*கழுகு* ஒன்று மரத்தின் மேல் அமர்ந்தபடி தன்னுடைய பெருமைகளை மனதிற்குள் அசைபோட்டுக் கொண்டிருந்தது.
'எத்தனை கூரிய நகங்கள் எனக்கு? எந்தக் கடினமான தோலையும் கிழித்து விடுவேனே!'
'எத்தனை கூர்மையான பார்வை எனக்கு? எவ்வளவு உயரத்தில் பறந்து கொண்டு இருந்தாலும் தரையில் ஊர்ந்து செல்லும் ஒரு சிறிய எறும்பைக் கூட என்னால் காண முடியுமே!'
'எத்தனை வலிமையானவை என் சிறகுகள்? அவற்றைக் கொண்டு வானத்தைத் தொட்டபடி உலகின் எந்த மூலைக்கும் விரைந்து பறப்பேனே!'
- என்றபடியெல்லாம் மனதில் அசைபோட்டுக் கொண்டிருந்தது!
தரையில் நடந்து கொண்டிருந்த ஒவ்வொரு ஜீவனையும் அலட்சியமாகப் பார்த்து, கேலியாகச் சிரித்தது.
அப்போது, அந்த வழியாக *யானை* ஒன்று நடந்து வந்தது. 🐘
யானையைப் பார்த்ததும் அதன் கேலிச் சிரிப்பு அதிகமாயிற்று.
யானைக்கு ஒன்றும் புரியவில்லை. குழப்பமான, கண்களால் கழுகை ஏறிட்டது.
கழுகு சொன்னது;
"தரைவாழ் உயிர்களிலேயே நீதான் பெரிய மிருகம்னும் , பலசாலின்னும் சொல்றாங்க. ஆனாலும் என்னை மாதிரிப் பறக்க முடியாதே!
தரையிலேயே பிறந்து, தரையிலேயே வளந்து , தரையிலேயே சாகப்போற உனக்கு எதுக்கு இந்த பலசாலிங்குற பட்டம் ?
உயரத்தில் பறந்து திரியும் நான்தான் உண்மையிலேயே உயர்வான ஜீவன்" என்றது.
யானை அமைதியாய்ப் பதிலளித்தது;
"நான் தரையில் திரிந்த போதும் என் கண்கள் வானத்தை (பரலோகத்தை) நோக்கியபடிதான் நான் பிளிறுவேன்.
நீயோ உயர்ந்த வானத்தில் சஞ்சரித்தாலும் உன் கண்கள் (பூமியில்) குப்பையில் கிடக்கும் அழுகிப்போன பிணத்தைத்தானே தேடுகின்றன?
நாம் எவ்வளவு உயரத்தில் இருக்கிறோம் என்பதிலல்ல, நாம் எதன் மேல் நோக்கமாய் இருக்கிறோம் என்பதில்தான் உயர்வு இருக்கிறது" என்றது.
கழுகு வெட்கிப் பறந்து போனது!
📖
'அகந்தை' வந்தால் இலச்சையும் வரும்:
'தாழ்ந்த சிந்தை' யுள்ளவர்களிடத்தில் *ஞானம்* உண்டு.
(நீதிமொழிகள் 11:2).
🙏🏻
_____________________________
No comments:
Post a Comment