Monday, 15 February 2021

சாது

ஆற்றில் படகு சென்று கொண்டிருந்தது. அதில் பயணித்த இளைஞர்கள் படகில் இருந்த சாது ஒருவரைக் கேலி செய்தனர். 

அவர் சூரிய பகவானின் பக்தர். அளவுக்கு மீறியதால் சாது எச்சரிக்கும் நோக்கில் பார்த்தார். இதைக் கண்ட ஒரு வாலிபன் கிண்டலாக, உழைக்கப் பயந்த சோம்பேறி மனுஷனான உனக்கு என்ன வீராப்பு வேண்டிக் கிடக்கு!

 என்று சொல்லி அடிக்கப் பாய்ந்தான்.சாதுவின் கண்கள் கலங்கிவிட்டன. அப்போது சூரியபகவான் அசரீரியாக, என் அருமை சாதுவே! நீ கட்டளையிட்டால் இந்த படகையே கவிழ்த்து விடுவேன்! என்றார். இதைக் கேட்ட இளைஞர்கள் பயந்து போனார்கள்.

ஆனால் சாதுவோ,செங்கதிரோனே! எல்லோரையும் காப்பாற்ற வேண்டிய நீயா இப்படி சொல்வது? செய்வதாக இருந்தால் இவர்களின் புத்தியை நல்வழிப்படுத்து. படகைக் கவிழ்ப்பதால் யாருக்கும் பயன் இல்லை! என்று பிரார்த்தித்தார்.உடனே சூரிய பகவான் பேசினார். சாதுவே! 

மிக்க மகிழ்ச்சி. உன்னைச் சோதிக்கவே அப்படி சொன்னேன். உன் நல்ல உள்ளத்தை மற்றவர் புரிந்து கொள்ள வேண்டும் அல்லவா? உனக்கு எப்போதும் என் அருள் உண்டு. நீ விரும்பியது போல, இவர்களுக்கு நல்ல புத்தியையும் அளித்தேன், என்றார்.மென்மையான போக்கு தான் மனிதனை வாழ வைக்கும்.

 பழி வாங்குதலும், கோபமும் மனிதனை மிருகமாக்கி விடும்.- கு. சிவஞானம்

No comments:

Post a Comment