#வரம்_ஆன்மீககதை
அடர்ந்த கானகத்தின் நடுவில் சக்தி வாய்ந்த முனிவர் ஒருவர்
தவம் செய்து வந்தார். அவருக்கு ஒரே ஒரு துணை. அது ஒரு நாய்!
-
முனிவர் பக்கத்திலேயே அது இருக்கும். அவர் தவம் செய்யும்
போது அவர் காலடியில் வந்து உட்கார்ந்து கொள்ளும். முனிவர்
சாப்பிட்டு மிச்சம் வைக்கும் பழ, காய்களையே அதுவும் தின்றது.
அசைவத்தின் பக்கம் போகக்கூட இல்லை.
-
ஒரு நாள், பயங்கரமான சிறுத்தை ஒன்று, அந்த நாயை வேட்டையாடத்
துரத்தியது. நடுங்கிப் போன நாய், முனிவரின் கால்களில் விழுந்து
கதறியது.
-
கவலைப்படாதே. நீ என குழந்தை மாதிரி. நான் உன்னைக்
காப்பாற்றுகிறேன். இந்த விநாடியே நான் என் மந்திர சக்தியால்
உன்னையும் ஒரு சிறுத்தையாக, அந்த சிறுத்தையை விட பலம்
மிகுந்த சிறுத்தையாக மாற்றி விடுகிறேன்’ என்றபடி கண்களை மூடி
மந்திரத்தை உச்சரித்தார்.
-
அடுத்த விநாடி, அந்த நாய், சிறுத்தையாக மாறிற்று. துரத்தி வந்த
சிறுத்தை, துண்டைக் காணோம், நாயைக் காணோம் என்று ஓடிற்று.
ஒரு வாரம் ஆயிற்று. ஒரு பெரிய புலி அந்த பக்கம் வந்தது.
ஆசிரமத்தில் இருந்த சிறுத்தையைப் பார்த்துப் பசியுடன் துரத்தியது.
வழக்கம் போல் முனிவரைத் தஞ்சமடைந்தது. முனிவர் இப்போது
சிறுத்தையைப் புலியாக மாற்றினார். அப்புறம் என்ன? இந்தப் புலியைக்
கண்டதும், வந்த புலி ஓடிப் போயிற்று.
-
உருமாற்றம் அடைந்த புலியோ இப்போது பழம், காய்களை
சீண்டுவதில்லை. மெதுவாக முயலில் ஆரம்பித்து மான், பன்றி என்று
ரகசியமாக வேட்டையாட ஆரம்பித்தது.
அப்புறம் மதம் கொண்ட யானை ஒன்று புலியைப் பந்தாட வர,
நம் புலி, முனிவர் தயவில் யானையாக மாறி சேறு, ஆறு என்று ஜாலியாக
அலைந்து ஆசிரமம் பக்கம் கூட எப்போதாவதுதான் வந்தது.
-
கொஞ்ச நாள் கழித்து பெரிய சிங்கம் ஒன்று யானையைக் கொல்ல
விரைந்து வந்தது. இப்போதும் முனிவர் அருளால் யானை சிங்கமாக
மாறியது.
-
அத்துடன் அதற்குப் பிரச்னை ஓய்ந்ததா என்றால் அது தான் இல்லை.
அடுத்த வாரமே மிகுந்த வல்லமை கொண்டதும், எட்டுக் கால்களை
உடையதும், எல்லா மிருகங்களை வேட்டையாடக் கூடியதுமான சரபம்
என்னும் மிருகம் அந்தப் பக்கம் வந்தது. சிங்கத்தைக் காலி செய்யத் துரத்தியது.
-
இப்போதுதான் சிங்கத்துக்கு முனிவரின் நினைவு வந்தது. காப்பாற்றுங்கள்,
காப்பாற்றுங்கள் என்று ஓடிப் போய்க் கெஞ்சியது.. வழக்கம் போல் முனிவர்,
அதை சரபமாக மாற்றினார்.
-
சரபமாக மாறிய நாய், காட்டையே கலக்க கலக்க ஆரம்பித்தது. கண்ணில்
பட்ட மிருகங்களை எல்லாம் துரத்தித் துரத்திக் கொன்றது. தின்றது. காட்டு
உயிரினங்கள் எல்லாம் ஓடி ஓளிந்தன. தவித்தன. பயந்தன. மிரண்டன.
-
இப்போதும் ஆபத்து வந்தது. சரபத்துக்கு அல்ல, முனிவருக்கு.
ஆம். தனக்கு வரம் தந்த முனிவரையே கொன்று விட விரும்பியது சரபம்.
-
ஏன்?
-
காட்டில் உள்ள எல்லா மிருகங்களும் என்னைக் கண்டு நடுங்குகின்றன.
பயந்து ஓடுகின்றன. என்னிடம் அஞ்சும் மிருகங்கள், அந்த முனிவரைச்
சரணடைந்தால் அவரும் பழக்க தோஷத்தில் எல்லா மிருகங்களையும்
சரபமாக மாற்றிவிட்டால் என்ன செய்வது? எனவே அந்த முனிவரைப்
போட்டுத் தள்ளிவிட்டால் நான் மட்டுமே சரபமாக இருப்பேன் என்று
கொக்கரித்த சரபம், முனிவரைக் கொல்ல நெருங்கியது.
-
எல்லாம் வல்ல முனிவருக்கு இந்த நாயின், சரபத்தின் எண்ண ஓட்டம்
தெரியாதா என்ன? வந்ததே கோபம் அவருக்கு. ஓடி வந்த சரபத்தைப்
பார்த்து ஒரு மந்திரத்தை உச்சரித்தார்.
-
அவ்வளவுதான், அடுத்த விநாடியே அந்த சரபம், பழையபடி நாயாக,
சோதா நாயாக மாறிற்று.
இந்தக் கதை சொல்லும் நீதி என்ன?
பாத்திரம் அறிந்து பிச்சை போடு!!!
No comments:
Post a Comment