Friday, 9 October 2015

புண்ணியவான் ...

ஒரு ஓடக்காரன் இருந்தான். ஆற்றைக் கடக்க கொள்ளைப் பணம் வசூலிப்பான்.
மக்கள் எல்லோரும் திட்டுவார்கள். அதையெல்லாம் அவன் கண்டு கொள்ள மாட்டான். மக்களும் வேறு வழியின்றி அவன் கேட்கிற பணத்தைக் கொடுத்து ஆற்றைக் கடந்து செல்வார்கள்.
அவனுக்கு அந்திமக் காலம் வந்தது. மக்கள் தூற்றினார்கள். இவனுக்கு நற்கதியே கிடைக்காது என்று.
இறக்கும் தருவாயின் தன் மகனை அழைத்தான்.
மகனே, நான் உயிரோடு இருக்கையில் செய்த செயல்களுக்காக இப்பொழுது வருத்தப்படுகிறேன்.
மக்கள் ஒருவரும் என்னை நல்லவிதமாகச் சொல்லியதே இல்லை. ஏச்சும் பேச்சும்தான் கேட்டிருக்கிறேன்.
இறந்த பின்னராவது மக்கள் என்னை நல்ல விதமாகப் பேசும்படி செய்." என்று கூறி உயிர்விட்டான்.
மகனும் யோசித்தான். தந்தை பார்த்த தொழிலையே அவனும் செய்து கொண்டு, ஆனால் தந்தையை விட இரண்டு மடங்கு பணம் வசூலித்தான்.
இப்பொழுது மக்கள் சொன்னார்கள்,
"இவனுக்கு இவன் தந்தை எவ்வளவோ மேல். பாவம் புண்ணியவான் அதுக்குள்ள போய்ச் சேர்ந்துட்டான்." என்று..!

~*~

No comments:

Post a Comment