்குப் புரியவில்லை.

துறவி அமைதியாக அந்தப் பிச்சை ஓட்டை ஒரு சிறு கல்லினால் சுரண்டத் தொடங்கினார்.

பிச்சைக்காரன் துடிதுடித்துப் போனான்.
“சாமி..! எங்கிட்ட இருக்கற ஒரே சொத்து
அந்த ஓடுதான். நீங்க பிச்சை போடாட்டியும்.... பரவால்ல. அந்த ஓட்டக் குடுத்துடுங்க சாமீ..!” என பரிதாபமாக கேட்க...

துறவி சிரித்துக் கொண்டே மேலும் வேகமாக அந்த ஓட்டை சுரண்ட தொடங்கினார்.

பிச்சைக்காரன் அழுதான். அங்கலாய்த்தான்.
“ராசியான ஓடு சாமி! மகான் கொடுத்த ஓடு சாமி. அதை சுரண்டி உடைச்சிடாதீங்க சாமி” என அலறினான்.

துறவியோ ஓட்டைச் சுரண்டிக்கொண்டே இருந்தார். சுரண்டச் சுரண்ட, அந்த ஓட்டின் மீதிருந்த கரியெல்லம் உதிர்ந்து...

மெள்ள மெள்ள...

மஞ்சள் நிறத்தில் பளீரிட்டுப் பிரகாசிக்க துவங்கியது தங்கம்...!

பிச்சைக்காரனின் கண்கள் அகலமாக விரிந்தது. இத்தனை நாள் தங்கத் திருவோட்டிலா பிச்சையெடுத்து தின்றோம். அடக் கொடுமையே என தன்னையே நொந்து கொண்டான்.

ஓட்டின் அருமை தெரியாமல் அதை பிச்சையெடுக்க பயன்படுத்திய தன் முன்னோர்களை காறி துப்பினான்.

பிச்சைக்காரனின் கையில் அந்தத்
தங்க ஓட்டைக் கொடுத்த துறவி மிகவும் வேதனையுடன் சொன்னார்!

“அந்த மகான் கொடுத்தத் தங்க ஓட்டை வச்சுக்கிட்டு இந்த ஊருலேயே பெரிய பணக்காரங்களா இருந்திருக்க வேண்டியவங்க நீங்க கடைசியில, அதை பிச்சை எடுக்க உபயோகப் படுத்திட்டீங்களேடா.?” இனியாவது ஓட்டை வைத்து ஒழுங்காக வாழுங்கடா என்று திட்டிவிட்டு போனார்.

இன்றைய மக்களும் அந்த பிச்சைக்காரன் போல தான். தங்களிடம் இருக்கும் தங்க திரு ஓட்டில் பிச்சையெடுத்து வாழ்கிறார்கள்.

ஓட்டின் மகிமையை என்று உணர்வார்களோ.. அன்றே உயர்வார்கள்.

Thursday, 11 January 2018

அன்பெனப்படுவது யாதெனில்

அன்பை வெளிப்படுத்தும் எதையாவது கொண்டு வாருங்கள் என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியை.

திரும்பி வந்த ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது.

இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது.

மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது.

முதலில் கிளம்பிப்போன மாணவியோ கடைசியில் வெறுங்கையோடு திரும்பி வந்தாள்.

ஏனென்று கேட்டபோது சொன்னாள்...

“நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.

வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.

குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன்...”

அந்த மாணவியை அணைத்துக் கொண்ட ஆசிரியை சொன்னார்:

“அன்பு என்றால் இதுதான்!”

ஒன்றுமே கொடுக்க வேண்டாம். எதையுமே பறிக்காமல் இருந்தால் அதுவே போதும்...

எதையும், யாரையும் காயப்படுத்தாமல் இருப்போமே...

நாம் உலகிற்கு எதையேனும்
கொடுக்க வேண்டுமென
நினைத்தால் அன்பைக் கொடுப்போம்...

ஏனெனில் உலகில் எங்கும் பரவிக் கிடப்பது அன்பு ஒன்று தான்...

ஆனால் உலகம் அதிகமாக ஏங்கிக் கிடப்பதும் அதே அன்புக்காகத்தான்...

அனைவரிடமும் அன்புடன் பழகுவோம்...!!!

#படித்ததில்_பிடித்தது

முட்டை

ஒரு பையன் முட்டை கூடைகளுடன் தன் மிதிவண்டியில் சென்றான்.

போகின்ற வழியில் கல் தடுக்கி மிதிவண்டியுடன் விழுந்துவிட்டான். முட்டைகள் அனைத்தும் உடைந்துவிட்டன.

அப்போது அங்கே மக்கள் கூட்டம் கூடி விட்டது. வழக்கம்போல இலவச உபதேசங்கள். தம்பி பாத்து போக கூடாதா? என்னடா தம்பி கவனம் இல்லாம சைக்கிள் ஓட்டுற.. என்று பல உபதேசங்கள்.

அப்போது ஒரு பெரியவர் அங்கு வந்தார். அடடா... ஒரு சின்ன பையன் இப்படி விழுந்து விட்டானே..!! அவனது முதலாளிக்கு இவன்தானே பதில் சொல்லணும்? என்று எண்ணி எதோ என்னால் முடிந்த உதவி என ஒரு பத்து ரூபாயை அந்த பையனுக்கு குடுத்தார்.

அதோடு "தம்பி இங்கே இருப்பவர்கள் நல்ல மனிதர்கள். உபதேசம் மட்டுமில்ல.. ஆளுக்கு கொஞ்சம் பணமும் தருவார்கள். வாங்கிகொள்' என்றார்.

கூடிநின்ற மக்களும் இவரது பேச்சை கேட்டு அந்த பையனுக்கு பணம் கொடுத்தார்கள்.

முட்டை உடைந்ததைவிட அதிக பணம் சேர்ந்து விட்டது. பையனுக்கு மகிழ்ச்சி. அனைவரும் கலைந்து சென்று விட்டனர்.

அப்போது ஒருவர் அந்த பையனிடம் " தம்பி, அந்த பெரியவர் இல்லேன்னா உன் முதலாளிகிட்டே என்ன பாடு படுவயோ? எனவே அவருக்கு நன்றி சொல்லு என்றார்.

பையன் சிரித்துக்கொண்டே சொன்னான். "அந்த பெரியவர்தான் சார் என் முதலாளியே...!!!"

😂😂😄😄

செயல்

*தையற்காரர் ஒருவர், தனது கடையில் துணிகள் தைத்துக்கொண்டிருந்தார்*.

*அவருடைய மகன் அருகில் இருந்து, அவர் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

*தையற்காரர் ஒரு புதுத் துணியை எடுத்தார்*.

*அதை அழகிய பளபளக்கும் கத்திரிக்கோலால் துண்டுகளாக வெட்டினார்*.

பின்னர் *கத்திரிக்கோலைக் கால் அருகே போட்டுவிட்டு துணியைத் தைக்கலானார்*.

துணியை தைத்து முடிந்ததும்
*சிறிய ஊசியை எடுத்துத் தனது தலையில் இருந்த தொப்பியில் குத்திப் பத்திரப்படுத்தினார்*.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த மகன் அவரிடம் ,
*அப்பா ! கத்திரிகோல் விலை உயர்ந்தது, அழகானது. அதை அலட்சியமாக  காலடியில் போடுகிறீர்கள். ஊசி சிறியது மலிவானது. ஆனால், அதை தலையில் பாதுகாக்கிறீர்களே. அது ஏன்*...?” என்று கேட்டான்.

*நீ சொல்வது உண்மைதான்* என்றார் தையற்காரர் .

*கத்திரிகோல் அழகாகவும்*
*மதிப்புள்ளதாகவும் இருந்தாலும்*,

*அதன் செயல் வெட்டுவது*
*அதாவது பிரிப்பது*!

ஆனால்,
*ஊசி சிறியதாகவும், மலிவானதாகவும் இருந்தாலும் அதன் செயல் சேர்ப்பது*.

*ஒருவருடைய மதிப்பு அவருடைய செயலைக்கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது*.

*அவர் உருவத்தை வைத்து அல்ல*.

*நல்லதையே செய்வோம்*

*நல்லவர்களாக வாழ்வோம்*

Wednesday, 10 January 2018

பொங்கல்

வயலில் உழுதுகொண்டிருந்தார் அந்த விவசாயி.
காளைக்கு கஷ்டந்தெரியக்கூடாதென்பதற்காக
அதனுடன் பேசிக்கொண்டே உழுதார்.

மாடு நீ.. முன்னால போற. மனுஷன் நான்.. பின்னால வர்றேன். பாத்தியா..! இதான் என் தலையெழுத்து. விவாசயத்தொழில்லநீதான் முன்னாடி நான் பின்னாடிதான்.
முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு சொன்னார்.

அடடா.. இந்த மனிதஜாதிதான் எவ்வளவு மேலானது
என்று நினைத்து சிலிர்த்துப்போனது காளை.

விவசாயி தொடர்ந்தார்.
நீயும் நானும் இந்த விவசாயத்தில் கூட்டாளி.

அதனால வர்ற விளைச்சல்ல உனக்கு பாதி எனக்கு பாதி.

காளைக்கு தலைச்சுற்றியது.எவ்வளவு நேர்மை..!
பாதிக்குப்பாதி பங்குதர யாருக்கு மனசுவரும்..!

பாதிப்பாதின்னா எப்படி பங்குவைக்கலாம்?நீ முன்னால போறதால முன்னால கிடைக்குறது உனக்கு. பின்னால கிடைக்குறது எனக்கு. சரியா? என்றார் விவசாயி.

முன்னால வர்றது எல்லாமே எனக்கா..!
பெருமிதமாய் பார்த்தது காளை.

விதைவிதைத்து
நாற்றுநட்டு சிலகாலத்தில் பச்சைப்பசேலென்று மாறியிருந்தது வயல்.
மாட்டுக்கு வாயெல்லாம் எச்சில்.
விவசாயியை பார்த்தது.

முதல்ல வந்த இதெல்லாம் உனக்கு.
இதுல அப்புறமா ஒன்னு வரும்.
அதுமட்டும் எனக்கு.
சரியென்று தலையாட்டியது காளை.

கொஞ்சநாட்களில் நெற்கதிர்கள் குதிரைவால்போல
விளைந்து தரைபார்த்துக்கிடந்தன.

அறுவடைநாள் வந்தது.
முதலில் வந்த வைக்கோல் காளைக்கு.
பின்னர்வந்த நெல் விவசாயிக்கு.

மாடு கோர்ட்டுக்கா போகமுடியும்..?
பாகப்பிரிவினையில் அநீதியுள்ளதென்று பரிதாபமாய் பார்த்தது காளை.
கவலைப்படாதே நெல்லிலும் பங்குதர்றேன்.
அதிலும் நமக்கு பாதிப்பாதி.
சோகத்துடன் தலையாட்டியது காளை.

நெல்லை உலரவைத்து
அரைத்துப்புடைத்ததும்
உமியும் தவிடும் முன்னால் வந்தது.
அது காளைக்கு.
பின்னால்வந்த முத்துமுத்தான அரிசி முழுமையும் மனிதனுக்கு.
இந்த பங்கீட்டிலும் நியாயமில்லையென்று கண்ணீர்விட்டது காளை.

அழுவாதே.இந்த அரிசியிலும் உனக்கு பாதி எனக்கு பாதி.
.. சரியா? என்றார்
விவசாயி.

அதற்கும் சரியென்று தலையாட்டிய அந்த வாயில்லா ஜீவன்,
அரிசியை நோக்கிச்சென்றது.

பொறு.,,,,அரிசியை சோறாக்கி, அதில் முதலில் வருவது உனக்குதான்.
அடுத்துவருவதுதான் எனக்கு.
சோகத்துடன் தலையாட்டியது காளை.

அரிசியை சோறாக்கி வடித்தபோது
முதலில் வந்த சோற்றுக்கஞ்சி காளைக்கு.
அடுத்துவந்த சோறு மனிதனுக்கு.
காளை முரண்டுபிடித்தது.

இந்தமுறை,
முன்னால மனிதனுக்கு
பின்னால மாட்டுக்கு என்று ஒப்பந்தத்தை மாற்றும்படி கெஞ்சியழுதது.

சரியென்று ஏற்றுக்கொண்ட விவசாயி அப்படியே செய்தார்.
பொங்கல் திருவிழா வந்தது.

*முதலில் வந்த *பொங்கல்* மனிதனுக்கு
அடுத்துவந்த பொங்கல் *மாட்டுப்பொங்கல்*
🐃🐂🐄

Tuesday, 9 January 2018

வெங்காயக் கதை

ஒரு ஊர்ல... ஒரு வெங்காயம், ஒரு தக்காளி, ஒரு உருளைக்கிழங்கு, இந்த மூணு பேரும் ரெம்ப திக் ஃப்ரெண்ட்ஸா இருந்தாங்க.
ஒரு நாள் அந்த மூணு பேரும், கடலுக்கு குளிக்க போனாங்க.
அப்போ, சொல்ல சொல்ல கேக்காம அந்த உருளைக்கிழங்கு, கடலுக்குள்ள ரெம்ப தூரம் உருண்டு போனதால மூழ்கி இறந்து போச்சு.
அதை கண்ட தக்காளியும், வெங்காயமும் பீச்சுல புரண்டு புரண்டு அழுதாங்க.
சோகம் தாங்காம இருவரும் வீட்டுக்கு கிளம்பினாங்க.
போற வழியில, வேகமா வந்த ஒரு தண்ணி லாரியில ஆக்ஸிடண்ட் ஆகி தக்காளி நசுங்கி செத்துப் போச்சு.
அதை பார்த்து வெக்ஸ் ஆன வெங்காயம், கதறி கதறி அழுதது. தனியாகி போன வெங்காயம், அழுதுகிட்டே கடவுள் கிட்ட போயி,
"உருளைக்கிழங்கு செத்தப்போ, நானும் தக்காளியும் அழுதோம். இப்ப தக்காளி செத்தப்போ, நான் மட்டும் அழுதேன். ஆனா நாளைக்கு நான் செத்தேன்னா, எனக்குன்னு அழ யாரு இருக்கா...?" ன்னு கேட்டு, "ஓ..." ன்னு அழுதுச்சு.
அந்த வெங்காயம் அழுவதை பார்த்து தாங்கி கொள்ள முடியாத கடவுள், "சரி..., இனிமே நீ சாவும்போது யாரெல்லாம் பக்கத்துல இருக்காங்களோ, அவங்க எல்லாரும் அழுவாங்க" ன்னு சொல்லி அதுக்கு வரம் கொடுத்து அதை சமாதான படுத்தினாராம்.
(ஸோ..., இனிமே யாராச்சும், "வெங்காயம் நறுக்கும்போது, ஏன் கண்ணுல தண்ணி வருது" ன்னு கேட்டா, 'திருதிரு'ன்னு முழிக்காம, சோகமான இந்த திக் ஃப்ரெண்ட்ஸ் கதைய தெரியப்படுத்துங்க)

மேலும் சிறிது காலங்களுக்கு பிறகு மக்கள் சுடு தண்ணீரில் வெங்காயத்தை போட்டு அழாமல் தப்பித்து வந்தனர்.
இதை பார்த்து வெங்காயத்துக்கு கோபம் வந்தது. கடவுளிடம் சென்று முறையிட்டது.
கடவுள் கோபம் கொண்டு மக்களுக்கு சாபம் இட்டார். "இனிமேல் வெங்காயம் வாங்கும் போதே மக்கள் கண்ணீர் விடுவார்கள்" என்று. 🤣🤣🤣🤣